சனி, 30 ஜூலை, 2016

சூடிக்கொடுத்த சுடர்கொடிக்கு ஆடிப்பூரத் திருவிழா!


தான் சூடிய மாலையை எம்பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்து சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் என அழைக்கப்பட்ட ஆண்டாள், மகாலட்சுமியின் அம்சமாக துளசி மடத்தின் கீழே அவதரித்தவள். புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் துலாம் லக்னத்தில் அந்த அவதாரம் நிகழ்ந்தது.  பெரியாழ்வாரின் மகளாக வளர்க்கப்பட்ட ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு கண்ணனுக்காக, திருப்பாவை 30 பாடல்கள், நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் என உளம் நெகிழ்ந்து பாடியுள்ளாள்.  ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.  திருமகளின் அம்சமாகப் பிறந்த ஆண்டாள், பங்குனி உத்திரத்தில் வாரணம் ஆயிரம் புடை சூழ பெருமாளை மணந்தாள். அந்த  ஆண்டாள்-ரங்கமன்னாரின் திருமண வைபவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார்(ஆண்டாள்) கோயிலில் 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 1ம் தேதி வேத, மந்திரங்கள் ஒலிக்க அடியார்கள் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் பாட, கொடிமரத்தில் காலை 8:30 மணியில் இருந்து 9:30 மணிக்குள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. ஆண்டாளும் ரங்கமன்னாரும் பிரத்யேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அன்று இரவு அவ்விருவரும் அலங்கரிக்கப்பட்ட பதினாறு வண்டிச் சப்பரத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வருவர். விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, இரவு வீதியுலா நடைபெறும்.

வீதியுலாவின் போது திரளான பக்தர்கள் தொடர்ந்து செல்வர்.

இரண்டாம் நாள் காலை 8:30 மணிக்கு ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் சந்திர பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா வருவர். 



மூன்றாம் நாள் விழாவில் காலை 8:30 மணிக்கு முந்தைய நாள் போலவே ஆண்டாளும், ரங்கமன்னாரும் வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் தங்கப் பரங்கியிலும் ரங்கமன்னார் அனுமார் வாகனத்திலும் வலம் வருவர்.

நான்காம் நாளன்றும் காலை 8:30 மணிக்கு அதேபோல வீதியுலா. ஆடிப்பூரத்தின் ஒவ்வொரு நாளும் வீதியுலாவின் போது அந்த ஊரே விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ரங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருவர். ஒவ்வொரு நாளின் வீதியுலாவின் போதும் ஆண்டாள்-ரங்கமன்னாரைத் தொடர்ந்து நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஐந்தாம் நாள் காலை 9 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெறுவதாக ஐதீகம். இந்த வைபத்தைக் காண திரளான பக்தர்கள் வந்து பக்தி பரவசம் அடைவர். அன்று இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்கமன்னார் பெரிய பெருமாள் வாகனத்திலும் சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன் பெரியா திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வீதியுலா வருவர். ஐந்தாம் நாள் வாகன வீதியுலாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். பெண்கள் ஒன்று கூடி கண்ணன் பாடல்களை பாடிக் கொண்டு கோலாட்டம் ஆடி மகிழ்வர். 

ஆறாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரங்கமன்னார் யானை வானகத்திலும் எழுந்தருளி வலம் வருவர்.

ஏழாம் நாள் ஆண்டாள்-ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியான் அலங்காரத்தில் வீதி விடையாத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவர். இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு 8 முதல் 11 மணி வரை கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலத்தில் காட்சியளிப்பார். இந்த அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.  

எட்டாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் வீதியுலா வருவர்.  இரவு ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும் ரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர். இரவு 11:30 மணியில் இருந்து 12:30 மணிவரை திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெறுகிறது.

 ஒன்பதாம் நாள் காலை பெருமாளுக்கும் தேவிக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். காலை 5 முதல் 6 மணிக்குள் கடக லக்னத்தில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுவர். தமிழகத்திலேயே திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8:05 மணிக்கு பக்தர்கள் ‘‘கோவிந்தா! கோவிந்தா!’’ என்று விண்ணைத் தொடும் கோஷத்துடன் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெறும். தேர் சக்கரங்கள் பூமியில் பதிந்து விடாதபடி அது செல்லும் வழியில் இரும்பு தகடுகள் போடப்பட்டிருக்கும்.
 
தேரில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் சேர்ந்து வரும் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். திரளான பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் கூட்டம், கூட்டமாக வந்து ஆண்டாள்-ரங்கமன்னாரை தரிசனம் செய்வர்.



பத்தாம் நாள் மாலை 5 மணிக்கு இரட்டைத்தோளுக்கினியானில் ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அவதாரம் பட்டர்களால் வாசிக்கப்படும்.
பதினொன்றாம் நாள் காலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் புறப்பாடாகி நான்கு ரத வீதிகளில் உலா வருவர். இரவு மூலஸ்தானத்தில் சேர்த்தியாவர்.

பனிரண்டாம் நாள் காலை உற்சவ சாந்தியோடு விழா நிறைவடையும். மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரங்கமன்னார் தம்பதிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். விழாவின் ஒவ்வொரு நாளும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அடியார்களால் பாடப்பெறும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக