செவ்வாய், 26 ஜூலை, 2016

வீடு-மனை யோகம் தரும் பூமிநாதர்!

 
 

தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் பாடாய்ப்படுத்தி, அவர்களின் நித்தியப்படி வாழ்க்கையைக் குலைப்பதில் இந்த அசுரர்களுக்கு அப்படியென்ன பொல்லாத சந்தோஷமோ... தெரியவில்லை. அந்தகன் எனும் அசுரனும் இதற்கு விதிவிலக்கு அல்ல!



தேவர்கள் கதறினர்; முனிவர்களும் ரிஷிகளும் தவம் கலைந்துபோனதை நினைத்து வருந்தினர். மக்களும் நிம்மதியற்றுப் புலம்பினர். அனைவரும் அடைக்கலம் தேடிப் பிரார்த்தித்தது... சிவப்பரம்பொருளிடம்!
அவர்களின் துயரத்தைக் கேட்ட சிவனார், தன் சூலாயுதத்தால் அவனை அழித்தார். அப்போது சிவனாரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளி ஒன்று கீழே விழ... அதில் இருந்து சிவகணம் ஒன்று வெளிப் பட்டது. 'மூவுலகையும் எரிக்கவும் அழிக்கவுமான வரத்தைத் தந்தருளுங்கள்’ என சிவகணம் வேண்ட, அந்த வரத்தைத் தந்தருளினார் சிவபெருமான்.


உடனே அந்தச் சிவகணம், 'பூமியை விழுங்கமுடிகிறதா எனப் பார்ப்போமே’ என யோசித்தது. அதன்படியே, அது மொத்த பூமியையும் விழுங்க முற்படும் வேளையில், பதறியடித்து ஓடி வந்த தேவர்கள், சிவகணத்தைத் தடுத்து நிறுத்தினர்; குப்புறத் தள்ளினர். அப்போது அங்கே தோன்றிய சிவனாரிடம், 'எனக்குப் பசிக்கிறது; உணவு தாருங்கள்’ எனக் கேட்டது, சிவகணம்.


உடனே தேவர்கள், ''அப்படியெனில், பூலோக மக்கள் வீடு கட்டும்போது மனையில் செய்கிற பூமி பூஜையிலும் ஹோமங்களிலும் இடுவதில் உனக்கான உணவும் வந்து சேரட்டும். ஆனால், இந்த பூமியில் உள்ள மக்கள் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு உறுதுணையாக, பக்கபலமாக நீ இருக்கவேண்டும்'' எனக் கேட்டுக்கொள்ள... 'அப்படியே செய்கிறேன்’ என உறுதி தந்ததாம் சிவகணம்! அடுத்து, சிவனார் அதற்கு அருள் வழங்கி, தன்னுள் ஏற்றுக் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம்!



அன்று துவங்கி இன்றளவும் வீடு-மனை வாங்குகிற யோகத்தைத் தந்தருள்கிறார் அந்தச் சிவகணம். ஸ்ரீபிரம்மா மற்றும் தேவர்கள் அந்த சிவகணத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட நாளில்- நேரத்தில் (நாழிகை) சிவகணத்தை விடுவிக்க, அப்போது அந்தச் சிவகணம், மக்கள் தந்திருக்கும் உணவைச் சாப்பிடுவதாகவும் ஐதீகம்! அந்தச் சிவகணத்தின் இன்னொரு பெயர்... வாஸ்து புருஷன்!


இந்த மண்ணுக்கான, பூமியில் கட்ட நினைக்கிற, கட்டுகிற அனைத்துக் கட்டடங்களுக்கான தேவதை வீற்றிருக்கும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு மண்ணச்சநல்லூர் என்றே திருநாமம் அமைந்தது. திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர். சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு. மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது திருக்கோயில்.


இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம்.





அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.


பூமி தொடர்பாக கணவர் சிவனார் உலக மக்கள் அனைவருக்கும் அருள்புரிவதற்கு, அம்பிகையே தாயென இருந்து துணைநின்று, பூமியையும் மக்களையும் காத்தருள்கிறாள். அத்துடன், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் அருளும் வரப்ரசாதியாகவும் திகழ்கிறாள் இந்த அம்பிகை. ஸ்ரீபூமிநாதர், சுயம்புத் திருமேனி. பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கத் திருமேனியில் விழுவதை எண்ணற்ற அன்பர்கள் வந்து தரிசிக்கின்றனர்.


மனை அல்லது நிலம் வாங்குபவர்கள், 'இவ்ளோ காசு- பணம் சம்பாதிச்சு என்ன பயன்? சொந்தமா ஒரு வீடு வாங்கற யோகம் அமைய மாட்டேங்குதே..’ என்று புலம்புவர்கள், இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, அம்பாளையும் ஸ்வாமியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள். அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்ப வர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.


வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்... இங்கே மேடுபூஜை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு சிவனாரைப் பிரார்த்தித்தால், வியாபாரத்தில் குழப்பம், நஷ்டம், பிரச்னைகள் என யாவும் விலகும்; தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் மேடுபூஜையில் கலந்துகொண்டால், 4-வது வாரத்தில் நல்லதொரு மாற்றம் நிகழும் என்கின்றனர்.





இங்கே, வாஸ்து பரிகார பூஜையும்  விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, அந்தப் பிடிமண்ணுடன் பிராகார வலம் வந்து இங்கேயுள்ள மண்டபத்தில் கட்டிவிடவேண்டும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய பிடிமண்ணை துணியில் இருந்து எடுத்து, கோயிலின் வில்வமரத்தடியில் கொட்டி விட்டு வணங்கினால், பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.


பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக்கொண்டு, ஸ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்.


இங்கேயுள்ள முருகனுக்கு பங்குனி உத்திர நாளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தைத் தரிசித்தால், வீடு- மனையில் உள்ள தடைகளைத் தன் வேல் கொண்டு விலக்கியருள்வார் என்பது ஐதீகம்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக