சனி, 30 ஜூலை, 2016

ஆடிப்பெருக்கு!


ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.



மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைத் தேர்வு செய்து கொள்வார்கள்.

அந்த இடத்தை சுத்தம் செய்து, பசுஞ் சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுவத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலை அருளுமாறு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இதனால் நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் வெள்ளமாய்ப் பெருகும் என்ற நம்பிக்கை கொள்கிறார்கள்.



தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைப் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று தயாரித்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உண்பார்கள். ஆடி பதினெட்டாம் நாள் காவிரிப் பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரிக் கரையில் வைத்து நோன்பு நோற்பதும் உண்டு.



காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலைவரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள்.



காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்தபின் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ளும் பெண்கள்.



காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அந்த சமயம், கர்ப்பவதியாக இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய் பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள். வருடம் வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந் நாராயணன்!

ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு. “இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.

தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்

ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவதாக புராணம் சொல்கிறது. அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள். அதை பெருமாள் முன் வைத்து, “உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள்.” என்று காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள். இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

 பூஜை செய்யும் முறை

இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சல், காதோலை கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பழம், பூ, அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சல் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சல் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறை குடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணியத் தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை நாளைப்போலவே ஆடிப்பெருக்கு நந்நாளிலும் மக்கள் புது பொன் நகை வாங்குகிறார்கள். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடி மாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்று சொல்வார்கள். ஆனால், ஆடிப்பெருக்கு நாள் மட்டும் விதிவிலக்காகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக