ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்!


தென்பாண்டிய நாடான திருநெல்வேலியில், வசுசேனன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சாந்திமதி என்பதாகும். செல்வச் செழிப்பு, நாடாலும் உரிமை என புகழ்பெற்று வாழ்ந்தாலும், இந்த தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத குறை இருந்து வந்தது.
அவர்கள் அந்தக் குறை நீங்குவதற்காக சிவபெருமானை தினமும் பூஜித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு முறை சிவபெருமானை பூஜித்த மன்னன், தாமிரபரணி என்ற குளத்தில் நீராடுவதற்காகச் சென்றான். அப்போது அந்த குளத்தில் ஒரு தாமரை மலர் இருந்தது. அந்த மலருக்குள், பார்வதிதேவியார் சங்கு வடிவில் இருந்தார்.

மன்னன் ஆர்வத்தின் மிகுதியால் அந்த சங்கை எடுத்தான். மறு கணமே சங்கானது அழகான பெண் குழந்தையாக மாறியது. மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தையை கையில் ஏந்தியபடி அரண்மனையை சென்றடைந்தான். அந்தக் குழந்தையை மனைவியிடம் காட்டினான். அவளும் குழந்தையின் முகத்தைப் பார்த்து தாய்மையின் உணர்வை அடைந்தாள்.

குழந்தைக்கு இராஜராஜேஸ்வரி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஒருமுறை சிவபெருமான் கட்டளைப்படி சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டி தேவி, இந்தக் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக அமர்ந்தாள். சாமுண்டீஸ்வரியால் வளர்க்கப்பட்ட இராஜராஜேஸ்வரி அம்மையார், சகல கலைகளையும் கற்று தேர்ந்தார்.

மேலும் சதுரங்க ஆட்டத்தில் தன்னை வெல்வார் எவருமில்லை என்ற வல்லமையுடன் சிறப்பாக திகழ்ந்தார். இதனால் வசுசேன மன்னன் தனது மகளை, சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பது என்ற உறுதியை எடுத்துக் கொண்டார். இதற்காக வசுசேனன் தனது மனைவி சாந்திமதி மற்றும் மகள் இராஜராஜேஸ்வரி ஆகியோருடன் திருத்தல யாத்திரை மேற்கொண்டான்.



ஒவ்வொரு ஆலயமாக தரிசனம் செய்து வரும்போது, வழியில் பூவனூர் என்ற இத்திருத்தலைத்தை வந்தடைந்தனர். அனைவரும் ஆலயத்தை தரிசனம் செய்து விட்டு அங்கேயே தங்கியிருந்தனர். அப்போது பூவனூர் பெருமான், ஒரு சித்தர் வேடம் பூண்டு இராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். இருவரின் ஆட்டமும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
இறுதியில் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமான் வெற்றிக் கனியைப் பறித்தார். இதையடுத்து இறைவன் தனது உண்மை வடிவுடன் அனைவருக்கும் காட்சி அருளினார். இந்தக் காட்சியை கண்ட மன்னன் பேரானந்தம் கொண்டான். தனது மகளை, திரு மணம் செய்து தேவியாக ஏற்றுக்கொள்ளும்படி இறைவனிடம் வேண்டினான். பூவனூர் பெருமானும் இராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அருள் புரிந்தார்.



சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும் 64 நாட்டிய நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக புலப்பித்த தலம்.

64 விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள் கொண்டு பஞ்சசக்திகளால் மகரிஷிகள் நவராத்திரி உற்சவத்தை கொண்டாடிய தலம். சுகபிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

காசிக்கு இணையான தலங்களிலும் காசியின் பெயரை கொண்டுள்ள தலங்களிலும் காஸ்ய மாமுனிவர் தன் தவத்தின் ஊடே வந்து செல்வார் என்பது ஐதீகம்.



மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிராது (ப்ராத்தனை) சீட்டு கட்டி 90 நாட்களில் நன்மை பெறுகின்றனர். இது உண்மை.



இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம்.



ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகஸ்தியர் பிரானின் ஆசியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப்பெறுகின்றது.
இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.
காசித்தும்பை போன்று புஷ்பகாசி என்ற அரியமூலிகை புஷ்பம் இங்கு விளைந்த காரணத்தால் இத்தலத்திற்கு புஷ்பகாசி என்ற பெயரும் உண்டு.



புஷ்பகாசி தேவதைகள் புஷ்பங்களை பூவனூரில் இருந்து எடுத்து சென்றுள்ளன. எண்ணற்ற தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த பூவனூரில் அரிய மூலிகை புஷ்பகதிர்சக்தி நிறைந்துள்ளதால், ஒரு மண்டல காலம் தங்கி வழிபடுவதும், தீர்த்தங்களில் புனித நீராடுதலும், பிராணயாமம் ஆற்றுதலும், ஆழ்தலும், ஆழ்ந்து சுவாசித்தலும் சிறந்த யோக சக்திகளை, நல்வரங்களை தருவதாம். உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு ஐந்துமே மிகத்தூய்மை பெறும்.





இக்கோவிலில் அம்பிகை கற்பகவள்ளியோடு, இராஜராஜேஸ்வரியும் மற்றொரு தேவியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.





இராஜராஜேஸ்வரியை சதுரங்க ஆட்டத்தில் இறைவன் வெற்றி கொண்டமையால், சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரை இத்தலத்தில் இறைவன் பெற்றுள்ளார்.



மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் கயிலாயத்தில் மங்களகிரி, புஷ்பகிரியில் உள்ளது போலவே இந்திராதி தேவர்கள் பூவனூரில் வடிவமைத்த அழகியதும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நறுமணப் புஷ்பச்செடி கொடிகளையும் 108 நந்தவனங்களை கொண்டிருந்தமையால் இத்தலத்தில்தான் முதன் முதலில் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் தோன்றினார்.

இத்தலத்தில் ஈஸ்வரன் தன் திருமணத்தில் நடனக்கோலத்தை அருளியமையால், சோமஸ்கந்தர் சன்னதி விளங்குவதற்கு இறைவனே மனமுவந்து அளித்துள்ள சங்கல்பவரம் காரணமாகும். இறைவன் திருவருளால் சோமஸ்கந்தர் சன்னதி முன்னால் அபூர்வமாய் ஒரு நந்தீஸ்வரர் காட்சி தருகின்றார். சோமஸ்கந்தர் சன்னதி முன் நந்தீஸ்வரர் அருள்வது மிக அபூர்வம். இந்த நந்தீஸ்வரர் தான் மங்கள புஷ்ப நந்தீஸ்வரரின் அம்சமாக மகரிஷிகளால் புலப்படுத்தப்பெற்றவர்.



ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது.



அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.


இறைவன் புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.
இறைவி கற்பகவல்லி, இராஜராஜேஸ்வரி.
தல மரம் பலா.
தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்.

‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம்.இத்தலத்தில் நந்திதேவர், தேவர்கள், சித்தர்கள், சிவ கணங்கள், முனிவர்கள் பலரும் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளனர்.


அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் (புஷ்பவன நாதர்) திருக்கோயில்
பூவனூர், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் - 612 803.

பூவனூர் (திருப்பூவனூர்), நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்
சுமார் 3 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.


 

ஒவ்வொரு மாதத்திலும் உகந்த பூக்கள்!

ஒவ்வொரு மாதத்திலும் உகந்த பூக்கள் என்று ஆகமங்கள் சில பூக்களைத் தெரிவிக்கின்றன. அந்தந்த மாதங்களில், அந்தப் பூக்களைக் கொண்டு வழிபடுவது இன்னும் பல நன்மைகளையும் வளங்களையும் சேர்க்கும் .

சித்திரை மாதத்தில் முல்லைப்பூ, கானர்ப்பூ, கடம்பம்பூ, வாழைப்பூ ஆகிய மலர்களுடன் கோங்கு, அறுகு, நாயுருவி, விளா, வில்வம், மருக்கொழுந்து ஆகிய இலைகளைக்கொண்டு பூஜை செய்வதால் செல்வச்செழிப்பு ஏற்படும். இம்மாதத்தில் மலர் வகை யாவுமே தனிச்சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.
வைகாசி மாதத்தில் அரளி, செந்தாமரை, பாதிரி, நெருஞ்சில், சிறுவழுதலை, செவ்வந்தி ஆகிய மலர்களுடன் வன்னி, அறுகு, நாயுருவி, நொச்சி, விளா, வில்வம் ஆகிய இலைகளைக்கொண்டு பூஜை செய்வதால் சிவலோக முக்திநிலை கிட்டும். இம்மாதத்தில் இலை வகைகள் தனிச்சிறப்புமிக்கதாக ஆகமங்களில் கூறப் படுகிறது.

ஆனி மாதத்தில் கடம்பம், சிவப்பு செண்பகம், தாமரை, பாதிரி, காக்கரட்டான் ஆகிய பூக்களும் இம்மாதத்தின் விசேஷ அபிஷேகத் திரவியமான புஷ்போதகத்திற்காக (மலர்கள் ஊறிய நீர்) சொல்லப்பட்டுள்ள புன்னை, நாகமல்லி, நந்தியாவட்டம், கருஊமத்தம்பூ, வெள்ளெருக்கம்பூ, மகிழம்பூ ஆகியவையுமாகும். இவற்றால் அபிஷேகித்தும், அர்ச்சித்தும் எண்ணிய பலன்களைப் பெறமுடியும். இம்மாதத்தில் பழவகைகள் தனிச்சிறப்புமிக்க பலனைத் தருவனவாகும். எனவே பழமாலைகளை அணிவிப்பது சிறப்பானது.

ஆடி மாதத்தில் அலரிப்பூ, ஊமத்தம்பூ, கருங்குவளை, தும்பைப்பூ ஆகியவற்றுடன் வில்வ இலை சேர்த்து அர்ச்சித்தால் எதிர்ப்பு நீங்கும்; எதிரிகள் அழிவர். இம்மாதத்தில் பாலாபிஷேகம்; பால்பாயசம், திரட்டுப்பால், பால்பலகார வகை நிவேதனம் ஆகியவை தனிச்சிறப்பு பெறும்.

ஆவணி மாதத்தில் விஷ்ணுகிராந்தி, காக்கரட்டான்பூ, மல்லிகை, புன்னைப்பூ, சண்பகப்பூ, முல்லை மலர் ஆகியவற்றுடன், ஆலமரத்தளிர் இலைகொண்டும் அர்ச்சித்தால் மண்ணுலகில் மட்டற்ற மகிழ்ச்சியை அடையலாம்.

புரட்டாசி மாதத்தில் தேவதாருமரப்பூ, விஷ்ணுகாந்தி, பொன்னூமத்தம்பூ, வெள்ளெருக்கம்பூ, தாமரைப்பூ ஆகிய வற்றுடன், சிறுசெண்பக இலை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வச்சேர்க்கை ஏற்படும்.

ஐப்பசி மாதத்தில் வெள்ளைநிற சங்குப்பூ, வில்வப்பூ, சிறுவழுதலைப்பூ, சரக்கொன்றைப்பூ, மகிழம்பூ, பட்டிப்பூ, முல்லைப்பூ ஆகியவற்றுடன் தாமரை இலை சேர்த்து அர்ச்சித்தால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நால்வகை புருஷார்த்தங்களையும் அடையலாம்.

கார்த்திகை மாதத்தில் குடமல்லி, கரு நெய்தல், மல்லிகைப்பூ, வில்வப்பூ, பொரசம்பூ, பாக்குப்பூ ஆகியவற்றுடன் குருக்கத்தியிலை கொண்டு பூஜைசெய்தால், பிராம்மணரைக் கொன்ற தோஷம் முதல் சகலதோஷமும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் தும்பைப்பூ, வெள்ளருகு, வெண்தாமரை, செந்தாமரை, அறுகுநுனி கொண்டு அர்ச்சனை செய்வதால் வீடுபேறு எனும் மோட்சம் பெறலாம்.

தை மாதத்தில் ஒற்றை நந்தியாவட்டம், அடுக்கு நந்தியாவட்டம், தாமரைப்பூ ஆகியவற்றுடன் நாயுருவியிலை கொண்டு அர்ச்சனை செய்தால் வெகுகாலம் வாழ்வதற்கான ஆயுள்விருத்தி உண்டாகும்.

மாசி மாதத்தில் வெண்தாமரைப்பூ, மருதாணிப்பூ, சரக்கொன்றைப்பூ, மல்லிகைப்பூ, பொன்னூமத்தம்பூ எனும் சிவமல்லிகை ஆகியவற்றுடன் துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் அனைத்து பிணிகளும் நீங்கப்பெற்று நல்ல ஆரோக்கியம் ஏற்படும்.

பங்குனி மாதத்தில் தாமரைப்பூ, காசித் தும்பைப்பூ ஆகியவற்றுடன் நாகவல்லி எனும் வெற்றிலையைக்கொண்டு அர்ச்சனை செய்வதால் ஐஸ்வர்யம் உண்டாகும்.



 

மயிலை பங்குனி பெருவிழா!




மயிலை கபாலீச்சரமும் தெப்பக்குளமும் 

வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் 



அதிகார நந்தி வாகனத்தில் கபாலி  

கபாலி மீது பூத்தூவும் கந்தர்வன்  
கந்தருவி வாகனத்தில் கற்பகாம்பாள் 

கந்தருவன் வாகனத்தில் சிங்காரவேலர் 
வெள்ளி ரிஷபத்தில் சண்டேசர் 


புருஷா மிருக வாகனத்தில் கபாலி 
சிம்ம வாகனத்தில் அம்மை 


வேங்கை வாகனத்தில் வேலவர் 

மயிலாப்பூர் தேரோட்டம் 
கற்பகாம்பாள் தேர் 

திருச்செந்தூர் ஆவணி திருவிழா!

 

 
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் ஆவணி திருவிழா முக்கியமானது. வித்தியாசமானது.

சண்முகர் வருடத்தில் காணும் இரு பிரம்மோச்சவத்தில் 7, 8 ம் திருநாட்களில் 7ம் திருநாள் அதிகாலையில் கருவறையை விட்டு வெளி வந்து சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் வெற்றிவேர் சப்பரத்தி பிள்ளையன் மண்டபத்திற்கு வருவார். அங்கு அவருக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெறும்.
 
அதன் பின்னர் சண்முகருக்கு சிவப்பு பட்டு, சிவப்பு நிற புஷ்பங்களால் அலங்கரித்து தங்க சப்பரத்தில் எழுந்தருளுவார் மாலை 3 மணி சுமாருக்கு. இதை சிவப்பு சாத்தி என்பார்கள்..  எட்டு மாடவீதிகளில் வலம் வந்து சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு வர நடு நிசி 2 மணி ஆகும்..



8-ம் நாள் அதிகாலை அந்த அலங்காரம் களைக்கப்பட்டு மற்றுமொரு சிறப்பு அபிஷேகத்திற்குப் பிறகு வெண்பட்டு , வெள்ளை நிறப்பூக்களால் அலங்கரிப்பார்கள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுவார் சண்முகர். எட்டு வீதிகளியும் சீக்கிரம் வலம் வருவார் சண்முகர்.



அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவனை தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்று கூறுகிறார்கள்!

பின்னர் அந்த அலங்க்காரம் களைகப்பட்டு. வெகு வெகு விமரிசையாக அபிஷேகம் அவருக்கு நடைபெறும்.



அதன்பின்  சண்முகருக்கு பச்சை பட்டு பச்சை நிறப்புஷ்பங்களால் அலங்காரம் செய்வர். பகல் 11 மணி அளவில் எட்டு திருவீதிகளிலும்  உலாவருவார் சண்முகர். இம்மூன்று தரிசனங்களுமே கண்கொள்ளா காட்சியாகும் .



இந்த சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி விழா மற்ற தலங்களில் காண இயலாதது.

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என்பது மும்மூர்த்திகளை பிரதிபலிக்கும் விழாவாகும். அதாவது முருகப் பெருமான் இத்தலத்தில் சிவன், பிரம்மா, பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும்.



அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும்.



சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும்.



வெள்ளை சாத்தி நடக்கும் தினத்தன்றே மாலையில் பச்சை சாத்தி வரும்.

அதை பார்த்தாலே வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும்.
எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு.

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மும்மூர்த்திகள் உலா வரும் ஆவணித் திருவிழாவை கண்டு களிப்பது பக்தி மட்டுமல்ல பலனும் தரக்கூடியதாகும்.






 

சனி, 27 ஆகஸ்ட், 2016

கோலாதேவி ஸ்ரீ கருடஸ்வாமி ஆலயம்!

 
சதாசர்வ காலமும்  ஸ்ரீ  மஹாவிஷ்ணுவோடு இருந்து கொண்டு, அவருக்கு அணுக்கத் தொண்டராகப் பணியாற்றும் ஸ்ரீ  கருடாழ்வார்  பரமபதத்தில் பகவானுக்கு அருகில் இருக்கும் அனந்த, கருட, விஷ்வக் சேனர் என்ற மூன்று நித்ய சூரிகளில் ஒருவராக  வழிபடப்படுகிறார். பறவைகளுக்கு அதிபதியான கருடனையும், நாகங்களையும் வழிபட்டு போற்றுவதற்கென்றே கருட பஞ்சமி மற்றும் நாக சதுர்த்தி ஆகிய இரண்டு முக்கிய நாட்களை விரத நாட்களாக நாம் அனுஷ்டிக்கிறோம்.



நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றன. சிரவண (ஆவணி) மாதம் அமாவாசையைத் தொடர்ந்து வரும் சுக்ல பட்ச பஞ்சமி நாளே  கருட பஞ்சமியாகும். பல மாநிலங்களில் இதற்கு முந்தைய  நாளான சதுர்த்தியை நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர். ஒரு  சில இடங்களில் கருட பஞ்சமி நாளன்றே  நாகபஞ்சமி என்ற, சர்ப்பங்களைப் போற்றி  வழிபடும் சிறப்பான நாளையும் சேர்த்தே கொண்டாடுகின்றனர்.



கச்யப முனிவரின் பத்னி  விநதைக்கு மைந்தனாக அவதரித்த கருடன்  வைநதேயன் என்று அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆடி மாத சுவாதி  நட்சத்திரத்தைஸ்ரீ கருட ஜயந்தி நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்த “திருவாடி சுவாதி’’ நாளன்று  வைணவ ஆலயங்களில் கருடனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் கருவறைக்கு  நேர் எதிரே கருடாழ்வாருக்கு  என்று  சிறிய தனிச்சந்நதி அமைந்துள்ளதைப் பார்க்கலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை, பிரம்மோற்சவம் மற்றும் பிற உற்சவங்களின்போது நடைபெறும் கருடசேவைகளும்  கருட பகவானின் முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகின்றன. சிறிய திருவடியான அனுமனுக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள்  இருப்பினும், கருடனுக்கு என்று தனியே ஆலயங்கள் மிக மிக அரிதாகவே உள்ளன.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில்  சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை கருடன் காவு என்கின்றனர். பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூர்ணமான குணம் ஏற்படும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே  அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.



இதே போன்று கருட பகவானுக்குரிய அரிய ஆலயம் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் வட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கருட ஸ்வாமி ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி, பிரதான நுழைவாயிலாக இந்த கிராமம் இருந்தபடியால் (மூல வாயில்) இதற்கு மூலபாகிலு என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே முல்பாகல் என்று மருவிவிட்டதாம்.



இந்த கோலாதேவி கிராமத்தில் ஸ்ரீ  கருட பகவான் எழுந்தருளியிருப்பதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி ஸ்ரீ கருடஸ்வாமி ஆலயத்தைஸ்ரீ  ராமானுஜர்  பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.



சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு  ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்தக் கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.



மஹாபாரத காலத்தில் காண்டவ வனத்தை அர்ச்சுனன்ஸ்ரீ கிருஷ்ணரோடு எரித்து அழித்தபோது, அங்கு தங்கியிருந்த தட்சகன் என்ற பாம்பு அர்ச்சுனனுக்குச் சாபமிட, அர்ச்சுனன் சர்ப்ப தோஷத்தினால் பீடிக்கப்பட்டானாம்.  முனிவர்கள் அர்ச்சுனனிடம் கருட பூஜை செய்யும் படி அறிவுறுத்த அர்ச்சுனன் கருட பகவானை அணுக, அவரோ மஹாவிஷ்ணு தனக்கு ஆணையிட்டால்  மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று கூறிவிட்டார். பகவானும் கருடனுக்கு அனுமதி தர, கருட பகவானோ தன் இரு புஜங்களின் மீதும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் தாயாரும் அமர்ந்து, ராமர் போன்றே வில் அம்பு ஏந்தி காட்சி தந்தால் மட்டுமே தான் அர்ச்சுனனின் பூஜையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாராம்.



அர்ச்சுனனுக்கு உதவும் பொருட்டும், கருடனின் வேண்டுகோளுக்கிணங்கியும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், தாயாரும் கருடனின் கரங்களில்  அவர் கேட்டுக் கொண்டபடியே காட்சி தந்தனராம். மேலும் கருடபகவான் சந்நதிக்கு வடபுறம் அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த அனுமன் சந்நதியை நோக்கியே கருட ஸ்வாமியும், அவரது வலக்கரத்தில் உள்ளஸ்ரீ  மஹாவிஷ்ணுவும் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
கலியுகத்தில் ஜடாயுவே கருட பகவானாக இத்தலத்தில்  குடி கொண்டுள்ளதாக உள்ள ஐதீகத்தின்படி, பிற்காலத்தில்  ப்ருகு மஹரிஷிஸ்ரீ கருடபகவானுக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.



இங்கு ஆலயக் கருவறையில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக ஸ்ரீ கருடஸ்வாமி எழுந்தருளி யிருக்கிறார்.



வலக்காலை பின்புறமாக மடித்தும்,  இடக்காலை முன் நோக்கி வைத்து, இறக்கைகளை நன்கு விரித்து பறக்கும் பாவனையில் வடிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீ கருட பகவான் சிற்பத்தில் அஷ்ட நாகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.  இடுப்பில் செருகிய குறுவாள், ஆபரணங்கள், யக்ஞோபவீதம் மற்றும் மீசை, கோரைப் பற்களுடன், வடதிசை  நோக்கிக் காட்சி தரும் இந்த கருட பகவான், தன் வலக்கரத்தில்  ஸ்ரீ  மஹாவிஷ்ணுவையும்,  இடக்கரத்தில் ஸ்ரீ  மஹாலக்ஷ்மித் தாயாரையும், தன் கரங்கள் படாமல் பீடத்தின் மீது வைத்து ஏந்தியிருப்பது  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 



மேலும் இங்கு ஸ்ரீ  மஹாவிஷ்ணு வில் அம்பு ஏந்தியிருப்பதும் வித்தியாசமானது.  கருடனின் தலைப்பகுதியின் இருபுறங்களில் சங்கும் சக்கரமும் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வித்தியாசமானஸ்ரீ  கருட பவானின் விக்கிரகம் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்கிறார்கள்.  ஒரே கருவறையில்  கருடாழ்வாரோடு  ஸ்ரீ  மஹாவிஷ்ணு ஸ்ரீ  மஹாலக்ஷ்மி என மூவரையும்  ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குக் கிட்டுகிறது.



மஹாபாரதப் போர் முடிந்தவுடன் பஞ்ச பாண்டவர்கள் இப்பகுதிக்கு வந்திருந்தனர் என்றும், அப்போது இங்குள்ள அனுமன் சந்நதியை அர்ச்சுனனும், ஸ்ரீ நிவாசப் பெருமாள், பத்மாவதித் தாயார், ஸ்ரீ  ராமர் சீதா லட்சுமணர் விக்கிரகங்களை வசிஷ்ட முனிவரும்  பிரதிஷ்டை செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது.



கர்நாடக மாநிலத் தலைநகரான பங்களூருவிலிருந்து (சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 4ல் சுமார் 83 கி.மீ. தொலைவில் உள்ள,  முல்பாகலை அடைந்து, அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கோலாதேவி கிராமத்திற்குச் சென்று ஸ்ரீ  மஹாவிஷ்ணு, ஸ்ரீ  மஹாலக்ஷ்மியை ஏந்திய  ஸ்ரீ  கருடாழ்வாரை தரிசிக்கலாம். ஆலயத் தொடர்புக்கு அலைபேசி எண்:  9900581401. ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 வரை. முல்பாகல் வட்டத்தில் ஸ்ரீ சோமேஸ்வரர்,  ஸ்ரீ விட்டலேஸ்வரர், ஸ்ரீ  கோலாராம்மா தேவி ஆகிய ஆலயங்களும் பிரசித்தமானவை.

 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அர்த சக்தி பீடம் - சப்தஷ்ரிங்கி தேவி!

 
 
 
Widஇந்த சப்தஷ்ரிங்கி தேவியின் கோயில் நாசிக்கில் கடல் மட்டத்தில் இருந்து 4,800 அடி உயரமுள்ள ஷாயத்ரி மலை மீது அமைந்திருப்பதுதான் இதன் விசேஷமாகும்.



கோயிலின் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய பள்ளமும், அதற்கு நேர் புறத்தில் மிக உயர்ந்த மலையும் அமைந்திருக்கின்றன. இந்த கோயிலை மட்டும் அல்ல அதை ஒட்டி அமைந்திருக்கும் இயற்கை எழில் மிக்க பகுதிகளையும் காண கண் கோடி வேண்டும் என்கின்றனர் இப்பகுதிக்கு வருபவர்கள்.
 


மஹிசாசுரனின் தொல்லைகள் தாங்க முடியாத தெய்வங்கள் அனைவரும் தங்களை காப்பாற்றுமாறு தேவி மாவை வணங்கியபோது அவர் சப்தஷ்ரிங்கி தேவி ரூபத்தில் அருள் பாலித்துள்ளார். அதை குறிக்கும் வகையில் 108 சக்தி பீடங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டன.
 
 
அதில் மூன்றரை சக்தி பீடங்கள் மஹாராஷ்டிராவிலேயே அமைந்துள்ளது. அதில் அரை சக்தி பீடம்தான் (அர்த சக்தி பீடம்) இந்த சப்தஷ்ரிங்கி தேவி கோயிலாகும். இந்தியாவிலேயே வேறு எங்கும் அர்த் சக்தி பீடக் கோயில் இல்லை என்பதும் மேலும் ஒரு சிறப்பாகும்.
 


மஹாகாளி, மஹாலஷ்மி, மஹாசரஸ்வதி என்று பல ரூபங்களில் சப்தஷ்ரிங்கி தேவி வணங்கப்படுகிறார். ராமாயணக் காலத்தில் ராமரும், சீதா பிராட்டியும், லஷ்மணும் கானகம் சென்றபோது நாசிக்கில் உள்ள இந்த இடத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
 


இந்த கோயிலில் அமைந்திருக்கும் சப்தஷ்ரிங்கி தேவியின் திருவுருவச் சிலை 8 அடி உயரமுடையது, 18 கைகளையும், அதில் 18 வகையான ஆயுதங்களையும் தாங்கி நிற்கிறது. மஹிஷாசுரனை அழிக்க பல்வேறு ஆயுதங்களுடன் தேவி காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.
 


சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சக்கரம், சங்கு, அக்னியின் எரியும் சக்தி, வாயுவின் வில் மற்றும் அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம், யமனின் கயிறு, தக்ஷபிரபதியின் ஸ்படிகமாலை, பிரம்மனின் கமண்டலம், சூரியனின் கதிர்கள், காலஸ்வரூபியின் ஆயுதம் என ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு கடவுளின் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறார் சப்தஷ்ரிங்கி தேவி.
 


இந்தக் கோயிலை அடைய 472 படிகளை ஏறி செல்ல வேண்டும். சித்திரை மாதம் மற்றும் ஆவணி மாத நவராத்திரியும் இங்கு விசேஷமாக இருக்கும்.


சித்திரை மாதத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் சப்தஷ்ரிங்கி தேவி, ஆவணி மாத நவராத்திரியின் போது ஆக்ரோஷமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலைச் சுற்றி 108 புனித கிணறுகள் அமைந்துள்ளது, கோயிலின் இயற்கை எழிலை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
 

எப்படிச் செல்வது

விமான மார்கம் - மும்பை அல்லது புனே விமான நிலையங்கள் அருகில் அமைந்துள்ளது. அங்கிருந்து பேருந்து அல்லது வாடகைக்கு வாகனம் அமர்த்திக் கொண்டு போகலாம்.

ரயில் மார்கம் - நாசிக்கிற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் ரயில்கள் செல்கின்றன. இங்கு வர ரயில் மார்கம் சிறந்ததாக அமையும்.

பேருந்து மார்கம் - நாசிக்கில் இருந்து 65 கி.மீ. தூரத்தில்தான் சப்தஷ்ரிங்கி தேவி ஆலயம் உள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.