திங்கள், 15 ஆகஸ்ட், 2016

நவ கைலாசங்கள் 1. பாபநாசம்!

நவக்கிரஹங்களில் முதலாவதான சூரியனின் சக்தி அளப்பரியது. சூரியனது இயக்கத்தாலன்றோ பயிர், உயிர் செழிக்கிறது? இதே போல ஜோதிஷ சாஸ்திரத்தின்படி, மனித ஆயுளில் ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் பெற்று இருக்கும். சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு போன்றவற்றிற்கு சூரியனை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். சூரியனின் அருள் வேண்டுபவர்கள் இன்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்றவற்றை பாராயணம் செய்யக் காண்கிறோம். மேலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், விரதமிருப்பதும் இன்றும் பல இல்லங்களில் நடக்கிறது. இவை எல்லாம் சூரிய வழிபாட்டின் ஒர் அங்கம் தான். சூரியனை வழிபடுவதன் மூலம் நவக்கிரஹங்களின் பாதிப்பு குறையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.
அகஸ்தியர் தாமிரபரணியில் இட்ட முதல் பூ கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். பாப-விநாசம் என்றும் பாப-நாசம் என்றும் கூறுவதிலேயே இந்த இடத்தின் பெருமை நமக்கு புலனாகிறது. நாம் செய்த பாபங்களை எல்லாம் நாசம்/நசியச் செய்து, நம்மை நல்வழிப்படுத்துகிறார் இங்கிருக்கும் இறைவன். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி சமவெளியை அடைவது இந்த பாப-விநாசத்தில்தான் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்த இடத்தில்தான் அகஸ்தியரும் தவமிருந்து அம்மை-அப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது, அவருக்கு சிறு கோவிலும் இருக்கிறது. சிவ தம்பதியினர் தமது தெய்வீகத் திருமணத்தை அகஸ்தியருக்கு காண்பித்த இடம் பாபநாசம். இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான். பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் ஒரு சமயம் இந்திர லோகத்தில் இந்திரனிடம் மலைகளின் மகத்துவம் பற்றி பேசுகையில் மேரு போன்ற மலைகள் எவ்வாறு மகத்துவம் பெற்றன என்று இந்திரன் கேட்க அப்போது மலைகள் தவம் புரிந்து ஈசனிடம் அருள் பெற்றன என்றும் அவ்வாறு அருள் பெற்ற மலைகள் மேரு, பொதிகை, கைலாயம் என்று கூறினாராம். மேலும் தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.


இங்கு இருக்கும் ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. இந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மீன் இலச்சினை பொறிக்கப்பட்ட கல் மண்டபங்களும், பாண்டியன் விக்கிரம சிங்கன் கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரிகிறது. சுமார் 80 அடி உயரமுடைய ராஜ கோபுரம், கர்பகிரஹத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்களும், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் கூடிய ஆகம விதி வழுவாது கட்டப்பட்டிருக்கும் கோவில் என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டிய பாண்டியன், விக்ரமசிங்கனது பெயரில் இந்த ஊர் விக்ரமசிங்க புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.

பிற்கால பாண்டிய அரசர்களில் ஒருவர் சமணமதத்தை சார்ந்தவராக இருந்து சைவ பக்தர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினாராம். அப்போது சமணத்தை ஏற்காத, மிகுந்த சிவபக்தி உடைய குடும்பம் ஒன்று ஊரை விட்டு வெளியேறுகிறது. குடும்பத்தவர் பல இடங்களுக்குச் செல்லுகையில் குழந்தைகளான அண்ணன், தங்கை பிரிந்து விடுகின்றனர். பலகாலம் கழித்து காசியில் அவர்கள் சந்திக்கையில் கவரப்பட்டு தமது உறவுமுறை அறியாமல் அறியாமல் திருமணமும் முடித்துவிடுகின்றனராம். மணமான பிறகு தமது உறவின் முறையினை அறிந்து வருந்தி ஈசனிடம் முறையிட, அசிரீரியாக அவர்களுக்கு பாபவிமோசனம் சொல்லப்படுகிறது. அந்த அசிரீரியின் கூற்றுப்படி இருவரும் கரிய நிறத்தாலான ஆடை அணிந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்றும், எந்த தீர்த்தத்தில் நீராடுகையில் அவர்களது கரிய நிற ஆடை வெண்மை அடைகிறதோ அப்போது அவர்களது பாவம் விலகும் என்றும் அறிகின்றனர். இதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி வருகையில் பாபநாசத்தில் அவர்கள் கோவிலுக்கு எதிரில் உள்ள படித்துறையில் நீராடி எழுகையில் தமது ஆடைகள் வெண்மை அடைந்ததைக் கண்டு தமது பாபங்கள் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

இங்கு சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பின்னர் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. கோவில் எதிரில் இருக்கும் படித்துறையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் என்று கூறுகின்றனர் பெரியோர். சிவராத்திரியும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் என்றால் மிகையில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக