ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

தங்க கணபதி திருநாள்!




ட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சய திருதியை  என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும்.

இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்கள் செய்து அணிவதற்கு ஏற்ற மற்றொரு புண்ணிய தினமும் உண்டு. அதை, முழுமுதற் கடவுளான விநாயகரின் திருப்பெயரால் 'தங்க கணபதி தினம்’ என்றே சிறப்பித்திருக் கிறார்கள் நம் முன்னோர். இந்த தினம், வருடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும் என்பது கூடுதல் சிறப்பு!


தங்கத்தை விரும்பாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தங்கத்தின்மீது பற்று உண்டு. வெறும் அழகு ஆபரணங்களாக மட்டுமே இல்லாமல், சேமிப்புக்குத் தகுதியான பொருள் அது. அவசர கால பொருளாதாரத் தேவைக்கும் தங்கம் பயன்படும். அப்படிப்பட்ட தங்கத்தைச் சேமிக்கவும், சிறுகச் சிறுக சேமித்து தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழவும் உகந்த தினம்தான் தங்க கணபதி தினம்.

பொதுவாக தங்கம் வாங்கி அணிவதற்குத் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைளும், பிரதமை, பெளர்ணமி, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி ஆகிய நாட்களும் சிறப்பானவை என்கின்றன ஞானநூல்கள். அதிலும், குறிப்பிட்ட இந்த நாட்களில் அமிர்தயோகம் மற்றும் சுக்ர ஹோரைகளில் புதிய ஆபரணம் அணிவதால், ஆபரண யோகம் பெருகும்.

இதுபோன்று பலன் அருளும் புண்ணிய தருணங்களை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர். முற்கால அரசர்கள் பலரும், சாஸ்திர அறிஞர்கள் அறிவுறுத்தும் இந்தத் தருணங்களில் கிரீடமும், நகைகளும் செய்து அணிந்து பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியான ஒரு சிறப்புத் திருநாள்தான் தங்க கணபதி தினம்.

ரோகிணி நட்சத்திரம், சனிக்கிழமை, அமிர்தயோகம் மூன்றும் கூடி வரும் தினத்தையே தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள்.

சரி, தங்கத்துக்கும் கணபதிக்கும் என்ன சம்பந்தம்?

எதிலும் முன்னோரைச் சிறப்பிப்பது நமது பண்பாடு. அந்த வகையில், உலக உயிர்களுக்கெல்லாம் முன்னவராகவும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் முதற்கடவுளாகவும் விளங்கும் கணபதி பெருமானுக்கு பூஜைகளில் முதலிடம் உண்டு. அவ்விதமே, அவரின் திருப்பெயரை இந்தப் புண்ணிய தினத்துக்குச் சூட்டியதாகத் தகவல் உண்டு.

 இந்த தினங்களில் புதிய தங்க நகையைச் செய்யச் சொல்லி அணிந்தால், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் கூடுவதோடு, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த செல்வமும் நிலைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இந்தப் புண்ணிய தினங்களில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து,

 'ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’

என 108 முறை பாராயணம் செய்து, விநாயகர் கோயிலுக்குச் சென்று, கணபதியைத் துதித்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால்,  இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, கல்வி மேம்பாடு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புதிய முயற்சிகளில் வெற்றி, தொழிலில் லாபம் என சகல விஷயங்களும் சாதகமாகும்;   வாழ்க்கை இனிக்கும்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக