சந்ததி செழிக்க நந்தினி வழிபாடு!
அறிவும் அழகுமான மக்கட்செல்வம் வாய்க்க, சத்புத்திர பாக்கியம் பெறுவதற்கான சில வழிபாடுகளை ஞான நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று, நந்தினி வழிபாடு.
காமதேனுப் பசுவின் மகள் நந்தினிப் பசு; தெய்வ கடாட்சம் நிறைந்தது. ஒரு பசுவை அலங்கரித்து, நந்தினியாக பாவித்து வழிபட, நமக்கு நல்ல அறிவுள்ள சந்ததி உருவாவதுடன், வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெருகும் என்கின்றன் புராணங்கள்.
பவிஷ்ய புராணத்தில்…
ப்ருது என்ற மன்னன், தனது நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைக் களைவதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்தான். ஆனாலும், வறட்சி நீங்கியபாடில்லை. அதற்குக் காரணம் பூமாதேவியே என்று கருதியவன், அவளைத் தாக்குவதற்கு ஆயத்தமானான். அப்போது பெண் உருவில் தோன்றிய பூமி மாதா,
”மானுடனே! பெண் உருவாய் உள்ள என்னைக் கொல்வதால் உன் குலமும் மக்களும் அழிவதோடு, பஞ்சம் மேலும் அதிகரிக்கும். உனக்காக நான் ஒன்று செய்கிறேன். அடக்கி வைத்திருக்கும் என் மடியைத் தளர்த்தி, அனைத்துச் செல்வங்களையும் பால் வடிவில் சொரிகிறேன். வேண்டும் என்பவர்கள், இளங்கன்றுக்குட்டியுடன் பாத்திரம் ஒன்றையும் கொண்டுவந்து, பாலைப் பெற்றுச் செல்லலாம்” என்றாள். அவளின் பசு ரூபத்தை சுரபி என்பார்கள்.
ப்ருது மன்னன், மனு பிரஜாபதியையே கன்றுக்குட்டியாக்கி, கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பெற்றுக்கொண்டான். தேவர்கள் இந்திரனைக் கன்றாக்கி, சொர்ண பாத்திரத்தைக் கொண்டு வந்து, பாலைக் கறந்து சென்றனர். மகரிஷிகள் பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாகக் கொண்டு, வேத ரூபமான ஞானப் பாலைப் பெற்றுக் கொண்டனர். அசுரர்களோ பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புக் குவளைகளில் மது என்னும் பாலைக் கறந்து சென்றனர். இந்தக் கதையை பவிஷ்ய புராணம் சொல்கிறது.
இப்படியான புராணச் சம்பவங்கள் மூலம், வறட்சி நீங்கி வளம் காணும் பொருட்டு, சுப நிகழ்வுகளில் முதலில் கோபூஜை செய்வது வழக்கத்துக்கு வந்தது எனலாம்.
நலம் யாவும் அருளும் நந்தினி பூஜை!
பூஜைக் காலம்: பசுவை நந்தினியாக பாவித்து அதன் கன்றுடன் சேர்த்து பூஜிப்பதே நந்தினி பூஜையாகும். விசேஷமான இந்த பூஜையை துவாதசி தினங்களில் மட்டும் செய்வது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், கோபூஜை செய்யும் விதிப்படி பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், ஆஷாட நவராத்திரி எனப்படும் ஆடி மகா நவராத்திரி காலங்களிலும் இந்தப் பூஜையை செய்து நலம் பெறலாம்.
பூஜிக்கும் முறை: கொட்டிலில் கட்டியுள்ள பசுவையும் கன்றையும் வணங்கி, இரண்டையும் பரிசுத்தமான ஓரிடத்தில் நிறுத்தி, முதலில் பசுவின் தலையில் எண்ணெய் தடவவேண்டும். பிறகு, சிறிது மஞ்சள் நீர் தெளிப்பதுடன், சாதாரண நீரால் நீராட்ட வேண்டும். தொடர்ந்து, பன்னீர் முதலான வாசனை திரவியங்கள் தெளித்து, மீண்டும் கன்றுடன் சேர்த்துப் பசுவைக் குளிப்பாட்ட வேண்டும். அடுத்ததாக, மஞ்சள்பொடியைக் குழைத்து 21 இடங்களில்… பசு- கன்றின் நெற்றியில் துவங்கி, வால், பின்பகுதி, கால்கள் என 21 இடங்களில் திலகம் இட வேண்டும். அதன் மேல் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். பின்னர், பூமாலைகள் சாற்றி, மீண்டும் மஞ்சள் சந்தனம் தெளித்து, வண்ண ஆடைகள் சாற்றிவிட வேண்டும்.
அடுத்து, மங்கல கலசக் கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். அதன் எதிரில் விளக்கு, தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, முளைவிட்ட பயறு, வெல்லம்- அரிசி கலவை, சர்க்கரை அன்னம், வெண்பொங்கல் ஆகியவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளவும். குங்குமம், உதிரிப்பூக்களும் அவசியம் வேண்டும்.
இனி, பூஜையைத் துவக்குவோம்.
முதலில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, கிழக்குமுகமாக வைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் ஸ்ரீ லக்ஷ்மி கணபதயே நம: ஓம் ஸ்ரீ கணபதயே நம: ஓம் ஸ்ரீ சக்தி கணபதயே நம:” என மூன்று முறை சொல்லி தூப-தீபம் காட்டி, கணபதிக்குக் கற்கண்டு நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.
அடுத்து, ‘மம குடும்ப சௌபாக்ய சித்யர்த்தம் அவயோக சாந்தியர்த்தம் ஸ்ரீநந்தினி பூஜாம் கரிஷ்யே’ என்று, வடக்கில் மஞ்சள் அரிசியை எடுத்துப் போட வேண்டும்.
பிறகு, ஸ்ரீகாமாக்ஷி தீபம் ஏற்றிவைத்து, ‘ஓம் தீபதேவி மகாதேவி லக்ஷ்மி ரூபே ஸநாதனி கோ பூஜா சுபசமய: சாட்சிதேவீ க்ருபா மயி’ என மூன்று முறை சொல்லவேண்டும். தொடர்ந்து, குங்குமம் மற்றும் வாசனை மலர்களால் கலசத்தை அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் கோபுத்ரீச வித்மஹே
காமதேவ்யைச தீமஹி
தந்நோ நந்தினீ தேவி: ப்ரசோதயாத்
என்று கூறி, வணங்கிய பிறகு கலச அர்ச்சனை செய்யவேண்டும்.
ஓம் காமதேனுவே நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஹவ்ய கவ்ய பலதாயை நம:
ஓம் வ்ருஷப புத்ரியை நம:
ஓம் சௌரப்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாஸஸ்தயாயை நம:
ஓம் ரோகிணீ வல்லபாயை நம:
ஓம் ஸ்ருங்கிண்யை நம:
ஓம் க்ஷிரதாரிண்யை நம:
ஓம் காம்போஜ ஜனகாயை நம:
ஓம் பப்ல ஜனகாயை நம:
ஓம் யவன ஜனகாயை நம:
ஓம் மகனீயாயை நம:
ஓம் நைசிக்யை நம:
ஓம் சபலாயை நம:
ஓம் ஸ்ரீம் கோமாத:
புத்ரீம் நந்தீன்யை நம:
சகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம்
கலச அர்ச்சனை முடிந்ததும், உதிரிப்பூக்கள் இருக்கும் தட்டு, குங்குமம் ஆகியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, கணவன் மனைவி இருவரும் பசுவின் முன் நின்று, மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
ஓம் ஈஸ்வர ரூபிண்யை நம:
ஓம் பிரம்ம ரூபிண்யை நம:
ஒம் விஷ்ணு சக்தியை நம:
ஓம் தீர்த்த வாசினே நம:
ஓம் லோகபீடாய நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் சூர்ய தேவாய நம:
ஓம் சந்திரப்ரகாசாய நம:
ஓம் மாருதயே நம:
ஓம் வருணாய நம:
ஓம் யட்சராஜாய நம:
ஓம் தர்மராஜாய நம:
ஓம் இந்திராய நம:
ஓம் நாகராஜாய நம:
ஓம் கந்தர்வராஜாய நம:
ஓம் அப்சதேப்யோ நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் நேத்ர நிலயாய நம:
ஓம் ப்ருகுரிஷிப்யோ நம:
ஓம் சாத்தேப்யோ நம:
ஓம் உமாதேவ்யை நம:
ஓம் பூமிதேவ்யாய நம:
ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் தேவேப்யோ நம:
ஓம் பிரும்மனே நம:
ஓம் விஷ்ணுவே நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் சதாசிவாய நம:
நானாவித பரிமளபத்ர புஷ்பம் சமர்ப்பயாமி.
இங்ஙனம் அர்ச்சித்து முடித்ததும், பசுவுக்கும் கலசத்துக்கும் தூப- தீபம், நிவேதனம் செய்து, பசு மற்றும் கன்றுக்கு அரிசி- வெல்லக் கலவையைக் கொடுத்து, கற்பூர ஆரத்தி செய்து, மூன்று முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். பின்னர், கண்களை மூடியபடி (கைகளில் மலர் எடுத்து) ஒரு நிமிடம் தியானித்து.
ஓம் சர்வகாம துகே தேவி சர்வ தீர்த்தா பிஷேசிநீ
பாவஸ்ரீ நந்தினீ ஸ்ரேஷ்டா தேவீ துப்யம் நமோஸ்துதே!
என்று கூறி, பின்வரும் கோமாதா துதிப்பாடலைப் பாடி வழிபடவேண்டும்.
திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே!
பாடல் பாடி வழிபட்டபிறகு, ஆத்ம பிரதட்சிணம் செய்து, கீழே விழுந்து வணங்கவேண்டும். தொடர்ந்து, பசுவுக்கும் கன்றுவுக்கும் பழம், கீரைகள் கொடுத்து (அதிகம் தந்தால் உடல்நலம் கெடும் என்பதால், குறைந்த அளவு கொடுக்கவும்) போற்றி திருக்கருவைப் படித்து, பூஜையை நிறைவு செய்யலாம்.
ஓம் அன்பின் வடிவமே போற்றி!
ஓம் ஆனந்தம் தரும் தாயே போற்றி!
ஓம் திருமகள் வடிவே போற்றி!
ஓம் மடியுடை மாதே போற்றி!
ஓம் ஆதார சக்தியளே போற்றி!
ஓம் ஐம்பொருள் தருபவளே போற்றி!
ஓம் அறத்தின் வடிவமே போற்றி!
ஓம் கன்று தரும் கருணையே போற்றி!
ஓம் புல் விரும்பும் புனிதமே போற்றி!
ஓம் தர்மத்தின் வடிவமே போற்றி!
ஓம் உயிர் கொடுக்கும் உத்தமி போற்றி!
ஓம் உணவுக்கு ஆதாரமே போற்றி!
ஓம் நான்மறைக் காலனாய் போற்றி!
ஓம் கொம்பழகியே கோவே போற்றி!
ஓம் பால் கொடுத்து உயிரானாய் போற்றி!
ஓம் நந்தினித் தாயே நலமே போற்றி! போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக