புதன், 17 ஆகஸ்ட், 2016

விக்ரமாதித்யன் - சில தகவல்கள்!

உஜ்ஜயினி!

 அயோத்யா, காசி,காஞ்சி, மாயா, மதுரா, அவந்தி, த்வாரகா என்ற சப்த மோட்ச புரிகளில் அவந்தி எனப்பட்ட ஊர்தான் இது.

த்வாதச ஜ்யோதிர்லிங்கங்களில் மகாகாளேஸ்வரும், 51 சக்தி பீடத்தில் முழங்கை விழுந்த தலமாக ஹர்ஸித்திமாதாவும் கோவில் கொண்டுள்ளனர். மிகப்பெரிய மகானாக விளங்கிய பர்த்ருஹரியும், விக்ரமாதித்யன் எனப்பட்ட சந்த்ரகுப்த மௌரியனும் , சாம்ராட் அசோகனும் ஆண்டபூமி. இப்போது 12 ஆண்டுகளுக்கொருமுறை நடக்கும் மகாகும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. உஜ்ஜயினியில் அதற்கு “ ஸிம்ஹித்மேளா“ என சிறப்பு பெயர்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் வெளிப்பட்டபோது இந்த்ரன் மகன் அதனை எடுத்துக்கொண்டு விரைய, அசுரர்கள் தொடர, 12 ஆண்டுகள் அமிர்த கலசத்திற்காக இழுபறி. அந்த நேரத்தில் கலசம் கீழே வைக்கப்பட்டு, எடுக்கப்பட்டு தளும்பிய இடங்கள் நான்கு. அவை ஹரித்வார், உஜ்ஜயினி, அலகாபாத், நாசிக். இந்த நாளை கணக்கிட்டு, இத்தலங்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது.


விக்ரமாதித்யன் உஜ்ஜயினியை திறம்பட ஆண்டு, இந்தியாவையும் தாண்டி, அவனது சாம்ராஜ்யம் விரிவடைந்தது. அவனது அவையில் “நவரத்ன” ங்களான – வரருசி, தன்வந்த்ரி, க்ஷிணமகர், காளிதாஸ், அமரசிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், வராஹமிஹிரர், கடகற்பர் – ஒவ்வொருவரும் விக்ரமாதித்யனின் நல்லாட்சிக்கு நற்றுணையாக விளங்கினர். 

விக்ரமாதித்யன் இன்னொரு சகோதரன் பட்டியை, மந்திரியாக கொண்டிருந்தார். பட்டி மிகுந்த மதிநுட்பம் மிகுந்தவர். இருவரும் காட்டில், காளியை நோக்கி தவம் செய்தபோது, காளி தோன்றி, ஒரு குளத்தில் செல்வம் மிகுந்திருப்பதை எடுக்க அதன் நீரை தொடாமல் ஒரு சூலத்தை தொடவேண்டும் என நிபந்தனை விதிக்க, பட்டி தன் மதிநுட்பத்தால் அதனை அடைய உபாயம் கூற, உடல் வலிமையால் விக்ரமாதித்யன் TARGETடை அடைய, இருவரும் காளியின் அருளால் அந்த மிகு செல்வத்தை பெற்று உஜ்ஜயினியை புதுக்கினர்.

ஜெகம் புகழும் மன்னனின் உதவி, இந்த்ரனுக்கும் ஒருநாள் தேவைப்பட்டது, தன் நடன மங்கைகள், ரம்பை, ஊர்வசி இருவரில் யாருடைய நாட்டியம் சிறந்தது என்பதனை கண்டறிய ! தேவருலகம் அடைந்த விக்ரமாதித்யன், அன்று இருவரின் நடனத்தை கண்டு, அடுத்தநாள் தனது தீர்ப்பை சொல்வதாக கூறிச்சென்றான். அடுத்தநாள் இருவருக்கும் ஒரு மாலையை கொடுத்து ஆடச் செய்தான். இறுதியில் ஊர்வசியின் நாட்டியமே சிறந்தது என தீர்ப்பளித்தான். அதற்காக இந்திரன் பரிசாக ஒரு சிம்மாசனத்தையும் 1000 ஆண்டுகள் சிறப்பாகஆட்சி புரியும் வரமும் தந்தான்.

 
அவன் ஊர்வசியை தேர்தெடுக்க ஒரு உபாயம் செய்தான். மறுநாள் மலர்மாலை வழங்கியபோது ஒவ்வொரு மாலையிலும் தேனீக்களை பூக்களில் விட்டு, அதை அணிந்து நடனமிட சொன்னான். ரம்பாவின் நடனத்தில் லயம் இல்லாததால், அந்த தேனீக்கள் சீண்டப்பட்டு மலர்களைவிட்டு வெளியே பறக்க, அதில் பயந்த அவளது நடனம் தாளத்திலும் தடம் புரண்டது. ஆனால், ஊர்வசியோ, தாள, லயத்துடன் ஒன்றி நயமாக ஆடியதால், ஒரு இடையூறுமின்றி, அவளது மாலையில் இருந்த தேனீக்கள், பூவில் இருந்த மதுவை குடித்து, மயங்கியே கிடந்தன. ஊர்வசியும் நிறைவான நாட்டியத்தை குறையிலாது வழங்க, சகலகலா வல்லானாகிய விக்ரமாதித்யனுக்கு தீர்ப்பு வழங்க, இதுவே போதுமானதாக இருந்தது.

 
இந்த்ரன் அளித்த சிம்மாசனத்தில் அமர்ந்து திறம்படி ஆட்சி செய்தவனுக்கு, பட்டிக்கும் 1000 ஆண்டு ஆயுள் கிடைத்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்றியது. பட்டியை காட்டில் இருந்த காளியை தரிசித்து வரம் வாங்கிவர அனுப்பினான். பட்டியின் தவத்தை மெச்சிய காளி, தனக்கு ஒரு உயிர்பலி கொடுத்தால், வேண்டும் வரம் தருவதாகக் கூறினாள். விக்ரமாதித்யனிடம் வந்து கூறி, கூடவே ஒரு உபாயமும் கூறினான். அதன்படி, காளிக்கு விக்ரமாதித்யனையே பட்டி உயிர்பலி கொடுத்தான். காளி, அவன் கேட்ட 200 வருட ஆயுளை அளித்தாள்.  வரம் பெற்ற பட்டி, காளியை பார்த்து, கிண்டலாக நகைத்தான். ஏன் என வினவிய காளியிடம், “இதோ உயிர் பலி கொடுக்கப்பட்டு, தலை இழந்து உன் காலடியில் கிடக்கும், இந்த விக்ரமாதித்யனுக்கு இந்த்ரன் 1000 வருட ஆயுள் வரம் அளித்தான். எனக்கு 200 வருட ஆயுள் வரம் நீ கொடுத்துள்ளாய். இனி, நான் எத்தனை நாளில் இறப்பேனோ” என கேலி செய்ய, கோபம் கொண்ட காளி, “ இந்த்ரனை விட எனது வரத்திற்கு வலிமை அதிகம், இதோ பார், விக்ரமாதித்யனுக்கு நான் உயிர் அளிக்கிறேன். இருவருக்கும் 2000 வருடம் அரசாள வரம் அளிக்கிறேன்” என, உயிர் பெற்ற நண்பனுடன், வரம் பெற்ற பட்டி, நாடு திரும்பி, அடுத்ததாக ஒரு  திட்டம் தீட்டினான் . . . !!

 
மதி நுட்பம் மிகக்கொண்ட பட்டி, காளி இருவருக்கும் அரசாளத்தானே வரம் தந்தாள், எனவே, விக்ரமாதித்யன் ஆறு மாதம் நாடாள வேண்டும், அந்த சமயம் பட்டி ஆறு மாதம் காட்டில் இருக்க வேண்டும், அடுத்த ஆறு மாதம் பட்டி நாடாள வேண்டும், அப்போது விக்ரமாதித்யன் ஆறு மாதம் காட்டில் இருக்க வேண்டும் என்று இருவரும் பேசி முடிவு கட்டியபடி காளி கொடுத்த வரத்தையே இருமடங்காக்கி இருவரும் சிறப்புற ஆட்சி செய்தனர் !!
 

அவரது சிம்மாசனம் பற்றியும் கேள்வி பட்டிருக்கிறோம். அதில் ஏறி அமர 32 படிகள், அகலமான படிகளில் சிலைகள். விக்ரமாதித்யனின் சிறப்பான ஆட்சிக்கு அவற்றின் மதிநுட்பமும் பங்கு வகித்தன. சாபம் பெற்ற ‘‘அப்சரஸ்‘‘களான அவர்களது பெயர்களும் எவ்வளவு அழகு !!
 
1.ரத்னமஞ்சரி     9.மதுமதி             17.வித்யாவதி          25.த்ரிநேத்ரி
2.சித்ரலேகா      10.ப்ரபாவதி          18.தாராவதி              26.ம்ருகயானி
3.சந்த்ரலேகா    11.த்ரிலோசனா   19.ரூப்ரேகா             27.மலயவதி
4.காமகந்தளா   12.பத்மாவதி         20.ஞானவதி             28.வைதேகி
5.லீலாவதி         13.கீர்த்திமதி         21.சந்த்ரஜோதி        29.மன்வதி
6.ரவிபாமா         14.சுநயனா             22.அருணஜோதி    30.ஜெயவக்ஷ்மி
7.குமுதா             15.சந்த்ரவதி           23.தருமவதி             31.கௌசல்யா
8.புஷ்பவதி         16.சத்யவதி            24.கருணாவதி        32.ராணிரூபவதி
 
தேவலோக விருந்துக்கு ஈடான தேன், கதலி, நெய், இஞ்சி, மிளகு சேர்த்து சமைத்து , பூலோகவிருந்தாக பருப்பும், அன்னமும், காய்கறியும், தயிரும், மோரும் பரிந்து பரிமாற வேண்டும்!
 
மன்னன் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் இருந்தபோது
அவர்  தவறாது ஹரிசித்தி ஆலயத்துக்கு வந்து பூஜைகளை
செய்வாராம். விக்ரமாதித்தனின் 32 பதுமைகளுடன் கூடிய
சிம்மாசன ஆலயம் ஹரிசித்தி ஆலயத்தில் இருந்து பத்து மீட்டர்
தள்ளி உள்ளது. அந்த காலத்திலேயே மனிதராக வாழ்ந்து
வந்திருந்த ஒரு மன்னனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு
இருப்பது விந்தைதான்.  ஆனால் அவர் மனிதரல்ல
விக்ரமாதித்தியன் மனித உருவில் வந்த ஒரு தேவ கணம்
என்பதாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்கிறார்கள்.
விக்ரமாதித்தியன் தேவலோக அதிபதியான இந்திரனின் மகனான
கந்தர்வசேனனின் மகன் ஆவாராம். அவர் தனது ஐந்தாவது
வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்துள்ளார்.
அவருடைய வம்சத்தினர் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில்
இருப்பார்கள் என்ற வரத்துடன் பூமியில் வந்துள்ளார்.

 
விக்ரமாதித்தியன் இரண்டு கதைகளுடன் சம்மந்தப்பட்டவர்.
 'விக்ரம் மற்றும் வேதாளம்' எனும்  கதைகள் பிரபலமானவை.
அது போலவே அவர் அமர்ந்த முப்பத்தி இரண்டு தங்கப்
பதுமைகளைக் கொண்ட சிம்மாசனமும் பெரும் புகழ் பெற்ற
கதையை பின்னணியாகக் கொண்டவை. விக்ரமாதித்தியன்
நேர்மையான ஆட்சியை தந்தவர். இந்த சிம்மாசனத்தில்
அமர்ந்து கொண்டுதான் அவர் அனைத்து முக்கிய முடிவுகளையும்
எடுப்பாராம். அது மட்டும் அல்ல குற்றங்களையும் அதில்
அமர்ந்து கொண்டுதான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவாராம்.
உஜ்ஜயினியில் சனி பகவானுக்கு ஆலயம் எழுப்பியவர் மற்றும்
தமது அரச சபையில் காளிதாசனையும் சேர்த்து ஒன்பது
நவரத்தினங்கள் எனப்படும் கவிஞர்களை வைத்திருந்தவர்.

 
அவர் பூமிக்கு வந்தபோது அவருக்கு இந்த சிம்மாசனத்தை
இந்திரன் கொடுத்தாராம். அதில் இருந்த தங்கப் பதுமைகள்
தேவ லோகத்தில் இருந்த அப்சரஸ்கள். ஒருமுறை அவர்கள்
பார்வதியின் சாபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்கு வந்து அந்த
சிம்மாசனத்தில் தங்கப் பதுமைகளாக அமர்ந்து கொள்ள வேண்டி
 இருந்தது. அவர்களுக்கு சாப விமோசனம் விக்ரமாதித்தியன்
பரம்பரையில் வரும் போஜராஜன் எனும் மன்னன் மூலமே
கிடைக்கும் என்பது விதியாக இருந்தது.


விக்ரமாதித்ய மன்னர்


இந்த நிலையில் போஜராஜன் அரியணை ஏறிய பின்னர் அவர்
ஒரு இடத்தில் புதைந்து இருந்த அந்த சிம்மாசனத்தை கண்டெடுத்து
அதை தனது அரச சபைக்கு எடுத்துச் சென்று அதில் அமர முயற்சி
செய்தபோது அந்த தங்கப் பதுமைகள் அவரிடம் சில கேள்விகளைக்
கேட்டு விட்டு சாப விமோசனம் பெற்று தேவலோகத்துக்குச் சென்று விட்டன.

 
அந்த சிம்மாசனமே இந்த ஆலயத்தில் உள்ள சிம்மாசனம்
என்கிறார்கள். இங்குள்ளது அதன் மாதிரி சிம்மாசனமே என்றும்,
ஆனால் பண்டையக் காலத்தில்  வனப்பிரதேசமாக இருந்த இந்த
ஆலயம் உள்ள இடத்தின் அடியில்தான் போஜராஜ மன்னனால்                     
அந்த சிம்மாசனம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும், அதுவே இந்த
ஆலயம் அமைந்ததின் பின்னணி என்றும் கூறுகிறார்கள்.
இதை விக்ரமாதித்தனும் முப்பத்தி இரண்டு பதுமைகளும் என்கின்ற
 ஆலயமாக கருதி வழிபடுகிறார்கள்
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக