வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

புன்நகையும் பொன்நகையும் சேர!

 
புன்நகையும் பொன்நகையும் சேர! -முத்துசாமி தீட்சிதர் பாடியது!

oசுவர்ணமயமான லட்சுமியை நான் சதா போற்றிப் பாடுகிறேன். ஈனமான அற்ப மனிதர்களைப் போல் கோரிக்கை நிறைவேற வேண்டுமென்ற வேண்டுதலோடு உன்னை நெருங்குவதை விட்டு விடுகிறேன்! உன்னை வணங்குகின்றேன்!
 
oஅழிவில்லாத நிலையான ஐவர்யத்தைக் கொடுப்பவளே! பாற்கடலின் புதல்வி. மகாவிஷ்னுவின் மார்பையே தன்னிருப்பிடமாகக் கொண்ட மான் விழியாளே! தளிர் போன்ற திருவடிகளைக் கொண்டவளே! மலர்ப்பாதம் கொண்டவளே! கைகளில் நீல மலர்களை ஏந்தியவளே! மரகத பச்சை மணி வளையல்களை அணிந்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஸ்வேத உலகத்தில் வசிப்பவளே! ஸ்ரீகமலாம்பா பரதேவதை எனக் கூறப்படுபவளே! கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், வருங்காலத்திலும் ஒளிர்பவளே! அந்தணர்களால் போற்றப்படும் உத்தமமான தாயே! தாமரை மாலை அணிந்தவளே! மாணிக்க மயமான ஆபரணங்கள் தரித்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oகீதம், மற்றும் இசை வாத்தியங்களால் சந்தோஷம் அடைபவளே! பார்வதியின் அம்சமான இந்திராவே! சந்திர முகம் கொண்டவளே! மஞ்சள் நிற ஆடை அணிபவளே! குரு குகனின் மாமனான விஷ்ணுவின் அன்பு மனைவியே! மிகச் சிறந்த அழகியே! அதனால் லலிதா என்றழைக்கப்படுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமங்கள தேவதையான உன்னால் நான் மிகவும் பெருமைப் படுத்தப் பட்டுள்ளேன். உனக்கு நன்றி. உன்னை வணங்குகின்றேன்!

oமிகச்சிறந்த கமலாலயத்தில் குடியிருப்பவளே! போக பாக்கியங்களை அளிக்கும் சகல பொருள்களுக்கு இருப்பிடமானவளே! சராசர மயமான உலகின் எல்லா உற்பத்தி, காத்தல், அழித்தல் என மூன்றுக்கும் பொறுப்பானவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமஞ்சள், குங்குமம், அழகிய ஆடை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திருமேனி உடையவளே! ஏழ்மை, துக்கம் போன்ற பெரிய அமலங்களைப் போக்குபவளே! ராஜகோபாலனின் இதயக் கமலத்தினை இருப்பிடமாகக் கொண்ட வரலட்சுமியே! பக்தர்களான குருகுகன் முதலியோர்களுக்கு அனுக்கிரகம் செய்பவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதேவர்களால் சதா வணங்கப்படுபவளே! பாதத் தாமரையை உடையவளே! பாற்கடலில் தோன்றியவளே! தேவர்கள் வணங்கும் பார்வதிக்கு இளையவளே! மயைக்கு வித்தான மகாலட்சுமியே! வரலட்சுமியே! உன்னை வணங்குகின்றேன்!

oசெல்வங்களை அளிப்பவளும், அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமானவள் ஆகிய அம்மா வரலட்சுமியே! உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

oமன்மதனின் தந்தையான மகாவிஷ்னுவின் பிராண நாயகியே! பொன் வண்ண மேனியுடையவளே! கோடி சூர்யர்களின் ஒளியை உடையவளே! பக்தர்களை விரைவில் அடைபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதன் அடியவர்களை ரக்ஷிப்பவளே! தாமரை மலருடன் கூடியவளே! கேசவனின் இதயத்தில் விளையாடுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஆவணி முதல் மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தில், சாருமதி முதலான பத்தினிகளால் பூஜிக்கப்படுபவளே! தேவர்களாலும் குரு குகனாலும் சமர்பிக்கப்பட்ட ரத்னமாலையை அணிந்தவளே! எளியவர்களை ரட்சிப்பதையே லட்சியமாகக் கொண்ட சாமர்த்தியசாலியே! உன்னை வணங்குகின்றேன்!

oநலிந்தோர்க்கு நிதிக் குவியலை அளிப்பவளே! மாயையைப் போக்குவதில் வல்லவளே! சரஸ்வதியால் வணங்கப் படும் உத்தமியே! கைவல்யத்தை கொடுப்பதில் விருப்பமுடையவளே! வேண்டும் விருப்பங்களை எல்லாம் அள்ளிக்கொடுக்கும் கைகளையுடையவளே! உன்னை மிக மிகப்போற்றி துதிக்கின்றேன்.

oமகிழ்வான புன்னகையும் மங்களமான பொன்நகையும் என் இல்லத்தில் என்றும் சேர்ந்திருக்க அருள்வாயாக! உன்னை வணங்குகின்றேன்!
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக