வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

ஜெயம் நல்கும் மங்கள மாருதி!

ஹனுமன்!

ராமபக்தன்,  பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன். 

அஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை  அளித்துக் காப்பான்.


வேறுபெயர்கள்!

மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.

புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம் செய்தாள். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.

எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திருப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.

அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.  

 

ஹனுமன் கவசம்!

oஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும்! தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும்! மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும்! சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்!

oகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும்! விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும்! இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்!

oசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும்! வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும்! மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்!

oசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும்! வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும்! ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்!

oஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும்! வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும்! அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும்! தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்!

oஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும்! நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும்! வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்!

oராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும்! பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும்! சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்!

oஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும்! ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும்! வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்!

oமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும்! சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும்! எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்!

oஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும்! மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும்! சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்!

oஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும்! மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும்! மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்!

oஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன்! போகங்களையும் மோட்சத்தையும் அடைவான்! அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்!

oமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான்! சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது!

oநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்!

oஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்! எதிரிகளை தோற்கடிப்பான்!

oஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்! எல்லா காரியசித்தியும் ஏற்படும்!

oஎல்லா துக்கமும் அழியும்! எங்கும் எதிலும் வெற்றி! தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும்! இதில் சந்தேகமேயில்லை! மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை!

oஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்!

oபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்!

oஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்! மகிழ்வு உண்டாகட்டும்!

 
ஹனுமன் புஜங்கம்!

oபொன் போன்றமேனியனே! கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி!

oபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி!

oலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

oசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி!

oஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந்தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

oபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.

oபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.

oராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.

oபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.

oபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.

oராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.

oகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.

oருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

oசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.

oநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற!

ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமுத் பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே!

அஸாத் ஸாதக ஸ்வாமிந்!
அஸாத்யம் தவ கிம் வத!
ராமதூத க்ருபா ஸிநதோ!
மத்கார்யம் ஸாதய ப்ரபோ!

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக