ஞாயிறு, 12 நவம்பர், 2017

சர, ஸ்திர, உபய ராசி!

ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது. 

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். 

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். 

சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். 

ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். 

உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள்.

புதன், 27 செப்டம்பர், 2017

கார்த்திகை (சுக்ல பட்ச) நந்த சப்தமி!

நந்த சப்தமி
கார்த்திகை சுக்ல பட்ச  மாத வளர்பிறை சப்தமி திதியை நந்த சப்தமி என்று வழிபடுவர்.
அன்றைய தினம் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சிறப்பு.
பசுவின் உடலில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். "உபநிடதங்கள் அனைத்தும் பசுக்கள்; அதை மேய்ப்பவனும் கறப்பவனும் கிருஷ்ணன்' என்று பகவத்கீதை கூறுகிறது.
பசுவுக்கு "ரிக்வேதம்' பின்பக்கமாகும். யஜுர்
வேதம் நடுப்பகுதி. சாம வேதம் முகமும், கழுத்துமாகும். இஷ்டம், பூரிதம் ஆகியன இருகொம்புகள். பசுவின் ரோமங்கள் சகல சூக்தங்கள். சாந்தி கர்மாவும், புஷ்டி கர்மாவும் கோமயம். வேதம் வகுத்த நான்கு வர்ணங்கள் பசுவின் பாதங்கள். ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், ஹந்த் என்ற நான்கும் பால்சுரக்கும் தனங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடையும்போது பல அரிய பொருட்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று காமதேனு என்கிறது புராணம். காமதேனுவின் வாரிசாக பல பசுக்கள் பூவுலகில் தோன்றின. அவற்றுள் சிறப்புமிக்க நால்வகை தெய்வப் பசுக்களில் சுஷுதையை இந்திரனுக்கும், கபிலையை எமனுக்கும், ரோஹினியை வருணனுக்கும், காமதேனுவை குபேரனுக்கும் வழங்கினாராம்
மகாவிஷ்ணு.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதால் பசுவை எங்கு கண்டாலும், அதனைத் தொட்டு வணங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது! குறிப்பாக பசுவின் பின்புறம் சாணம் வெளிப்படும் பகுதியில் தொட்டு வணங்கினால் மகாலட்சுமியின் அருள்கிட்டும். அந்தப் பகுதியில்தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதங்கள் கூறுகின்றன.
பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமயம் இவை  ஐந்துமே "பஞ்ச கவ்யம்' எனப்படுகிறது. ஆனால் ஒரே பசுவிடமிருந்து பஞ்ச கவ்யம் தயாரிக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
"ஆன்-ஐந்து' என்பது பஞ்ச கவ்யத்திற்கு இணையான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லே தேவாரத் திருமுறைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பசுவின்பால் ஐந்து பங்கு, பசுவின் தயிர் மூன்று பங்கு, நெய் இரண்டு பங்கு, பசுவின் சிறுநீர் ஒரு பங்கு, பசுஞ்சாணம் கைப்பெருவிரல் அளவில் பாதி சேர்த்து ஒரு வெள்ளிப்பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அதற்குரிய மந்திரம் சொல்லிப் பூஜை செய்தபின், அந்தப் பஞ்ச கவ்யத்தின் ஐந்து பொருட்களும் ஒவ்வொரு தேவதைக்கு உரித்தாகிறது. கோஜலத்
துக்கு வருணனும், சாணத்துக்கு அக்கினியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு, வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
மின்னும் செந்நிறப் பசுவிடமிருந்து கோநீரையும், வெள்ளைப் பசுவிட மிருந்து சாணத்தையும், பொன்னிறப் பசுவிடமிருந்து பாலையும், நீலநிறப் பசுவினிடமிருந்து தயிரினையும், கருநிறப் பசுவினிடமிருந்து நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.


பஞ்ச கவ்யம் தயாரிக்கும்பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோநீரையும், "கந்தத்வாராம்' என்ற மந்திரத்தால் பசுஞ்சாணத்தையும், "ஆபயாயஸ்ய' என்று தொடங்கும் மந்திரத்தால் பசும்பாலையும், "ததிக்ராப்னோ'  என்று தொடங்கும் மந்திரத்
தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி' என்று தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும், "தேவ ஸ்யாத்வா' என்ற மந்திரத்தால் தத்துவதீர்த்தத்தையும் மந்திரித்து சேர்த்து தயாரிப்பதே மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச கவ்யம் எனப்படுகிறது.
இந்தப் பஞ்ச கவ்யத்தை தினமும் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பூஜித்து அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும், உடல் வளம்பெறும்.


பஞ்ச கவ்யம்  சிவ வழிபாட்டிலும், விஷ்ணு வழிபாட்டிலும் இடம்பெறுகிறது. இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட பஞ்ச கவ்ய பிரசாதத்தை பக்தியுடன் அருந்தினால் நோய்
நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்.
இத்தகைய பஞ்ச கவ்யத்தைத் தரும் கோமாதாவான பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.
கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவருடன் ஐந்து பசுக்கள் வாழ்கின்றன. நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை,, சுமலை என்னும் அந்த பசுக்களின் வழியில் வந்து பூமியில் தோன்றின இப்போது வாழும் பசுக்கள். இந்தப் பசுக்களின் சாணத்தால் பங்குனி மாதத்தில் சிவாகமத்தில் அருளியபடி அக்கினியில் மந்திரம் சொல்லி பஸ்பமாக்குவது "கற்பவிபூதி' என்பர்.


நந்தை என்னும் பசு கருமை இல்லாத பொன்னிறம் கொண்டது. இதன்மூலம் கிடைக்கும் சாணத்திலிருந்து தயாரிப்பது விபூதியாகும். பத்திரை எனும் பசு கருமை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது பசிதமாகும். சுரபி எனும் வெண்ணிறப் பசுவிடமிருந்து கிடைப்பது பசுமம் ஆகும். சுசீலை எனும் பசு புகை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது சாரம் எனப்படும். சுமலை என்னும் பசு செந்நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது இரட்சை ஆகும்.
சித்திரை மாதத்தில் பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைத் தூளாக்கி, விதிமுறைப்படி அக்கினியில் அதற்குரிய மந்திரம் ஜெபித்து புடமிட்டுத் தயாரிப்பது அநுகற்ப விபூதியாகும். காட்டில் இயற்கையால் ஏற்பட்ட அக்னியில் உண்டாக்கிய சாம்பலை எடுத்து, பஞ்ச கவ்யம் விட்டு மந்திரங்கள் ஜெபித்து மீண்டும் அக்னியில் புடமிட்டு எடுப்பது உபகற்ப விபூதியாகும். முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியை நெற்றியிலும் உடலிலும் மந்திரம் ஜபித்து அணிந்தால் நோய்நொடியின்றி ஆரோக்கிய
மாக வாழலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.
பல மகத்தான சக்திகளைக்கொண்ட கோமாதவான பசுவை அதற்குரிய நாளான நந்த சப்தமியன்று பூஜித்தால் கூடுதல் பலன்கள் பெற்று வளமுடன் வாழலாம். பசுவை வழிபட்டபின், அதற்கு ஆகாரமாக ஒரு கைப்பிடி புல், சிறிதளவு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள் கொடுப்பது மிகவும் நல்லது.



 

வேண்டுவன அருளும் காமதேனு!

"ஸர்வ காமதுகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே.'

"எல்லாருடைய விருப்பங் களையும் பூர்த்தி செய்பவள்; எல்லா புண்ணிய நதிகளின் தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவள்; மங்கள கரமானவள்; சிறப்புவாய்ந்த காமதேனுவே உனக்கு நமஸ்காரம் (வணக்கம்)' என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். மனிதப்பிறவியை எப்படி உயர்வாகச் சொல்கிறோமோ அப்படித்தான் பசுவின் பிறவியும் உயர்வானது. தெய்வ லோகத்தின் தெய்வீகப் பசுவை (காமதேனு) வணங்குவதன்மூலம் நாம் வேண்டிய வளங்களைப் பெறலாம். மேலும் எல்லாவிதமான தோஷங்களும் பாவங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அரிய பொருட்கள் பல வெளிவந்தன. அதில் வெளிப்பட்டது தான் காமதேனு
. கேட்பவர்களுக் குக் கேட்ட வரத்தைத் தரும் அபூர்வ சக்தி காமதேனுவுக்கு உண்டு.உடலால் வெள்ளைநிறப் பசுவின் தோற்றமும், முகம், மார்புப் பகுதிகள் பெண் உருவத் தோற்றமும், பின்புறம் மயில் போன்ற அழகிய தோகையும் இறக்கையும் கொண்டு, ஒரு புதுவிதமான அற்புதத் தோற்றத்தைக் கொண்டதுதான் காமதேனு. தேவலோகத்தில் இந்த தெய்வீகப் பசு வாழ்ந்து வந்தது. இதற்கு சுரபி என்னும் பெயரும் உண்டு.

காமதேனுவைப் பற்றி வியாச பகவானால்
உபதேசிக்கப்பட்ட புராணங்களிலும், இதிகாசங் களிலும் பல செய்திகள், குறிப்புகள் உள்ளன. அதேபோன்று வேதங்களிலும் ஸ்ரீமத் தேவி பாகவதத்திலும் "பசு' என்கிற பெயரில் பல குறிப்புகளும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஐந்தாவது வேதமாக இந்துக்களால் போற்றப்படும் பகவத்கீதையில் பசுவான் கிருஷ்ணர் காமதேனுவைப் பற்றி சொல்லும்போது "காமதுக்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸஹயக்ஞா: பர்ஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி
அனேன ப்ரஸவி ஷ்யத்வமேஷ
வோ அஸ்த்ஷிஷ்ட காமதுக்'.
(கீதை 3.10)

(படைக்கும் கடவுளாகப் போற்றப் படும் பிரம்மதேவன் முதலில் மனித உயிர்களைப் படைத்துவிட்டு அவர் களிடம், "உங்களின் குலம் தழைக்கும். உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இந்திரனின் பசுவான காமதேனு (காமதுக்) மூலம் பெறுவீர்கள்' என்றார்.

அதேபோன்று மற்றொரு இடத்தில் பகவான் கிருஷ்ணர்-"ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்
தேநூநாம் அஸ்மி காமதுக்
ப்ரஜந: ச அஸ்மி கந்தர்ப்ப
ஸ்ர்ப்பாணாம் அஸ்மி வாசுகி'
(கீதை: 10-28)என்கிறார். இதில் "பசுக்களில் நான் (பகவான் கிருஷ்ணன்) காமதேனுவாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
தன்னை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் சக்தியும் ஆற்றலும் பெற்ற பசுக்களின் தாயான காம தேனுவை அதற்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் நிச்சயம் பலன் தரும்.
"ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ர்யை ச தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்.'

காமதேனுவாக நினைத்து பசுவை வெள்ளிக்கிழமையன்று  கன்றுடன் சேர்த்து வழிபடுவது சிறப்பு.







செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்!

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.


சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.




சமித்து குச்சிகளும் பலன்களும்:

அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.
 
 
 

போற்றித்திருத்தாண்டகம்!

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
தேவாரத் திருப்பதிகம்

 

6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்
 

551வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.1
552பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.2
553மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.3
554வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.4
555ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.5
556சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.6
557பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.7
558இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.8
559மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.9
560நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.10
561உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி                   
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
இத்தலம் வட நாட்டிலுள்ளது;
சுவாமிபெயர் - கைலாயநாதர்,
தேவியார் - பார்வதியம்மை.
 

திருச்சிற்றம்பலம் 




 

நாராயணா என்னும் நாமம்!

நாலாயிர திவ்ய பிரபந்தம்



 திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
947வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
      பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
      அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
      உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (1)
  
948ஆவியே அமுதே என நினைந்து உருகி
      அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
      பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
      சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (2)
  
949சேமமே வேண்டி தீவினை பெருக்கி
      தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
      தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம் (3)
  
950வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
      வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
      என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
      பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (4)
  
951கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
      கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
      சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
      உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
      - நாராயணா என்னும் நாமம்             (5)
  
952எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
      எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
      அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
      மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (6)
  
953இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
      இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
      கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
      சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
      - நாராயணா என்னும் நாமம்             (7)
  
954கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
      கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
      பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
      செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
      - நாராயணா என்னும் நாமம்             (8)
  
955குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (9)
  
956மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
      மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
      இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
      துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
      - நாராயணா என்னும் நாமம்             (10)




 
  

திருப்பல்லாண்டு!

திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.

இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.


காப்பு        குறள்வெண்செந்துறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு (1)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)


வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை*
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே.* (3)


ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)


அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)


எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)

 
தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)


உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து *ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)


அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன்* அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)


பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!




 

இசை உலகின் பட்டத்து ராணி!

இசை உலகின் பட்டத்து ராணிக்கு  செப்டம்பர் 16 பிறந்த நாள்.

திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர்.
 
 
”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம்.
 
 
அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.
 

அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும்  தெரியாது!
 
 
அம்மாவின் பாதங்களை  நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.
 

புதன், 29 மார்ச், 2017

மங்களம் அருளும் பங்குனி உத்திரம்!


பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும்.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.  திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும்.  

உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.


புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 




சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். 


ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான்.


ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். 


மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.


மோகினிசுதன் ஐயப்பன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். 

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். 


அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 


கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. 

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. 


இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். 


காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், 


மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. 

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. 


அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. 


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். 

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். 


கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில், 

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர் 
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம். 


மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில்  பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. 


பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான். 

ஸ்ரீ ராம நவமி!


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' 

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். 
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், 

பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...!
ஸஹஸ்ர நாமதத் துல்யம் ராம நாம வராநநே

ஒரு சமயம் பார்வதி அதி விசேஷமான மந்திரத்தை தமக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டாளாம். சிவபெருமான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பார்வதிக்கு உபதேசித்தார்.

ஒரு சமயம் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பினார்கள். பார்வதியால் முழு பூஜையைச் செய்ய இயலவில்லை. மேற்கூறிய ``ஸ்ரீ ராம ராமேதி'' என்ற மந்திரத்தை மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டாளாம்.

இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் கூட விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பூஜித்த பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை :

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். 

வீடுகளில் பாயசம், வடை அத்துடன் நீர் மோர், பானகம், பயத்தம் பருப்பை ஊற வைத்து அதில் வெள்ளரிக்காய், மாங்காய் போட்டுக் கலந்து கடுகு தாளித்து விநியோகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள்!



நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை

ஐஸ்வர்யம் அருளும் சங்கு!

சங்கு பொதுவாகவே லக்ஷ்மியின் அம்சத்தை தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக கூறுவார்கள்.

இறை வழிபாட்டில்  சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும் .


சாதாரணமாக உள்ள சங்கில் ...
அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது .இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது . இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.

பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஊதுவதால் மூலாதார சக்கரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது .மேலும் மூச்சு சீராகவும் ,நுரையீரல் செயல் பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது . சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுப்படுகிறது இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகிறது.

ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார்.

சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, ஐஸ்வர்யம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.


அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம். 


 

15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வங்களும்!

 சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி

சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பகமாலினி

சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும்
அதிதேவதை சித்ரா!







 

ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் - தமிழில்!

அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே. 1


நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே. 2
 
அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும். 3
 
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே. 4
 
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே. 5
 
மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் செளலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா. 6
 
விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே. 7
 
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே. 8
 
சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால். 9
 
சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம். 10
 
வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம் 11
 
பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம் 12
 
தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம் 13
 
மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம் 14
 
சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம் 15
 
தாமரைக் கண்கள் படைத்த தாயே செளபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய் 16
 
கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி 17
 
கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே 18
 
தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே 19
 
கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே 20
 
மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே. 21