திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
தேவாரத் திருப்பதிகம்
திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
தேவாரத் திருப்பதிகம்
6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்551 | வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.1 |
552 | பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.2 |
553 | மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.3 |
554 | வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.4 |
555 | ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.5 |
556 | சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.6 |
557 | பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.7 |
558 | இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.8 |
559 | மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.9 |
560 | நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி அடியும் முடியும் இகலி போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.10 |
561 | உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. இத்தலம் வட நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை. திருச்சிற்றம்பலம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக