புதன், 24 ஜூன், 2015

ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா!

 
 
துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ

துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ

நாமாவளி மிமாம் யஸ்து துர்காயா மம மாநவ
படேத் சர்வ பயாந் முக்தோ பவிஷ்ய தி ந ஸம்சய!  
 
 
 
ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது
ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம்.

இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.
 
 
 
 

ஶ்ரீ சண்டீத்வஜ ஸ்தோத்ரம்!

அஸ்ய ஶ்ரீ சண்டீத்வஜ ஸ்த்ரோத்ர மஹாமந்த்ரஸ்ய மார்கண்டே ருஶி:
அனுஶ்துப் ந்த: ஶ்ரீமஹாலக்ஷ்மீர்தேவதா ஶ்ராம் பீஜம் ஶ்ரீம் ஶக்தி:
ஶ்ரூம் கீலகம் மம வாஞ்சிதார்த லஸித்த்யர்தம் வினியோக:
அஞ்கன்யஸ:
ஶ்ராம் ஶ்ரீம் ஶ்ரும் ஶ்ரைம் ஶ்ரௌம் ஶ்ர: இதி கர ஹ்ருயாதின்யாஸௌ
ஶ்யானன்


ஓம்
ஶ்ரீம் நமோ ஜகத்ப்ரதிஷ்டாயை தேவ்யை பூத்யை நமோ நம:
பரமானந்தரூபாயை நித்யாயை ஸததம் நம: 1

நமஸ்தேஸ்து மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 2

ரக்ஷமாம் ஶரண்யே தேவி -தான்ய-ப்ரதாயினி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 3

நமஸ்தேஸ்து மஹாகாலீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 4

நமஸ்தேஸ்து மஹாலக்ஷ்மீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 5

மஹாஸரஸ்வதீ தேவீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 6

நமோ ப்ராஹ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 7

நமோ மஹேஶ்வரீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 8

நமஸ்தேஸ்து கௌமாரீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 9

நமஸ்தே வைஷ்ணவீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 10

நமஸ்தேஸ்து வாராஹீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 11

நாரஸிம்ஹீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 12

நமோ நமஸ்தே இந்த்ராணீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 13

நமோ நமஸ்தே சாமுண்டே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா   14

நமோ நமஸ்தே நந்தாயை பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 15

ரக்ததந்தே நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 16

நமஸ்தேஸ்து மஹாதுர்கே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 17

ஶாகம்பரீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா  18

ஶிவதூதி நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 19

நமஸ்தே ப்ராமரீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 20

நமோ நவக்ரஹரூபே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 21

நவகூட மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 22

ஸ்வர்ணபூர்ணே நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 23

ஶ்ரீஸுந்தரீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 24

நமோ வதீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 25

திவ்யயோகினீ நமஸ்தே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 26

நமஸ்தேஸ்து மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 27

நமோ நமஸ்தே ஸாவித்ரீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா   28

ஜயலக்ஷ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 29

மோக்ஷலக்ஷ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 30

சண்டீத்வஜமிதம் ஸ்தோத்ரம் ஸர்வகாமபலப்ரதம்
ராஜதே ஸர்வஜந்தூநாம் வஶீகரண ஸாதனம் 32

ஶ்ரீசண்டீ³த்வஜ ஸ்தோத்ரம்

பதினெண் புராணங்கள்!

பிரம்ம புராணங்கள்;

பிரம்ம புராணம்,பிரம்மாண்ட புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம்,மார்க்கண்டேய புராணம்,பவிசிய புராணம்.

வைணவ புராணங்கள்;
விஷ்ணு புராணம்,பாகவத புராணம்,நாரத புராணம்,கருட புராணம்,பத்ம புராணம்,வராக புராணம்,வாமன புராணம்,கூர்ம புராணம்,மச்ச புராணம்,கல்கி புராணம்.

சிவ புராணங்கள்;
சிவமகாபுராணம்,லிங்க புராணம்,கந்த புராணம்,ஆக்கினேய புராணம்,வாயு புராணம்
உபபுராணங்கள் (18):

சூரிய புராணம்,கணேச புராணம்,காளிகா புராணம்,கல்கி புராணம்,சனத்குமார புராணம்,நரசிங்க புராணம்,துர்வாச புராணம்,வசிட்ட புராணம்,பார்க்கவ புராணம்,கபில புராணம்,பராசர புராணம்,சாம்ப புராணம்,நந்தி புராணம்,பிருகத்தர்ம புராணம்,பரான புராணம்,பசுபதி புராணம்,மானவ புராணம்,முத்கலா புராணம்.
 
 

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஜய ப்ரத ஸ்தோத்ரம்!


ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத

 ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
ஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன
 
ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
ஜய தாக்ஷயணீஸூநோ ஜயகாசவநோத்பவ
 
ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித
 
ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித
 
ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத
 
ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர
 
ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித
 
ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ!
 

 ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும்.
கடன் தொல்லை, வியாதி நீங்கும்.
 
 
 
 

சிவ நாமத்தை 2 ஆயிரம் முறை ஜெபித்த பலன் வேண்டுமா?

 
 
 
சிவ நாமம்
 
பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம்
மகாதேவ மகாலிங்க மத்தியார் சுணாசே!
 
 
இதை 6 முறை கூறினால்  சிவ நாமத்தை 2 ஆயிரம் முறை ஜெபித்த பலன் கிடைக்கும் .






 
 
 
 
 

செவ்வாய், 23 ஜூன், 2015

சகல கலா வல்லி மாலை

1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகல கலாவல்லியே!

2. நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்; பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகல கலாவல்லியே!

3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ? உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே! சகல கலாவல்லியே!

4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்; வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே!

5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந் நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்; சகல கலாவல்லியே!

 

6. பண்ணும், பரதமும், கல்வியும் தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்; எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும், கனலும் வெங் காலும் அன்பர்,
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்; சகல கலாவல்லியே!

 

7. பாட்டும், பொருளும், பொருளால் பொருந்தும் பயனும், என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே! சகல கலாவல்லியே!

8. சொல்விற்பனமும், அவதானமும், கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகல கலாவல்லியே!

9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகல கலாவல்லியே!

10. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்; படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!

 

(குமரகுருபர சுவாமிகள் அருளியது)

 

 

 

திங்கள், 22 ஜூன், 2015

சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி)




சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி  (கோபால சுந்தரி)


ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!


பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.



நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணனை  தரிசித்து அருள் பெறலாம்.


கோபால சுந்தரி காயத்ரி:
ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்!


பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு  அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும்.


சகல சௌபாக்யங்களும்  வந்து சேரும்.


கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.


அனைத்து சம்பத்துக்களும் சேரும்.


இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.



பெண்கள் எளிதில் கருத்தரிக்க!

ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, ஈ, டி, ஒமேகா 3, பேட்டி ஆசிட் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த உணவை ஆண், பெண் இருவருமே சாப்பிடவேண்டும். ஏனென்றால் இதில் உள்ள முட்டை மற்றும் காளானில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் டி இருப்பதால் இது பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்திற்கு தேவையான வலுவையும் வீரியத்தையும் தருவதால் விரைவில் கர்ப்பம் உருவாகலாம்.

காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். கருத்தரிப்பதை அதிகரிக்கும் உணவில் மிக முதன்மையானது, சால்மன் மீன்கள். இந்த மீன்களை கழுவி, அதில் இஞ்சியை துருவிப்போட்டு, வினிகர், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊறவைத்து, கிரில் செய்து சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

சீஸ் உணவில் பெண்கள் கருத்தரிக்க தேவையான கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால் ஆண்கள் இதை அதிகம் சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு காம உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் மற்றொரு இயற்கை உணவாக சிப்பி உள்ளது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் எண்ணெய், மிளகாய்த் தூள், பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் கிரில் செய்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்தவரை ஆண்களைவிட பலம் குறைந்தவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்களுடைய உடலை பலமாகவும் திறனாகவும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. கர்ப்பமாவதில் பிரச்சினை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்லி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மாலையில் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

 

திருமகளே வருக! திருவருளே பொழிக!

திருவாரூர் போல ராமேசுவரம் தலத்திலும் லட்சுமி முக்கியத்துவம் பெறுகிறாள். அதன் வரலாற்றை கீழே பார்க்கலாம்.
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள். இவளை, சாந்தி லட்சுமி, பூதிலட்சுமி, பலலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள்.

யாக குண்டங்களின் வடமேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு மண்டலரூப லட்சுமி என்று பெயர்.

ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார். அந்த தாண்டவம் “லட்சுமி தாண்டவம்“ என்று அழைக்கப்பட்டது. இதுபற்றி திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) திருத்தளிநாதர்கோவில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்தகோவில் “ஸ்ரீதளி” என்றும், ஊர் “திருப்புத்தூர்” என்றும், திருக்குளத்திற்கு “ஸ்ரீதளிலட்சுமி தீர்த்தம்“ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“ஸ்ரீ”, “திரு” ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமியைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி லட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர்கோவில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள். இவை லட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு லட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.

மகாலட்சுமி, திருவாரூர் தியாகராஜப்பெருமானை வழிபட்டாள். இதனால், இக்கோயிலை “கமலாலயம்“ என்பர். கோவில் முன்புள்ள குளத்திற்கும் “கமலாலய தீர்த்தம்“ என்றே பெயர். “கமலம்“ என்ற சொல்லுக்கு “தாமரை” என்று பொருள். மகாலட்சுமி தாமரையில் வீற்றிருப்பவள் என்பதால், அவளை கமலா என்றும் அழைப்பர்.

தியாகராஜப்பெருமான் வீற்றிருக்கும் கொலு மண்டபத்திற்கு பின்புள்ள கருவறையை “லட்சுமி வாசம்“ என்று அழைக்கின்றனர்.
திருவாரூர் போல ராமேசுவரம் தலத்திலும் லட்சுமி முக்கியத்துவம் பெறுகிறாள். அதன் வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்கு புத்திரப் பேறு இல்லை. குழந்தை பாக்கியம் வேண்டி, இராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடினான்.அப்போது அவனுக்கு அருள எண்ணிய மகாலட்சுமி, அங்குள்ள சேது தீர்த்தக்கரையில் குழந்தையாகத் தவழ்ந்தாள். தனித்திருந்த குழந்தையைக்கண்ட மன்னன், அவளை எடுத்து வளர்த்தான். “சேதுலட்சுமி” எனப்பெயரிட்டான்.

அவள் தனது பருவ வயதில் மகாவிஷ்ணுவையே கணவராக அடைய வேண்டி, இங்கு ஒரு தீர்த்தம் உண்டாக்கி ராமநாதசுவாமியை வணங்கினாள். அவளை மணக்க எண்ணிய மகாவிஷ்ணு, ஒருசமயம் இளைஞனின் வடிவில் இங்கு வந்தார். சேதுலட்சுமியின் கையைப் பிடித்து வம்பு செய்தார். அரண்மனைக்கு தகவல் பறந்தது.

மன்னன் கோபத்துடன் வந்து, திருமாலைக் கைது செய்து சிறையில் அடைத்தான். அவர் தப்பிச்செல்ல முடியாதபடி காலில் சங்கிலியைக் கட்டிவிட்டான். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, தானே இளைஞனாக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த மன்னன், தன் மகளை அவருக்கே மணம் முடித்து தந்தான். மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் மன்னனுக்கு காட்சி தந்தான்.

இவ்வாறு மன்னனால் சிறைப்படுத்தப்பட்ட சேதுமாதவருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. இவரை, “ஆதிமாதவர்” என்றும் அழைக்கிறார்கள். சுவாமியின் காலில் தற்போதும் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற இத்தலத்தில் லட்சுமியின் பெயரில் ஒரு தீர்த்தம் (தெப்பக்குளம்) உள்ளது. ராமேஸ்வரத்திலுள்ள 22 தீர்த்தக்கட்டங்களில், இதுவே முதல் தீர்த்தமாகும். தீர்த்தநீராடுபவர்கள் இதில் நீராடியபிறகே, பிற தீர்த்தங்களில் நீராடுகிறார்கள். இத்தீர்த்தக் கரையில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி உள்ளது.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் உற்சவர் லட்சுமி அலங்கரிக்கப்பட்டு, உட்பிரகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் விழா தமிழ்நாட்டில், வேறு சிவாலயங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே, ஸ்ரீ துவாரம், லட்சுமி துவாரம், வாருணி துவாரம், கீர்த்தி துவாரம் என்று அழைக்கிறார்கள்.

செல்வம் தரும் லக்ஷ்மி குபேர பூஜை!

 

 
லக்ஷ்மி குபேர விரத வழிபாட்டை முறையாக கடைபிடித்து வந்தால் வாழ்வில் குறைவில்லா செல்வத்தை பெறலாம்.                              

திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப்பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தை யும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார். அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
 


தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.

வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.
 

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.

இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத் தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என விரதமிருந்து பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.

குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். ‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்’ என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும்.

அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். எந்திரத்தின் மீது நேரடியாக விளக்கு மாற்றால் பெருக்கக்கூடாது. கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும்.

அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.
 
 

ஜகம் போற்றும் ஜகந்நாதர்!

 ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில், கடற்கரைத் தலமாக அமைந்துள்ளது பூரி நகரம். பூரி என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஆண்டுதோறும் அங்கு ஒடியா பஞ்சாங்கத்தின்படி ஆஷாடம் சுக்லபட்சத் துவிதியை நாளில் நடைபெறும் ரதயாத்திரை விழாதான்! அரிய ஒன்றைச் சுமந்து செல்லும் வண்டியாகவும் எதிர்கொள்ளும் அனைத்தையும் அழிக்கும் வல்லமையுடைய பெரும் சக்தியாய் ஆர்ப்பரித்து உருண்டோடி வரும் ஜகந்நாத பிரபுவின் ரதத்தை மேல் நாட்டவர் வியப்புடன் ‘ஜகர்நாட்’ எனப் பெயரிட்டல்லவோ அழைக்கின்றனர்.

தென்னகக் கோயில்களில் கொண்டாடப்படும் தேர்த் திருவிழா போன்று வட இந்திய மாநிலங்களில் ரதோத்ஸவம் நடத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து பலரிடம் நிலவுகிறது. அது தவறு. ஜகந்நாத கே்ஷத்ரங்கள் எனப் போற்றப்படும் பூரி (ஒடிஷா) ரத யாத்திரையுடன், ஜகந்நாத்பூர் (ராஞ்சி), சீராம்பூர் (மே. வங்கம்), அசி படித்துறை ஜகந்நாதர் ஆலயம் (காசி) ஆகியவற்றில் அதேதினத்திலும் மற்றும் புவனேஸ்வர்லிங்க ராஜ் ஆலயத்திலும் ஸ்ரீராமநவமிக்கு முதல்நாள் ஸ்ரீராம ரால் முன்னின்று நடத்தப்படுவதாக அறியப்படும் ‘அசோகாஷ்டமி’ தேர்த்திருவிழாவும் மிகப் பிரபலம்.

ஸ்ரீகே்ஷத்ரம், புருஷோத்தம தாம், ஜகந்நாத் தாம், சங்கு வடிவில் அமைந்துள்ளதால் சங்கு கே்ஷத்ரம் என வெவ்வேறு பெயர்களால் இப்புண்ணியத் தலம் அறியப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் கூறுவது போல், ஜகந்நாதர் ஓர் உத்தம புருஷன். மாந்தருக்குள் மாணிக்கம். ஒருவன் எப்படி நற்பண்புகள், நல் லொழுக்கம் மற்றும் உள்ளத் தூய்மையுடனும் வாழ் வில் ஈடுபட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இங்கு சகுண - தாரு - பிரம்மமாக எழுந் தருளி சேவை சாதிக்கின்றான். தனது ‘தாவூ’ (அண்ணன்) பலராமனுக்கும், சகோதரி சுபத்ராவுக்கும் சிறந்த சகோதரனாகவும்தன் தேவி ‘ஸ்ரீ’க்கு ஒப்புயர் வற்ற பதியாகவும் விளங்குகிறான்.

அது மட்டுமா? மார்கழி மாதம் அமாவாசையின் போது தொடர்ந்து மூன்று நாட்கள், தனது முந்தைய அவதாரங்களின்போது பெற்றோர்களாகத் திகழ்ந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆம்... முதலில் காஸ்யபர்-அதிதி (வாமனாவதாரம்), இரண் டாவதாக தசரதர்-கௌசல்யை (ராமாவதாரம்), மூன்றாவதாக, வசுதேவர்-தேவகி, நந்தகோபன்- யசோதை (கிருஷ்ணாவதாரம்) என்று! மன்னன் இந்த் ரத்யும்னன், ராணி குண்டிச்சா ‘மௌசி’யுடன் சேர்ந்து சிராத்தக் கடமையைத் தவறாது மேற்கொள்கிறான். அதேசமயம், தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கும் அருளுகிறான்.

இவ்வாலயத்தைப் பற்றிப் பல அதிசய நிகழ்வுகள் கூறப்படுகின்றன. அவற்றைப் பல நூல்கள் வாயிலாகப் படித்தும், கேட்டும், நேரடியாக அனுபவித்தும் அறிந்து கொண்ட விவரங்கள்.
பூரி நகரின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் நம்மை நோக்கியே தரிசனம் தரும்.

கடற்கரைப் பிரதேசங்களில் சாதாரணமாக, பகலில் கடலிலிருந்து நிலம் நோக்கிக் காற்று வீசும். இரவில் நிலத்திலிருந்து கடல் நோக்கிக் காற்று வீசும். ஆனால், இங்கோ நிலைமை தலைகீழாய் இருப்பது அதிசயம்.

கோபுர உச்சியில் இருக்கும் பிப்பிலி வண்ணக் கொடி எப்போதும் காற்று வீசும் திசைக்கு எதிர் திசை யில்தான் படபடக்கும்.

பறவைகளோ, விமானங்களோ ஆலயத்தின் மேற்பகுதியில் பறப்பதில்லை.

தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் தரையில் விழாததுபோல், இக்கோபுர மாடத்தின் நிழலும் எந்நேரத்திலும் பூமியில் படாது.

மடைப்பள்ளியில் அன்றாடம் தயாரிக்கப்படும் உணவின் அளவு ஆண்டு முழுவதும் ஒரே சீராக, குறிப்பிட்ட விகிதத்தில்தான் இருக்கும். ஆனால், அதுவே சில ஆயிரம் பக்தர்களுக்கோ அல்லது லட்சோப லட்சம் மக்களுக்கோ அன்னமிட ஏற்றதாக அமைந்துவிடும். குறையவும் குறையாது. அதே சமயம் மிஞ்சிப் போய் வீணாகாமலும் இருக்கும்.

மடைப்பள்ளியில் நவீன உபகரணங்களைக் கொண்டு இல்லாமல், புராதன முறையில் விறகு அடுப்பில்தான் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. ஏழு மண் கலன்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து நீராவி முறையில் சமைக்கப்படுகிறது. மேல் பானையிலுள்ள உணவு முதலில் வேகும். அதன்பின் மற்றவை பதமாகும். கடைசியில்தான் அடிப்பானையி லுள்ள உணவு பத நிலையை அடையும்.
தயாரான பிரசாதம் மண் சட்டிகளில் வைத்து காவடி எடுப்பதுபோல் தோளில் சுமந்து சுவாமி கருவறைக்கு எடுத்துச் செல்லுகையில் பிரசாதத்திலிருந்து மணம் எழாது. ஆனால், கோபிநாதனுக்குப் படைக்கப்பட்டுத் திரும்பி பக்தர்களுக்கு அன்னமிட வருகையில் உணவின் மணம் காற்றில் பரவி நம் மூக்கைத் துளைக்கும். ஆம். இப்போது அது உலக நாதனால் ஏற்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு விட்டதே அதற்குக் காரணம்.

ஆலயத்தின் உள்ளிருந்து சிங்கத்துவார முகப்பு கோபுர வாசல் முதல்படியைத் தாண்டும் போது கடல் அலையோசை நம் காதுகளில் விழாது. ஆனால், அதே படியை ஆலயத்தின் வெளியிலிருந்து வந்து தாண்டும்போது அலையோசையின் இரைச்சலை முக்கியமாக மாலை வேளைகளில் நன்கு கேட்கலாம்.

ஸ்ரீஜகந்நாதர் ரத யாத்திரை மேற்கொள்ளும் வழி யெங்கும் அவரை மகிழ்விக்க கோபாலர்களான பக் தர்கள் அவனது புகழைப் போற்றித் துதித்த வண்ணம் இருக்கின்றனர். அதைக்கேட்டு மனம் குளிர்ந்துபோகும் கோவிந்தன் அவர்களுக்கு அருளாசி வழங்க விழைகிறான். 
 
அவன் ஒரு கருணைக் கடல். ஈரேழு உலகுக்கும் உற்ற தோழன். அப்படிப்பட்ட ஸ்ரீதேவி சமேத ஜகந்நாதப் பிரபு, என் கண்களுக்கு விருந்தாக எப்போதும் என் முன் சேவை சாதிக்கட்டும்!" என்று ஸ்ரீஆதிசங்கரர் தனது ஸ்ரீஜகந்நாத அஷ்டகத்தில் இறைஞ்சுவதைப் போல் நாமும் போற்றி வணங்குவோம்.
 
 


 

நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்!


 சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.  சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.  பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள்.  அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.
நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-
 
மனோன்மணி
 
பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.
 
சர்வபூதமணி
 
உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.
 
பலப்பிரதமணி
 
சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.
 
 
கலவிகரணி
 
வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.
 
பலவிகரணி
 
சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.
 
 
காளி
 
காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
 
 
ரவுத்திரி 
 
நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள். 
 
 
சேட்டை
 
நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
 
 
வாமை
 
மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.


 

உத்திரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாதர்!

உத்திரகோசமங்கை!

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.


திருஉத்தரகோசமங்கை
இறைவர் திருப்பெயர்  : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.
தல மரம்   : இலந்தை.
தீர்த்தம்    : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர்   : மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன்,மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
திருவாசகப் பாடல்கள்  : திருவாசகம் - "நீத்தல் விண்ணப்பம்"

 
தல வரலாறு

 
பாண்டிய நாட்டில் உள்ள தலம்.
மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
 
உத்தரம் – உபதேசம்; 
கோசம் – ரகசியம்; 
மங்கை – பார்வதி. 
 
பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
 
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
 
இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
 
சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு – ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.
 
இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : – ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து “மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக!
 
எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்” என்று வானொலியாக அருள் செய்தார்.

 மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி ‘யார் பெற்றதோ இது’ என்று வினவினான். வண்டோதரி, “யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்” என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் – இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் – குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.
 
மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார்.மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார்.இதனால் பெருமானுக்குக் “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்கலாயிற்று.
 
ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் – அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.
 
சிறப்புக்கள்
 
அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌ¤யில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி ‘மொய்யார்தடம் பொய்கை’த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
 
திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
 
கீர்த்தித் திருவகவலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் – ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, ‘மகேந்திரம்’ என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே “மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்” என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
 
இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
 
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.
 
தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
 
உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.
 
பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
 
மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.
 
சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.
 
நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
 
பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
 
நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.
 
அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
 
இங்குள்ள கூத்தப்பிரான் – நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் – முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.
 

 
இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)
 
மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக – அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.
 
அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.
 
நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.
 
நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.
 
உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
 
நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் – உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
 
இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.
 
திருச்சிற்றம்பலம்