வியாழன், 30 ஜூன், 2016

சுகபோக வாழ்வருளும் சுந்தரகாமாட்சி!

இறைவன் சுயம்புலிங்க வடிவாய் அருளாட்சி புரிந்து வரும் திருத்தலம் சிறுகரும்பூர்.

 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில், சுந்தர காமாட்சி சமேதராக  திரிபுராந்தக ஈஸ்வரர் பேரருள் புரிந்து கொண்டிருக்கிறார். கஜபிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட இக்கோயில் சோழமன்னர் களால் 10ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது என்கின்றன இக்குள்ள கல்வெட்டுகள். அன்னியர்கள் படையெடுப்பின்போது இத்திருக்கோயிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள் இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் என்பவரால் ஆலயம் வெளிக்கொணரப்பட்டது.

அம்பிகை சுந்தரகாமாட்சி  பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய் அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். இத்தல நாயகி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர்.

அம்பிகை கோடி சூரியப் பிரகாசத்துடன் ஆனந்தமயமானவளாய், தன்னை நாடிவந்து தன் தாள்களைப் பணியும் அன்பர்களுக்கு சகல சம்பத்துக்களையும்  அள்ளித்தருகிறாள். தாயாய், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி  அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள்.

தேவியை விழி  இமைக்காமல் தரிசித்துகொண்டே இருக்க மனம் விரும்புகிறது. அம்பாளின் எதிரில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் உள்ளது.

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இக்கோயில். ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தூரம்  அல்லது காவேரிப்பாக்கத்தில் இறங்கினால் மூன்று கி.மீ. தொலைவு. ஓச்சேரியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

 

திருச்செந்தூரின் நாழிக்கிணறு!

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு.



நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர... இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
See more








திருசெந்தூர் முருகன் பன்னீர் இலை விபூதி!


திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி.



பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ; 

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவரால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார்.

அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.பிரசாதத்தை உடலில் பூசி உட் கொண்டார்..சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது.

அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட  ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம்.

இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும்.முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும்.பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது. முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.


நல்வழி காட்டும் சாஸ்த்திரம்!

சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோல தான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும் போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.


கொடி மரத்தின் தெய்வ சக்தி


கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதேபோல ஆலயத்தில் இருக்கும் கொடிமரத்துக்கும் மகத்துவம் இருக்கிறது. நாம் சில நிமிடமாவது கொடிமரத்தின் அருகே நின்று நம் பிராத்தனைகளை மனதில் நினைத்தால் இறைவன் எங்கிருந்தாலும் நமது வேண்டுதலும், பிராத்தனைகளும் கடவுளிடம் தடையின்றி அடைகிறது. கோயிலுக்குள் மூல விக்கிரக தரிசனம் அவசியம் என்பதுபோல கொடிமர தரிசனமும் அவசியம். கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும். எப்படி விஞ்ஞானிகளுக்கு தகவல் தர சாட்டிலைட் உதவுகிறதோ அதுபோல இறைவனுடைய சாட்டிலைட் இந்த கொடிமரம். வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்துவைத்திருக்கும். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்களை நீக்கி இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெற்று தரும்.


தென்திசையை பார்த்து உட்காரலாமா?


தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும. சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது. எமதர்மராஜரின் அருட்பார்வை பார்க்கும்படி தென்திசையை நோக்கி உட்கார்ந்தால் உடல் மெலிந்து முகம் வசிகரம் இல்லாமல் இருக்கும். காமாச்சி அம்மன் படத்தை பார்க்க பார்க்க கலை இழந்த முகமும் கலையாக மாறும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தென்திசை பார்த்து உட்கார்ந்தால் முகத்தில் வசீகரதன்மை போய்விடும். அதனால் கிழக்கு,மேற்கு,வடக்கு திசைகளை நோக்கி உட்காருவது நன்மை தரும். ஆனால் தூங்கும் போது கிழக்கு, அல்லது தெற்கு திசையில் தலைவைத்து உறங்கலாம்.


வீட்டில் தங்க நகை சேர வேண்டுமா?


வீட்டில் தங்கநகையாக சேர வேண்டுமானால் அட்சய திதி வரைக்கும் காத்திருக்கவா முடியும்.? இதற்கு ஒரு வழி இருக்கிறது. பரணி, பூரம்,பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட அட்சய பாத்திரம் போல நகையாக வாங்கும் யோகம் வரும்.


அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரத்தோடு இந்த ஹோரையும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.


 இராஜயோகம் தரும் நெல்லிக்காய்


 இராஜயோகம் வரவேண்டும் என்றால் நெல்லிக்காயை தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின் உள்ளங்கையில் உருவானது. அதனால் நெல்லிவாசம் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்யும். பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிகாயை தேய்து குளித்தால் இராஜயோகம் வரும்.


புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?


புது துணியை அணியும் முன் அந்த துணியின் ஓரத்தில் மஞ்சளை தடவிய பிறகு அணியவேண்டும். எதனால் இதை செய்யவேண்டும் என்றால், கடைகளில் பலபேர் அந்த துணியை எடுத்து பார்த்து இருப்பார்கள். ஒருவேலை அந்த துணியை அணிந்தும் பார்த்து இருப்பார்கள். அவர்களின் தோஷம் அந்த புது டிரஸ் போடுபவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மஞ்சளை சின்னதாக தடவி அணிந்தால் தோஷங்கள் நீங்கும்.






திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்!


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.




நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.


ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.


அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.


கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.


காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.


ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).


சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.


மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.


உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.


அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.


மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.


கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.


பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.


 திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே  கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.


பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.


திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.


கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.


தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.


தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.


பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.


மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.


ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.


தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.


திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.


லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!


“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”









காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்!


ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தல வரலாறு:

கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.

தலபெருமை:

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் :

ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.
ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.

கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

திருவிழா:

பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

பொது தகவல்:

மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.
இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

பிரார்த்தனை

இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.




ஆனந்த வாழ்வருளும் ஆறு விரல் பாத தரிசனம்!

ஒரு முறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. கலங்கிய நான்முகன் சாபவிமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது ‘‘மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உனக்கு சாப விமோசனம். உடனே பூலோகத்திற்குச் செல்வாயாக!’’ என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். தாம் இவ்வூரில் எழுந்தருள வேண்டும், நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று நாராணன் ஏற்கெனவே  தீர்மானித்திருந்தார். அதனாலேயே இந்த அரசர் கோயிலில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். நாராணன் எழுந்தருளிய விஷயத்தைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார்.





இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நான்முகன் கையில் கமண்டலத்துடன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி மாதவனின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும், பெருமாளையும் ஒரு சேர தரிசித்து சாபவிமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள், ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே  புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை செய்துகொண்டார். பிறகு, ‘ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன’ என காவலாளிகளிடம் சொல்லி பெருமாள் புறப்பட்டார்.

ஒரு ராஜாங்க விஷயமாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் வினவ, நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்யகர்மாவிலிருந்து தான் தவறிவிட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். ஆனால், பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப  முடியும் என்று கூற அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது. நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால், பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம்; பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் பிராட்டி. பரமாத்மா, ‘‘இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை, கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன்.

இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து, அவளை மகிழ்வித்தார்.

அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி அவருக்கு உணவிட்டு, உபசரித்து, தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். 

ஆலய முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள்.

இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சந்நதியில் அருளே வடிவாய் அழகே உருவாய் வீற்றிருக்கிறாள் பிராட்டி. பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரியாக மனதை கொள்ளை கொள்கிறாள்.



மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்ரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். அழகு ததும்பும் அன்னையின் திருவடிகளை மனம் குவிந்து தரிசிக்கலாம். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. அச்சமயம் தேவியை வணங்குவோர்க்கு கல்வி, வியாபாரம், திருமணம் சிறக்கிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

இந்த மண்டபத்திற்கு வெளியே வலதுபுறம் அட்சய கணபதி, வைணவ சம்பிரதாயப்படி தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார்.

அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டாராம். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாளாம். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம்.

சுந்தரமகாலட்சுமியின் சந்நதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பாராம்.

தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி, குபேரன், காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக வீற்றருள்புரிகின்றனர். 

 அடுத்து பெருமாள் தரிசனம். அவர் சந்நதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆகியோரும் உறைகின்றனர். பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர்.

செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். படாளம் கூட்டு ரோடில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் கோயிலுக்குச் செல்லலாம்.    


 

அளவற்ற செல்வம் அருளும் அபரா ஏகாதசி!

 ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி, அபரா ஏகாதசி. இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர்.

இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.

இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.

அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை அளிக்க வல்லது என்றார்.

3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

குரு பகவான் கோட்சாரத்தில் இருக்கும் வேளையில் கோமதி நதியில் நீராடுதல், ஈசனை சிவராத்திரி புண்ணிய நாளில் வாரணாசி நகரில் வணங்கி வழிபடுதல், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

ஒ யுதிஷ்டிரா !! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள் !! என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை நல்ல முறையில் அரசாண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான்.

ஒருநாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரசமரத்தின் அடியில் புதைத்து விட்டான். பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான்.

அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான். அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான்.

ஒருநாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவோபலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார். அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி அதனை நல்வழிபடுத்தினார்.

அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி, இத்தகு கொடிய பிரேத ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது. அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதிமுறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை அடைந்தான் என்று பகவான் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும் உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும் என்றார்.

எனவே ஒ யுதிஷ்டிரா !! தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த விரதத்தை கடைபிடிக்காத ஒருவர், ஒரு மகா சமுத்திரத்தில் தோன்றும் பல நீர்குமிழிகள் போன்று ஜனன-மரண சக்கரத்தில் சிக்கி, மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்றார்.

எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடைபிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார்.

எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் நம்முடைய வாழ்கை அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.

மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மகாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ / படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

***ஓம் நமோ பகவதே வாசுதேவாய***



புதன், 29 ஜூன், 2016

மகிமை பொருந்திய மாங்காடு காமாட்சி!

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்).


அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.


காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். பிரார்த்தனை இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.


 ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். நேர்த்திக்கடன்: அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். தலபெருமை: ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் :


இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்


.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். அன்னையின் தவக்கோலம் : ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது.


நான்கு அம்பாள் தரிசனம் : மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.


 அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள்.


 பக்தனுக்கே முதலிடம்... : திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.


அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன். கணையாழியுடன் பெருமாள்: சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார்.


எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள். நிறைமணி தரிசனம்: பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.


புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது.


தல வரலாறு: கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.


அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது. சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.




aanmeegamarivom.blogspot.in









சகலமும் அருளும் சப்த கன்னியர்!

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.


தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா


மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.


மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.


மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


கௌமாரி
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்


தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரைபந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினிபந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயாமயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெளகட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!


மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.


வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.


மந்திரம்
ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்


வாராஹி
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்


எருமையை வாகனமாக உடையவள்.கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.


வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார்


.தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.


சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.


சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


இந்திராணி:
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரைஇந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:


மந்திரம்
ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.


சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல;

தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.


தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரைமுண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹாசூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதேநிஷண்ணசுவா!ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவாசாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.


மந்திரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்





வெற்றிகளை அருளும் விநாயகி!


கஜமுகம் கொண்ட இப்பெண் தேவதையை, விநாயகி என்ற பெயரை மாத்திரம் இலிங்க புராணம் (02-27-215) கூறுகிறது. 

ஸ்காந்த புராணம் இவளை கஜானனை என்று அழைக்கிறது. 

விஷ்ணு தர்மோத்ர புராணம் (1-226-6) மாத்ரு கணங்களில் கணேசினியும் ஒருவள் என்கிறது. 



அந்தகாசூரனின் குருதியைப் பருக, சிவனால் படைக்கப்பட்ட தேவதையே இவள் என்கிறது மத்ஸ்ய புராணம் (179-18). 

பெண் தெய்வ நாமாக்களை கூறும் வன துர்கோபநிஷத் எனும் கிரந்தத்தில் இவள் நாமம் கணேஸ்வரி என்று கூறப்பட்டுள்ளது.

கஜானனி, கஜானனை, கணேசினி, கணேஸ்வரி, விக்நேஸ்வரி, விநாயகி, லம்போதரி, ஐங்கிணி, வைய நாயகி  என்ற பெயர்களும் உண்டு. 



 லலிதாம்பிக்கைக்கு 64 கோடி யோகினிகள், பரிவார தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள் என்று லலிதா ஸகஸ்ர நாமம் கூறுகிறது. 

பெண் உருவம் கொண்ட விநாயகி, இந்த யோகினிகளில் ஒருவர் என்று வட மாநிலத்தார் கருதுகின்றனர். 



வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். 

யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். 


தென்னாட்டிலோ அவளை ‘ஸ்ரீவாஞ்சா கல்ப லதா ஸ்ரீவித்யா கணபதி’ என்று சக்தி ரூபமாக பாவித்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் அவளை வழிபடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 

அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.


குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது.

இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. 

இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். 

நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள். 



சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன.

இதில் ஒன்று விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கின்ற சிற்பமாகும். விக்னேஸ்வரி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இவற்றைத் தவிர, திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும்  சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன .




சகல செல்வங்களும் தரும்!

"அபிராமி அம்மைப் பதிகம்" -(இரண்டாவது)


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
     கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும்,
     விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்,
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
     மணி மிடறும், மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
     இலங்கு கர தலமும், விரல் அணியும் அரவும்,
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும்,
     பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்
     புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்;
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (1)

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலச
     லோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி!
     சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி!
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோத்ரி! அமலை!
     செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி!
     அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி!
     கௌமாரி! உத் துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புய
     பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி!
வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர்
     திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (2)

வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும்,
     அயில் விழிகளும், வள்ள நிகர் முலையும், மான் நடையும்,
     நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார்
பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும்
     எண்ணி, எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல்,
     மாயப்ர- பஞ்ச வாழ்வு உண்மை என்றே,
ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவது
     அல்லாமல், உன்றன் அம்புயப் போது எனும் செம் பதம்
     துதியாத அசடன் மேல் கருணை வருமோ?
மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ
     சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (3)

நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள்,
     நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்,
     நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும்
இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது இரங்கி,
      அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்,
      மெய்யான மொழி இ•து;உன் இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள்
      குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி!
      விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!
மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல,
      வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (4)

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்து
      உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்,
      தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும்
அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் இவ்
      அடிமைபால் கருணை கூர்ந்து, இங்கு அஞ்சேல் எனச் சொல்லி,
      ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக;
இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகில
      புவனத்தையும் இயற்றி, அருளும் திறம் கொண்ட நீ,
      ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ?
வரு நாவலூரர் முதலோர் பரவும், இனிய புகழ் வளர்
      திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (5)

எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
      ஏறிட்டு ஒறுக்க, அந்தோ! எவ்விதம் உளம் சகித்து
      உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்,
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான்
      அனுபவித்தது இல்லை; நாடு எலாம் அறியும், இது கேட்பது ஏன்?
      நின் உளமும் நன்றாய் அறிந்து இருக்கும்;
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன்
      ஆனாலும், நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து,
      எனது புன்மையை அகற்றி அருள்வாய்;
மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும்,
     இசை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (6)

தெரிந்தோ, அலாது, தெரியாமலோ, இவ் அடிமை
     செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
     கணக்காக வையாது, நின் திரு உளம் இரங்கி, மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து,
     இனல் படாது, நல் வரம்அளித்துப், பாதுகாத்து அருள் செய்ய
     வேண்டும்; அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன், போதன், மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
     பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி!
     புராணி! திரி புவனேசுவரி!
மருந்தினும் நயந்த சொல் பைங் கிளி! வராகி! எழில்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (7)

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா
      வேண்டினும், மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும்,
      தீமை ஆம் வழியினில் செல்லாமலும்,
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண்
      வம்பு புரியாமலும், மிக்க பெரியோர்கள் சொலும்
      வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத், தமியேனுக்கு
     அருள் புரிந்து, சர்வ காலமும் எனைக் காத்து
     அருள வேண்டினேன்; சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (8)

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்,
     அவர்கள் கேட்டு, இவ் இன்னல் தீர்த்து, உள்ளத்து இரங்கி,
     நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது; நின்
உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின், உதவாத
     நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்;
     அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து,
முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
     நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து, சடுதியில்
     காத்து, ரட்சித்தது ஓர்ந்து,
வனசம் நிகர் நின் பாதம் நம்பினேன், வந்து அருள் செய்;
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (9)

கரு நீல வடிவமார் மாடு ஏறி, உத்தண்ட கன தண்ட
     வெம் பாசமும், கைக் கொண்டு, சண்ட மா காலன் முன் எதிர்க்க,
     மார்க்கண்டன் வெகுண்டு நோக்க,
இரு நீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில்
      இன்பு கொண்டு, அருச்சனை செய, ஈசன், அவ் இலிங்கம் பிளப்ப,
      நின்னொடு தோன்றி, யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெரு நீல மலை என, நிலத்தில் அன்னவன் விழப்,
      பிறங்கு தாளால் உதைத்துப், பேசு முனி மைந்தனுக்கு அருள்
      செய்தது, உனது அரிய பேர் அருளின் வண்ணம் அலவோ?
வரு நீல மட மாதர் விழி என்ன, மலர் வாவி வளர்
      திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (10)

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
      மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
      துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
      அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
      துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த
     வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
     திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!
(11)






அபிராமி அம்மை பதிகம் - 1

காப்பு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு

நூல்

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
     ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
      குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
      தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
      மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
      ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
      துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
      பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
      ஆதி கடவூரின் வாழ்வே!
      அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
      அருள் வாமி! அபிராமியே! (1)

கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும்,
      கரிய புருவச் சிலைகளும்,
      கர்ண குண்டலமும், மதி முக மண்டலமும்,
      நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்,
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும்,
      சிறிய கொவ்வையின் கனி அதரமும்,
      குமிழ் அனைய நாசியும், குந்த நிகர்
      தந்தமும் கோடு சோடான களமும்,
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும்,
     மேகலையும், மணி நூபுரப் பாதமும்,
     வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாக
     வல் வினையை மாற்றுவாயே;
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல
     நிறை ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (2)

மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து,
      வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமல
      விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ-
செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து,
      மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும்,
      மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர்
      வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழ
      விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்;
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே!
      ஆதி கடவூரின் வாழ்வே!
      அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
      அருள் வாமி! அபிராமியே! (3)

மறி கடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும்,
      மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும்,
      மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்,
     புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவனையும்,
     அரையில் புலி ஆடை உடையானையும்,
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்,
     பழைமை முறைமை தெரியாத நின்னை-
     மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
     மொழிகின்றது ஏது சொல்வாய்?
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (4)

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர,
      அருள் மழை பொழிந்தும்,
      இன்ப வாரிதியிலே நின்னது அன்பு எனும்
      சிறகினால் வருந்தாமலே அணைத்துக்,
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
      கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்
      புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்,
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்
     உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை
     என்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ?
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (5)

பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு
     பல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும்,
     அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும்,
மல்கும் சராசரப் பொருளுக்கும், இமையாத வானவர்
குழாத்தினுக்கும், மற்றும் ஒரு மூவருக்கும், யாவருக்கும்,
அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே,
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும்,
     மிகு நவ நிதி உனக்கு இருந்தும்,
     நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால்,
அந் நகைப்பு உனக்கே அல்லவோ?
அல் கலந்து, உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை,
     ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே! (6)

நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று, நித்தமாய்,
முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்து இரண்டு
அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்,-
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால் வேசற்று,
     இலச்சையும் போய், வெண் துகில் அரைக்கு அணிய
     விதியற்று, நிர்வாண வேடமும் கொண்டு, கைக்கு ஓர்
ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று,
     உன்மத்தன் ஆகி, அம்மா! உன் கணவன் எங்கெங்கும் ஐயம்
     புகுந்து, ஏங்கி, உழல்கின்றது ஏது சொல்வாய்?
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (7)

ஞானம் தழைத்து, உன் சொரூபத்தை அறிகின்ற
     நல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து, உவந்து,
     அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு,
ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம்
     இல்லாமலே துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து,
     நெஞ்சு இருள் அற, விளக்கு ஏற்றியே-
வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என்
     அகத் தாமரைப் போதிலே வைத்து, வேறே கவலை அற்று,
     மேல் உற்ற பர வசம் ஆகி, அழியாதது ஓர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
     ஆதி கடவூரின் வாழ்வே?
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (8)

சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாய் ஆகில்,
     எனக்குத் தாய் அல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ?
     எனது சஞ்சலம் தீர்த்து, நின்றன்
முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி, என் முகத்தை உன்
     முந்தானையால் துடைத்து, மொழிகின்ற மழலைக்கு
     உகந்துகொண்டு, இள நிலா முறுவல் இன்புற்று, அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு, அருள் மழை பொழிந்து,
     அங்கை கொட்டி, வா என்று அழைத்துக்,
     குஞ்சர முகன், கந்தனுக்கு இளையன் என்று எனைக்
     கூறினால், ஈனம் உண்டோ?
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (9)

கைப் போது கொண்டு, உன் பதப் போது தன்னில் கணப்
     போதும் அர்ச்சிக்கிலேன்; கண் போதினால், உன் முகப் போது
     தன்னை, யான் கண்டு தரிசனை புரிகிலேன்;
முப் போதில் ஒரு போதும், என் மனப் போதிலே முன்னி,
     உன் ஆலயத்தின் முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்;
     மோசமே போய் உழன்றேன்;
மைப் போதகத்திற்கு நிகர் எனப் போது எரு-
     மைக் கடா மீது ஏறியே, மா கோர காலன் வரும்போது,    
     தமியேன் மனம் கலங்கித் தியங்கும்
அப் போது, வந்து உன் அருட்போது தந்து அருள்;
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (10)

மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி
     ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த,
     மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும்
     துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,
     பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த,
     வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை
     நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (11)