1.நூல் புட்டு
2.முளைவிட்ட கடலக்கறி.
3.பாபுட்டு
4.கலவைக் கூட்டு.
5.அரிசி ரொட்டி
6.ராஜ்மா
7.சிவப்புக் கொழுக்கட்டை
8.மல்லிக் கொழுக்கட்டை
9.இஞ்சிக் கொழுக்கட்டை
10.கதம்ப துவையல்
11.ரோஸ் மட்டையரிசிப் பாயாசம்.
1.நூல் புட்டு:-
தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், வெந்நீர் – ஒரு கப்
செய்முறை:- பச்சரிசியை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். அதில் உப்பைச் சேர்த்துக் கலக்கி கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கரண்டிக் காம்பால் கலக்கவும். நன்கு கலந்து லேசாக ஆறியதும் எண்ணெய் தொட்டு உருண்டைகளாக உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லிப் பாத்திரத்தில் பிழிந்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
2.முளைவிட்ட கடலக்கறி.:-
தேவையானவை :- கறுப்புக் கொண்டைக்கடலை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் , கரம் மசாலா – தலா கால் டீஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன். பட்டை, இலவங்கம், ஏலக்காய்,- தலா 2. எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன். பொடியாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- கறுப்புக் கொண்டைக்கடலையை முதல்நாளே 8 மணி நேரம் ஊறவைத்து துணியில் இறுக்கமாக முடிந்து ஹாட்பேக்கில் போட்டு முளை கட்டவும். மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து 3 விசில் வரும்வரை வேகவிடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலவங்கம் ஏலக்காய் தாளித்து பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்டை வதக்கவும் இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாவைப் போட்டு நன்கு திறக்கி வேகவைத்த கொண்டைக்கடலையைப் போடவும். கொதிவந்ததும் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்துப் பொடியாக அரிந்த வெங்காயத்தைத் தூவி நூல் புட்டுடன் பரிமாறவும்.
3.பாபுட்டு
தேவையானவை :- பச்சரிசிக் குருணை – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், பால் அல்லது தேங்காய்ப்பால் – 1 கப், தண்ணீர் – அரை கப், ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை :- பச்சரிசிக் குருணையில் உப்பு, சீனி, பால் அல்லது தேங்காய்ப் பால் கலந்து பத்தாதற்கு சிறிது தண்ணீர் சேர்த்துத் தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் வெண்ணெயை நன்கு தடவி இந்த மாவுக் கலவையை ஊற்றவும். இதன்மேல் ஏலப்பொடி, தேங்காய்த் துருவலையும் தூவவும். 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துத் துண்டுகள் செய்து நிவேதிக்கவும்.
4.கலவைக் கூட்டு
தேவையானவை :- கத்திரிக்காய் – 1, காரட் – 1, உருளை -1, சௌசௌ – சிறிது, பச்சைப்பட்டாணி – 1 கப், பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் , பச்சைமிளகாய் – 1, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- பாசிப்பருப்பை வேகவைத்து அதில் சிறிதாக அரிந்த காரட் உருளை சௌ சௌ கத்திரிக்காய் பச்சைப்பட்டாணி போட்டு வேகவிடவும். முக்கால்பதம் வெந்ததும் தேங்காய் பச்சைமிளகாய் சீரகத்தை அரைத்து ஊற்றவும். இறக்கும்போது உப்பு சேர்த்துத் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை அப்படியே போட்டு சிறிது நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும். பாபுட்டுடன் பரிமாறவும்.
5.அரிசி ரொட்டி
தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், பொடியாக அரிந்த வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த இஞ்சி – 1 டீஸ்பூன், பொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன், பொடித்த தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, வெந்நீர் – ஒரு கப்.
செய்முறை:- பச்சரிசி மாவில் வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாய் தேங்காய்த்துருவல்களைப் போட்டு நன்கு கலக்கவும். இதில் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்நீர் ஊற்றி நன்கு கலக்கிப் பிசையவும். நன்கு பெரிய உருண்டைகளாக எடுத்து நான் ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து மிதமான தீயில் மெலிதான ரொட்டிகளாகக் கையால் தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
6.ராஜ்மா
தேவையானவை :- ராஜ்மா பீன்ஸ் – முக்கால் கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், தக்காளி – 2, மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் , மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய் விழுது – 1 டேபிள் ஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- ராஜ்மா பீன்ஸை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் 5, 6 விசில் வரும்வரை நன்குவேகவைத்துக் கொள்ளவும். மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூளை அரை கப் தண்ணீரில் போட்டு நன்கு கரைத்து வைக்கவும். வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டை கரகரப்பாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை வதக்கவும் இதில் மிளகாய்த்தூள் கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும் உப்பு சேர்த்து வெந்த ராஜ்மாவையும் சேர்க்கவும். நன்கு கொதித்துக் கலந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து இறக்கி அரிசி ரொட்டியுடன் பரிமாறவும்.
7.சிவப்புக் கொழுக்கட்டை
தேவையானவை :- பச்சரிசி – 1 கப், வரமிளகாய் – 4, பெருங்காயம் – சிறு துண்டு, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்துப் பெருங்காயம் வரமிளகாய் சேர்த்து நரநரப்பாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து இந்த மாவைப்போட்டு உப்பு சேர்த்து வதக்கி இறக்கும்போது தேங்காய்த் துருவல் போட்டு நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்.
8.மல்லிக் கொழுக்கட்டை :-
தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பச்சை மிளகாய் – 2, மல்லித்தழை – அரைக்கட்டு, கருவேப்பிலைக் கொழுந்து – ஒரு கைப்பிடி, சீரகம் – கால் டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இதில் சுத்தம் செய்த மல்லித்தழை, பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து இந்த மாவை வதக்கி உப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிரட்டி கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.
9.இஞ்சிக் கொழுக்கட்டை
தேவையானவை :- பச்சரிசி – 1 கப், துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். கருவேப்பிலை – 2 இணுக்கு. பச்சைமிளகாய் – 1 பொடியாக அரியவும்.
செய்முறை :- பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை தாளித்து மாவைக் கொட்டி நன்கு வதக்கவும். இதில் தேங்காய்த்துருவலைப் போட்டு நன்கு கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
10. கதம்பத் துவையல்
தேவையானவை :- மாங்காய் – 1 துண்டு, தேங்காய் – 1 துண்டு, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, கருவேப்பிலை, கொத்துமல்லி – தலா ஒரு கைப்பிடி, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், புளி – 2 சுளை, தக்காளி – 1, கடுகு , உளுந்து , கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, வரமல்லி, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை :- எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பு பெருங்காயம் வரமல்லி, வெந்தயம் வரமிளகாய் தாளிக்கவும். அனைத்தும் பொரிந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி கருவேப்பிலை கொத்துமல்லித்தழை, தக்காளி, உப்பு புளி போட்டு நன்கு வதக்கி இறக்கி மாங்காய் தேங்காய் சேர்க்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொழுக்கட்டைகளுடன் பரிமாறவும்.
11.ரோஸ் மட்டையரிசிப் பாயாசம்.
தேவையானவை :- கேரளா ரோஸ் மட்டையரிசி – 50 கிராம் ( ஒரு கைப்பிடி ), பால் – 2 லிட்டர். சர்க்கரை – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 20, நெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:- ரோஸ் மட்டையரிசியை நன்கு களைந்து பாலில் போட்டு குக்கரில் 7, 8 விசில் வரும்வரை வேகவிடவும். இறக்கி நன்கு மசித்துக் கொதிக்க விடவும். சுண்டி வரும்போது சர்க்கரை சேர்த்துக் கரைந்தது வாசம் வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு நிவேதிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக