திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப் படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை' எனப் பெயர் வந்தது. அத்துடன் இந்தத் தலத்தின் திருமகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந்து இருப்பதால் `திரு' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை' என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் தோன்றினார்.
ஆலயம்: ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள் கொண்டது.
தலதீர்த்தம்: திவ்யமானதும், பாவம் போக்குவதுமான பிருகு தீர்த்தம்.
தலவிருட்சம்: பாரிஜாத மரம்.
தலமூலவர்: ஜெகன்னாதப் பெருமாள், ருக்குமணி, சத்யபாமா சமேதரராக கிழக்கு முகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய முனிவரும், பிருகு முனிவரும் உடன் அமர்ந்து சேவிக்கிறார்கள்.
அருள்மிகு திருமங்கைவல்லித் தாயார்!
இவரை நம்பிக்கையுடன் வேண்டும் பக்தர்களுக்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும், புத்திர பாக்கியத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தருகிறார். திருவே உருக்கொண்டிருக்கும் இந்தக் தாயாரை வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் பெற முடிகிறதாம்.
பிராகார தேவதை!
கருணையே வடிவாக பிராகார தேவதையாக இந்தத் தலத்தில் ஸ்ரீவைஷ்ணவி திருமாலின் சங்குச் சக்கரங்களைத் தாங்கி நின்று சேவைசாதிக்கிறாள். விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் வைஷ்ணவி தேவிக்கு பூமாலை வழிபாடும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலத்தில் விசேடத் திருமஞ்சனப் பிரார்த்தனையும் செய்தாலே போதுமாம்.
அருகிலேயே ஸ்ரீ அழகிய சிங்கர் சன்னதியில் லட்சுமி தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.அடுத்தடுத்து ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீவைஷ்ணவர்களின் ஒப்பற்ற குருவான ஸ்ரீமத் மணவாள சுவாமிகள் சன்னதியும் இருக்கிறது.
பெருமாள் கோவிலின் மத்தியில் பிரதானமாகக் காட்சி தரும் இந்த விநாயகரின் வயிற்றின் நடுப்பகுதியில் ராகுவும், கேதுவும் இணைந்துள்ளது.இவரை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
முக்கிய திருவிழாக்கள்
இங்குப் பிரதி ஆண்டும் ஆனிமாதம் ஸ்ரீஜெகன்னாதப் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்ஸவமும், தைமாதத்தில் மக நட்சத்திரத்தில் ஸ்ரீதிருமழிசை ஆழ்வாரின் திருஅவதார மகோத்ஸவமும், மாசி மாதத்தில் 3 நாட்கள் தெப்போத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தலத்தின் உயர்வையும், மேன்மையையும் நமக்கு விளக்க இதோ ஒரு புராண கால நிகழ்வு!
ஒரு முறை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் முதலிய பிரம்மரிஷிகள் சத்ய லோகத்திற்கு சென்றனர். அங்கு பிரம்மதேவரைச் சந்தித்து ஈரேழு உலகங்களிலும் சிறந்த உலகமான பூவுலகில் தவம் செய்ய எங்களுக்கு ஒரு உயர்வான இடத்தைத் தாங்கள் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.
உடனே நான்முகன் தேவ சிற்பியான சதுர்முகனை அழைத்து ஒரு துலாக்கோல் கொண்டு வரும்படி சொன்னார். ஒரு தட்டில் திருமழிசைத் தலத்தையும், இன்னொரு தட்டில் உலகின் மற்ற பகுதிகளையும் வைத்து எடை போடச் சொன்னார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து உலகில் தனது சிறப்பான இடத்தை முனிபுங்கவர்களுக்கு உணர்த்தியதாம். உலகில் எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் வாய்ந்தது திருமழிசை என்பதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தனராம்.
பைநாகப் பாயை சுருட்டிக்கொண்ட வைகுந்தன்!
திருமழிசை ஆழ்வாரும் , இவர் சீடர் கணி கண்ணனும் காஞ்சியில் இருந்தனர். அப்பொழுது இவருக்கு பணிவிடைகள் செய்த ஒரு வயதான மாதுவை இளம் மங்கையாக்கினார். அவள் பேரழகில் மயங்கி மணம் புரிந்த அந்த நகரின் மன்னனான பல்லவராயன் தன்னையும் ஆழ்வாரிடம் வாலிபனாக்கும்படி கேட்டார். ஆனால் அவர் அதை மறுத்துவிட கணி கண்ணனாரையும் காஞ்சி நகரை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார் அங்குக் கோவில் கொண்டு இருந்த வைகுந்த வாசனைப் பார்த்து
``கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்
பைநாகப்பாய் சுருட்டிக் கொள்''
என்று பாட, வைகுந்த வாசனும் தம் பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வார் பின்னாடியே சென்று விடுகிறார். மற்ற தேவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுவிட காஞ்சி மாநகரமே இருட்டில் மூழ்கி விடுகிறது. தன் தவறு உணர்ந்த மன்னன் அவர்கள் காலில் விழுந்து வேண்ட, ஆழ்வார் தன் பின்னாடி வந்த வைகுந்த வாசனை ``நீயும் உன் பைநாகப் பாய் படுத்துக் கொள்'' என்று பாட வைகுந்த வாசனும் திரும்பிச் சென்று ஆலயத்துக்குள் படுத்துக் கொண்டாராம்!
ஆலயம் செல்லும் வழி:
சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ் மூலமாக ஆலயத்துக்கு செல்லலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக