சனி, 25 ஜூன், 2016

மாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சனம்!


ரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது காங்கேயம்பாளையம். இங்கே, காவிரியாற்றின் நடுவே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர். 

ஆற்றின் இக்கரை ஈரோடு மாவட்டமாகவும், அக்கரையானது நாமக்கல் மாவட்டமாகவும் உள்ளது.

ஈசன் அகத்தியருக்கு அருளிய தலம் இது. 'நான் இங்கேயே இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க உள்ளேன்’ என அசரீரியாகச் சொல்லி, அதன்படி தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்.


ஆற்றின் நடுவே குடிகொண்டிருப்பதால், சிவனாருக்கு ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீநல்லநாயகி. அன்னபூரணி எனும் திருநாமமும் உண்டு. ஆடிப்பூர நாளில், அம்பிகைக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.

சுந்தர சோழ மன்னன் திருப்பணிகள் செய்த ஆலயம் எனத் தெரிவிக்கின்றன, கல்வெட்டுகள். ஆற்றின் நடுவே அமைந்த கோயில் என்பதால், இங்கு ஆடிப்பெருக்கு ரொம்பவே விசேஷம்!  ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்கள் ஆகிய நாளில், 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

தவிர, சிவனாருக்கு அகத்தியர் கம்பு தானியம் படைத்து வழிபட்டதால், சித்திரைப் பிறப்பன்று, தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.


குறிப்பாக, மார்கழி திருவாதிரையன்று ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு சீரும் சிறப்புமாக பூஜைகள் நடைபெறும். அன்று, பரிசலில் ஸ்ரீநடராஜர் எழுந்தருளி, காவிரி நதியில் இருந்தபடியே கோயிலை வலம் வருவது, கண் கொள்ளாக் காட்சி! மாலையில் திருக்கல்யாணம் நடைபெறும்.

அதேபோல், ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், ஸ்ரீஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆனித் திருமஞ்சன விழாவின்போது, சுமங்கலிகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தால், மாங்கல்யம் பலம் பெறும்; தம்பதியர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ்வர்; திருமணத் தடை உள்ள பெண்களுக்கு விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை!  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக