சனி, 25 ஜூன், 2016

வைகாசி விசாகம் விசேஷ ரெசிபி!

1. தினை அரிசி மாவுருண்டை
2. கம்பு பொரியரிசி மாவு 
3. வேங்கரிசி மாவு
4. கோதுமைப் பொரியரிசி மாவு.
5. அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு



1. தினை அரிசி மாவுருண்டை

தேவையானவை :-
தினை அரிசி – 2 ஆழாக்கு
வெல்லம் – 1 கப்
தேன் - அரை கப்
நெய் - அரை கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
தினை அரிசியைச் சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். (இன்னொரு விதத்தில் ஊறவைத்து வடிகட்டி இடித்துச் )சலித்து அதோடு நெய்யைக் காய்ச்சி ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து தேன், ஏலக்காய் கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுக்கவும்.



2. கம்பு பொரியரிசி மாவு :-


தேவையானவை:-
கம்பு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை - 1/3ஆழாக்கு அல்லது
ஜீனி - 1/3 கப்.

செய்முறை:-
கம்பை நன்கு சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொறித்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொட்டுப்பொடிக்கவும். அதில் சீனி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பிசறிக் கொடுக்கவும்.


3. வேங்கரிசி மாவு:-

தேவையானவை :-
வேங்கரிசி/ சிவப்பரிசி – 2 ஆழாக்கு
ஜீனி – ¼ ஆழாக்கு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
அல்லது நெய் காய்ச்சிய கசண்டு – 1 டீஸ்பூன் ( கருவேப்பிலை முருங்கைக் கீரை கலந்தது )

செய்முறை:-
உலை வைத்து அரிசியைக் களைந்து போடவும். ஒரு கொதி வந்ததும் நீரை வடிக்கவும். வெய்யிலில் ஒரு பாயில் துணியை விரித்து அதில் இந்த சாதத்தைப் பரப்பிக் காய வைக்கவும். பின் பொரிக்கடையில் கொடுத்துப் பொரித்து  மெஷினில் அரைத்துச் சலிக்கவும். அதில் ஜீனியைக் கலந்து வைக்கவும். சாப்பிடும்போது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்க்கசண்டில் கலந்து பிசைந்து கொடுக்கவும். தண்ணீரிலும் பிசைந்து உருட்டிக் கொடுக்கலாம்.


4. கோதுமைப் பொரியரிசி மாவு.:-

தேவையானவை:-
சம்பாக் கோதுமை – 2 ஆழாக்கு
ஜீனி அல்லது வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
கோதுமையைக் கழுவிக் காயவைத்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வாசம் வரும்வரை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மிஷினில் அரைத்துக் கொள்ளவும். சாப்பிடும்போது ஜீனி அல்லது வெல்லம் கலந்து தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொடுக்கவும்.


5. அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு:-

தேவையானவை :-
பச்சரிசி – 2 ஆழாக்கு
வெல்லம் – 2 அச்சு.

செய்முறை:-
அரியரிசி:-
பச்சரிசியைக் களைந்து ஊறவைத்துக் கல் அரித்துக் கொட்டானில் வடியவைக்கவும். அதில் வெல்லத்தைத் தூள் செய்து கலந்து படைக்கவும். தேவைப்பட்டால் ஏலத்தூள் சேர்க்கலாம்.

துள்ளுமா :-
துள்ளுமாவுக்கு என்றால் பச்சரிசியைக் களைந்து  ஊறவைத்து  நீர் வடித்து அதை உரலில் இட்டு உலக்கையால் லேசாக இடிக்கவும். குருணையாகவும் லேசாக மாவாகவும் மாறும்போது வெல்லத்தையும் பொடித்து இடித்துப் படைக்கவும். இது உரலில் உலக்கையில் துள்ளுவதால் துள்ளுமா எனப் பெயர். பொல பொலவென மாவும் குருணையும் வெல்லமும் கலந்து இருக்கும். தேவைப்பட்டால் ஏலத்தூள் சேர்க்கலாம்.


மாவிளக்கு :-
பச்சரிசியைக் களைந்து ஊறவைத்து நீர் வடித்து உரலில் அல்லது மிக்ஸியில் இட்டுப் பொடிக்கவும். நன்கு சலிக்கவும். மிச்சக் குருணையையும் மீதி அரிசியையும் போட்டு நன்கு அரைத்துச் சிறுகண்ணிச் சல்லடையில் நைசாகச் சலிக்கவும். வெல்லத்தை நன்கு நைத்துப் போட்டு உரலில் அல்லது மிக்சியில் சிறிது மாவோடு சேர்த்து அரைக்கவும். ஒரு பேசினில் இது அனைத்தையும் கொட்டி நன்கு பிசைந்து ( மாவில் இருக்கும் ஈரமும் வெல்லத்தின் ஈரமுமே போதும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்). 

உருண்டையாக்கி மாவிளக்குச் சட்டியில் வைக்கவும். அதன் நடுவில் நெல்லிக்காய் அளவு குழி செய்து பஞ்சு உருண்டையை நெய்யில் நன்கு நனைத்து உருட்டி வைக்கவும். மஞ்சள் குங்குமம் தொட்டு வைக்கவும். மூன்று புறமும் திரி செய்து அதையும் நெய்யில் நனைத்து நடுவில் பஞ்சின் மேல் கூம்பாக வரும்படி செய்து மாவிளக்கு ஏற்றவும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக