ஞாயிறு, 12 ஜூன், 2016

ஹோட்டல் சாம்பார்



ஹோட்டல் சாம்பார் இட்லிக்கு/வெண்பொங்கலுக்கு:

தேவையான பொருட்கள்:

புளி                       2 எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு     முக்கால் கப்
பாசிபருப்பு         2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி   இரண்டரை டீஸ்பூன்
மல்லிப் பொடி   1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்
உப்பு   சுவைக்கேற்ப

கருவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லி சிறிதளவு

நறுக்கி வைக்க வேண்டியவை:
பெரிய வெங்காயம்      1
பச்சை மிளகாய்         3
தக்காளி             2
கத்தரிக்காய்    2
முருங்கைக்காய் 1
காரட்      2
அரைக்க:
தேங்காய்ப்பூ   கால் கப்
பொரிகடலை    1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு   1 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி  1

தாளிக்க:

எண்ணெய்      1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு    1 டீஸ்பூன்
வெந்தயம்   கால் டீஸ்பூன்
பெருங்காயப் பொடி  அரை டீஸ்பூன்
கிள்ளிய சிவப்பு மிளகாய்  2

செய்முறை:

புளியை நன்றாக ஊற வைத்து, கரைத்து வைக்கவும்.
குக்கரில் துவரம்பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி சேர்த்து, குழைவாக வேக வைத்து, மசித்து, கரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பெரிய் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சாம்பாரில் போடுவதற்கு, கத்தரிக்காய்/ முருங்கைக்காய் இவை இருந்தால், குழையாமல் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
காரட்/முள்ளங்கி போன்ற காய்களாக இருந்தால், வில்லைகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து, குக்கரில் வேக வைத்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு, வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியும் சேர்த்து, குழைய வதக்கவும்.
இதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்க்கவும்.
உப்பும் சேர்க்கவும்.
புளி பச்சை வாசனை போக, கொதித்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து, ஒரு கொதி வ்ர விடவும்.

இதற்கிடையில், மிக்ஸியில் தேங்காய்ப்பூ, பொரிகடலை, கடலை மாவு, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, இவற்றை சேர்த்து, நன்றாக மசிய அரைத்து வைக்கவும்.
தக்காளியையும் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
கொதித்த புளித்தண்ணீர் மற்றும் பருப்புக் கலவையில், அரைத்த தக்காளி மற்றும் தேங்காய்ப்பூ கலவையை கரைத்து ஊற்றவும்.

கடலை மாவு/பொரிகடலை சேர்த்து அரைத்திருப்பதால், கிளறிக் கொண்டே ஊற்றவும். இல்லையென்றால், கட்டிகளாகி விடும்.

அடி பிடிக்காத பாத்திரத்தில், இந்த சாம்பாரை கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட வேண்டும்.
நுரை அடங்கக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

தனியாக காய்கள் வேக வைத்திருந்தால், அவற்றையும் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம், பெருங்காயப் பவுடர், கிள்ளிய சிவப்பு மிளகாய் இவற்றைப் போட்டு, தாளிக்கவும். 
கருவேப்பிலை சேர்க்கவும்.
இதை சாம்பாரில் கலக்கவும்.
கழுவி, சுத்தம் செய்த, பொடியாக நறுக்கிய மல்லித் தழையை, மேலே தூவி, கலக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.
இட்லி, தோசை, வெண் பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக