ஞாயிறு, 26 ஜூன், 2016

அருள் மழை பொழியும் அண்ணாமலை!


திருவாரூரில் பிறந்தால் முக்தி. தில்லையை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்திதான்''

யார், யாரிடம் இதனைச் சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நந்திபகவான், மார்க்கண்டேய முனிவருக்குச் சொன்ன சிவ ரகசியம் இது.

அத்தனை மகிமைமிக்க திருவண்ணாமலையை, கிரிவலம் வந்தால் விதவிதமான பலன் உண்டு.

ஆமாம்.

ஞாயிற்றுக்கிழமை, மலையை வலம் வந்தால் சிவலோகத்தின் தலைமைப் பதவி கிடைக்கும். திங்கட்கிழமை, கிரிவலம் வந்தால் உலகை ஆளும் வாய்ப்பு பெறுவீர்கள். செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன் சுமையும், வறுமையும் ஒழியும். புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சி கிட்டும். வியாழன் என்றால் ஆசானாவீர்கள். வெள்ளிக்கிழமை, கேட்ட வரம் கிடைக்கும். சனிக்கிழமை, திருவண்ணாமலையை வலம் வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கி, நலம் கிட்டும்!
ஆற அமர, பொறுமையாக, பெருமையாக ஒருநாள் முழுக்க அனுபவித்து, அனுபவித்து மகிழவேண்டிய மகிமைமிக்க தென்கயிலாயம் இஃது.

ஒரே ஒருமுறை திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனம் செய்தால் போதும், அது நம் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் என்று கூறுகிறது, தலபுராணப் பாடல்.

2668 அடி உயரமுள்ள மலையே இங்கே சிவபெருமானாகக் கருதப்படுவதால், மலையை வலம் வந்தாலே கயிலாயத்திற்குச் சென்று வந்த பலன் உண்டு. பார்வதி தேவியே இந்த மலையை வலம் வந்தபிறகுதான் சாபம் நீங்கி இறைவனைக் கைப்பிடித்தாள் என்றால் இதன் சிறப்பைச் சொல்லத்தான் வேண்டுமா?

கிரிவலம் வரும்போது, எட்டு லிங்கங்களைக் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.

கிழக்கே இந்திர லிங்கம், தென்கிழக்கே அக்னி லிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதி லிங்கம், மேற்கே வருண லிங்கம், வடமேற்கே வாயு லிங்கம், கிழக்கே குபேர லிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் என்று, பார்க்கப் பார்க்கப் பரவசம்தான்.

மலையின் தெற்கு திசையில் சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமம், தட்சணாமூர்த்தி கோயில், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் போன்றவை அமைந்துள்ளன.

எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும், தபோதனர்களும், முனிவர்களும் சிவ ஜோதியில் ஐக்கியமானது இந்த மலையில்தான் என்பதால், இந்த மலையைச் சுற்றி வந்து எட்டு லிங்கங்களையும் வணங்கினால், மனசுக்குள் எல்லாமும் சேர்ந்து ஒரு மகிழ்வையும், ஒரு நெகிழ்வையும் கொடுக்கிறது பாருங்கள், அதை வார்த்தைகளால் எல்லாம் விளக்கிவிட முடியாது!

இந்த மலை கிருதாயுதத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியதாக புராணம் சொல்கிறது.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஒருமுறை எழுந்தது.

தீர்ப்பு சொல்ல வந்த சிவபெருமான், தன் அடியையோ, முடியையோ யார் முதலில் காணுகிறாரோ அவரே பெரியவர் என்று கூறி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக ஓங்கி உயர்ந்து நின்றார்.

திருமால், வராக அவதாரம் எடுத்து அடியைக் காண விரைந்துசென்று, தோல்வியுடன் திரும்பினார்.

பிரம்மா, அன்னமாய் மாறி முடி காணச் சென்றார். அவருக்கும் தோல்விதான். என்றாலும் பாதியில், கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவின் உதவியுடன், சிவனின் முடியைக் கண்டதாகவும், அங்கிருந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய்யுரைத்தார்.

அப்புறம் என்ன? தாழம்பூ, சிவ பூஜைக்கு லாயக்கற்றுப் போனது. பொய் சொன்ன பிரம்மாவுக்கும் பூலோகத்தில் கோயில்கள் குறைந்து போனது.

இருவருக்கும் யார் பெரியவர் என்பது புரிந்தது. அந்தப் பெரியவர்தான் அண்ணலாக, அண்ணாமலையாக இங்கே காட்சி தருகிறார்.

2668 அடி உயர மலைக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறதோ, 24 ஏக்கர் பரப்பில் ஆறு பிராகாரங்களுடனும் ஒன்பது ராஜகோபுரங்களுடனும் மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள மாபெரும் கோயிலுக்கும் அத்தனை மகத்துவம் உண்டு.

கோபுர தரிசனம் கோடி பாவ நிவாரணம் என்பார்கள். திருவண்ணாமலை ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது! தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய கோபுரம்!

அருணகிரிநாதர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கோபுரத்தின் மீதேறி விழுந்தபோது, முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றினாரே, அந்த வல்லாள மகாராஜா கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான்.

அதே அருணகிரிநாதர் கிளியாக மாறி, பாரிஜாத மலருடன் திரும்பி வந்தபோது, தன் பூத உடல் இல்லாததைக் கண்டு, கிளி உருவிலேயே `கந்தர் அனுபூதி' பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அப்படி அவர் பாடிய கிளிக் கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான். அண்ணாந்து பார்த்தாலே அண்ணாமலையில் ஆயிரம் கதைகள்!

கயமுகாசுரனைக் கொன்று, அவன் குருதியைத் தன் உடலில் பூசிக்கொண்ட செந்தூர விநாயகர், அமுதப்பாலை ஊட்டும் தாயாக, அருளை வழங்கும் அன்னையாகக் காட்சி தரும் அபீத குசலாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மை. முருகன் காட்சி தந்த கம்பத்திளையனார் சன்னதி, ரமணர் தவமிருந்த பாதாளலிங்கேஸ்வரர் சன்னதி, தலபுராணத்தைச் சொல்லும் லிங்கோத்பவர் சன்னதி என்று, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட இங்கே ஏராளமான கடவுள் தரிசனம்.

எல்லாவற்றிலும் மேலாக, கருவறையில் லிங்க உருவில் காட்சி தரும் அண்ணாமலையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்படுகிறது. விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி தந்தவர்; நினைத்தாலே முக்தி தருபவர்; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் போன்றோரால் பாடப்பட்டவர்; சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகரப் பேரரசர்கள், தஞ்சை நாயக்க மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டவர்; ஞானிகளாலும் முனிவர்களாலும் தேடித் தேடி வழிபடப்பட்டவர் - எல்லாம் இவர்தான் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

ஒல்லியானவர்கள், இடுக்குப் பிள்ளையாரின் பாத தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.''

அருள் மழை பொழியும் அண்ணாமலையை நினைத்தாலே மறுபிறவி கிடையாது என்பது உண்மைதான்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக