திங்கள், 27 ஜூன், 2016

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்!



கல்யாணப் பெண்ணைப் போல சந்தோஷத்துடனும், அழகுடனும், வெட்கத்துடனும், நளினத்துடனும், கருணையுடனும், காதலுடனும், கனிவுடனும் காட்சி தரும் திருநெல்வேலி காந்திமதி அம்மனை முதல் முறை பார்ப்பவர்கள், மெய்சிலிர்த்துப் போவார்கள். அம்மனின் எழிலில், வேண்டுதல் கூட மறந்து போய்விடும். தெய்வத் திருமணத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்படும்.

மணப்பெண்ணின் அலங்காரத்தைப் பார்க்கலாமா? தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து கண்களில் மைதீட்டி நெற்றியில் குங்குமம் தரித்து எப்போதும் அழகு கொஞ்சும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியை தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Yengal Kula Naayagiyeh Gaandhimathi, Amman thuthi lyrics Tamil-English, எங்கள் குல நாயகியே காந்திமதி, அம்மன் பக்தி துதி

அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார்.


அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.




நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்ற கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்து தட்டி அமுக்கியது போல அடி பரந்து குட்டையான அமைப்பு!

திருத்தலக் குறிப்பு:


தல மூர்த்தி :
நெல்லையப்பர்
(வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)


தல இறைவி :

காந்திமதி அம்மை
(வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)


தல விருட்சம் :

மூங்கில்

தல தீர்த்தம் :

மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.

திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென் காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது.


சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி நகரின் மத்தியில் 850 அடி நீளமும் 756அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். அந்தக் காலத்தில் அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் தனித் தனியாகத்தான் இருந்தன. புராணப்படி முழுவதும் கண்ட ராம பாண்டியனாலும், ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறனாலும் இவை கட்டப்பட்டன. கி.பி.1647ல் வடமலையப்ப பிள்ளையன், இரண்டு கோயிலையும் ஒன்றாக இணைக்க, சங்கிலி மண்டபத்தை அமைத்தான் என்கிறது வரலாறு.



இதோ அந்தக் கதை:

அந்தக் காலத்தில் மூங்கில் காடாக இருந்தது இந்தப் பகுதி. அருகில் இருந்த ஒரு தொழுவத்திலிருந்துதான் அரசனுக்கு தினசரி பால் போகும். அந்தக் கடமையைச் சரிவர செய்து கொண்டிருந்தார் ஓர் ஆயர். அவர் செல்லும்போது மூங்கில் காட்டில் தினசரி அவரது கால் தடுக்கி குடங்கள் கீழே விழுந்து பால் கொட்டிற்று. தரையில் முளை விட்டிருந்த மூங்கில்தான் இதற்குக் காரணம் என்று எண்ணிய ஆயர், கோடரியால் மூங்கிலை வெட்ட, ரத்தம் கிளம்பிற்று.பதறிப்போய் மன்னரிடம் சொல்ல, அரசன் ராமபாண்டியனும் விரைந்து வந்து பார்க்க, அங்கே சிறிதாய் ஒரு லிங்கம் இருப்பது தெரிந்தது.


பரிதவித்த மன்னன் அந்த லிங்கத்திற்கு ஓர் ஆவுடையார் அமைக்க, லிங்கம் அதற்கேற்ப வளர்ந்தது. மீண்டும் ஒரு ஆவுடையார் என்று மன்னனும் 21 பீடங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்க லிங்கமும் அதற்கேற்ப வளர்ந்தது. சோதித்தது போதும் என்று மன்னன் ராமபாண்டியன் கைதொழ, சிவபெருமான் அவனுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார். ``ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, `முழுவதும் கண்ட ராம பாண்டியன்' என்று அழைக்கப்படும்'' என்று ஆசி வழங்கினார்.

அந்த முழுவதும் கண்ட ராம பாண்டியன் கட்டியதுதான் இந்தக் கோயில்.



மூங்கில் என்றால் வேணு. எனவே வேணுவனநாதர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

தல விருட்சம் மூங்கில்தான்!

நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதிகம்.

 ``நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்'' என்று இறைவனே கூறியிருக்கிறார் என்றால், இதன் சிறப்பை சொல்லி மாளாது.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி. இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது!

இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.



கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள்.
ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை.
கி.பி.7ம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது.



இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது.

நேரே சென்றால் வேணுவனநாதர் என்னும் மூங்கில் முளையில் தோன்றிய ஈசனைக் காணலாம். மன்னனுக்காக 21 பீடங்களைத் தாண்டியும் உயர்ந்து ஜோதி வடிவில் காட்சி தந்த ஈசன் இவர்தான். இவரே அருள்மிகு நெல்லையப்பர்.



நெல்லையப்பருக்கு அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதி அமைந்திருக்கிறது. வேணுவனநாதர் வெளிப்படுவதற்குமுன் தோன்றிய திருமூலநாதர் சன்னதியும் மிக முக்கியமானது. மேற்புறப் பிராகாரத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் அருள்புரியும் நடேசரையும் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.

பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை
5. திருநெல்வேலி - தாமிரசபை


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை


வேணுவனநாதர், நெல்லையப்பர் ஆனதும் ஒரு கதை.

இந்த ஊரின் பெயர் தோன்றியதும் அதே கதையில்தான்! ராம பாண்டியனின் பிற்காலத்தில் 12 வருடங்கள் மழையில்லாமல் போய், பெரும்பஞ்சம் இங்கே ஏற்பட்டது. மக்கள் பசியால் தவித்தார்கள். இறைவனுக்கே நைவேத்தியத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அப்போது, வேதசர்மா என்ற பக்தர் பிட்சையெடுத்தாவது கொஞ்சம் நெல்லைச் சேகரித்து, இறைவனுக்குப் படைத்து வந்தார். இறைவன் அவரை மேலும் சோதிக்க எண்ணினான். கைவசம் இருந்த கைப்பிடி நெல்லை, கோவில் சன்னதியிலேயே உலர்த்திவிட்டு வெளியில் சென்றார் வேதசர்மா. அப்போது திடீரென பெருமழை பெய்தது. நெல், மழைநீரில் மிதந்து போய் விட்டால், இறைவன் பட்டினி கிடப்பாரே என்று ஓடோடி வந்தார் வேதசர்மா.

அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. தான் உலர்த்திய நெல்லைச் சுற்றி மழைநீரே ஒரு வேலியாக உயர்ந்து நிற்க, நெல்லுக்கு மட்டும் வெய்யில் அடிப்பதைக் கண்டு நெக்குருகிப் போனார். நெல்லைக் காத்ததால் அன்று முதல் வேணுவனநாதருக்கு `நெல்வேலி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் திருநெல்வேலி ஆயிற்று. பஞ்சமும் பறந்து போயிற்று.

தன்னை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும் என்பதை உணர்த்தவே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும்  4-ம் நாளன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி  நடைபெறும்.



திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.



எங்கள் குல நாயகியே காந்திமதி
எம்மை வாழவைக்கும் அருள்நிதியே காந்திமதி பொங்கிவரும் பேரெழிலே காந்திமதி 
புவனமெல்லாம் காப்பவளே காந்திமதி 
உன் பாதம் சரணடைந்தோம் காந்திமதி உலகாளும் ஈஸ்வரியே காந்திமதி அன்பர்கட்கு அருள்பவளே காந்திமதி அருள் மழையின் மறுபெயரே காந்திமதி 

இன்பங்கள் தருபவளே காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி சன்னதியில் நின்றார்க்கு காந்திமதி சங்கடங்கள் தீர்த்திடுவாய் காந்திமதி

நெல்லையப்பர் மகிழ்தேவி காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி தொல்லைதனைப் போக்கிடுவாள் காந்திமதி தொழுது உன்னை பணிந்திடுவோம் காந்திமதி.




திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:

மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***


நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.
திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில்  அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம்.

திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள். மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.

ஏராளமான தெய்வங்கள், ஏராளமான கல்வெட்டுகள், ஏராளமான தலப் பதிகங்கள் என்று இங்கே எல்லாமும் ஏராளம்... தாராளம். நெல்லையப்பரையும், காந்திமதியையும் வணங்கினால், நிச்சயம் பசிப்பிணி போகும்.

அப்புறம் ஒன்று, இனிமையான நெல்லையப்பரின் தரிசனத்தை முடித்த கையோடு கோயில் வாசலில் மாலையில் கிடைக்கும் இருட்டுக் கடை அல்வாவையும் ஒரு கை பாருங்கள்.

நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ.  ``கோயில் நேரம்?'' ``காலை 6 - 12.30, மாலை 5.30-9''







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக