சனி, 4 ஜூன், 2016

அனந்த பத்மநாப சுவாமி விரதம்!




அனந்த பத்மநாப சுவாமி விரதம் .  இவ்விரதம் கேரள மக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எல்லாவித செல்வங்களையும் பெற்று நலமாக வாழ்கிறார்கள்.

இந்த விரதம் பற்றிய புராணக் கதை...

வசிஷ்டரின் வம்சத்தில் வந்த சுமந்து முனிவருக்கும், பிருகு முனிவரின் மகள் தீஷாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சீலா என்ற பெண் குழந்தை பிறந்ததும் தாய் தீஷா மரணமடைந்தாள். பிறகு சுமந்து முனிவர் கர்க்சா என்ற பெண்ணை இரண்டாந்தாரமாக மணந்தார். முதல் மனைவிக்குப் பிறந்த சீலா திருமண வயதை அடைந்ததும் அவளை கவுண்டிய ரிஷிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

அப்போது சீலாவுக்கு தாய்வீட்டுச் சீதனமாக ஏதும் கொடுக்காமல், வீட்டில் இருந்த சத்துமாவைக் கொஞ்சம் கட்டிக் கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பினாள் சித்தி கர்க்சா.

இதை நினைத்து வருந்தியபடி கணவருடன் சென்று கொண்டிருந்த சீலா, போகும் வழியில் பெண்கள் கூட்டமாகக் கூடி ஏதோ பூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களிடம் அது பற்றிய விவரம் கேட்டாள்.

அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் என்று அப்பெண்கள் கூற, சீலாவும் அவர் களோடு சேர்ந்து தன்னிடம் இருந்த சத்துமாவை சுவாமிக்கு பக்தியுடன் படைத்து வணங்கினாள்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்ன, "உன்னிடம் உள்ளதை உள்ளன்புடன் எனக்கு சமர்ப்பித்தால் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறேன்' என்ற வாக்கியத்திற்கிணங்க, அனந்த பத்மநாப சுவாமியும் சீலாவுக்கு அருள்புரிந்தார்.

பூஜையில் வைத்த பட்டுக் கயிறை எடுத்து தன் கையில் கட்டிக்கொண்டு கணவருடன் அவர் வீடு வந்து சேர்ந்தாள் சீலா.


அவள் செய்த விரத மகிமையால் கவுண்டி யருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஏழ்மை அகன்றது. ஆனால் போதாத காலம்- அவர் ஒருநாள் ஏதோ கோபத்தில் மனைவி கையில் கட்டியிருந்த பட்டுக் கயிறைப் பறித்து அக்னியில் எறிந்தார். உடனே சீலா ஓடிச்சென்று அது எரிவதற்குள் வெளியில் எடுத்து பாலில் நனைத்தாள்.

அன்று முதல் செல்வம் நீங்கி அவர்களை வறுமை வாட்டத் தொடங்கியது. அதன்பின் தான் செய்த தவறை உணர்ந்த கவுண்டியர்,  முனிவர்களின் ஆலோசனைப்படி ஆதிசேஷன் அருள் பெற காட்டுக்குச் சென்று கடும் தவமிருந்தார்.

அப்போது காட்டில் முதிய வேதியர் ஒருவர் கவுண்டியர்முன் தோன்றி, அவரை தற்போதைய திருவனந்தபுரம் கோட்டையில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து, விவரம் கூறி அவர்முன் ஆதி சேஷனாகக் காட்சியளிக்க, அவரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அவரது ஆசி பெற்றார் கவுண்டியர். இதை அறிந்த சீலா அரண்மனை வந்து ஆதிசேஷனை வணங்கி ஆசி பெற்றாள். பின்னர் இந்த தம்பதிகள் அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ்டித்து பல பாக்கியங்கள் பெற்று நலமாக வாழ்ந்தனர்.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட் டில் துன்புற்றபோது, ஸ்ரீகிருஷ்ண பகவான் தர்மரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே விரதம் இருந்து மீண்டும் நாட்டையும் நலன்களையும் பெற்றனர்.

இந்த அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் இழந்த செல்வங்களையும் சக்தி களையும் மீண்டும் பெறுவதுடன், சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என்பது திண்ணம். இந்த விரதத்தை அனந்தவிரதம் என்றும் சொல்வார்கள்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டையில் ஆதிசேஷன்மீது சயனித்துக் காட்சி தரும் அனந்த பத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.


பூஜை செய்யும் முறை

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுமங்கலிப் பெண்கள், அனந்த பத்மநாப சுவாமி படத்தை கிழக்கு பார்த்து வைத்து மலர் அலங்காரம் செய்ய வேண்டும். சுவாமி சம்பந்தப்பட்ட பக்திப் பாடல்களையும், ஆழ்வார் பாடல்களையும் பாட வேண்டும். உங்களுக்கு விருப்பமான இனிப்புகளை அவருக்கு சமர்ப்பித்து, தூப- தீப- நிவேதனம் செய்ய வேண்டும். இதுபோல 13 ஆண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும். சுவாமி அருளால் எல்லா செல்வங்களும் பாக்கியங்களும் கிட்டும். இது சீலா அளித்த உறுதிமொழி. கன்னிப் பெண்களும் இதில் கலந்து கொள்ளலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக