ஞாயிறு, 26 ஜூன், 2016

பொன்விளைந்த களத்தூர் ஹயக்ரீவர்!


ஜகத்குரு ஆதிசங்கரர் பசியாற,தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி யையும் தந்த ஏழை மூதாட்டிக்காகக் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி, தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிவித்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்தப் புனிதச் சம்பவம் நிகழ்ந்தது கேரளத்தில்.

ஆனால் நம் தமிழகத்திலேயே செங்கற்பட்டுக்குப் பக்கத்தில் பகவானே, தங்கமழையை... அல்ல தங்கத்தையே பூமியில் விளையச் செய்த அற்புதம் நிகழ்ந்த ஊர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அதுதான் பொன்விளைந்த களத்தூர்!

அழகிய சின்ன கிராமம். வரிசையாக மூன்று சின்னச் சின்ன கோயில்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெருமாள். பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். நான்கு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு பெருமாள் கோவிலும் உண்டு.

களத்தில் அதாவது வயலில் பொன் விளைந்ததால் இந்த ஊர் பொன் விளைந்த களத்தூர். அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து சென்று விழுந்ததால் அந்த ஊரின் பெயர் பொன்பதர்க் கூ(ட்)டம்!

ஆக நான்கு பெருமாள் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வறுமை அகன்று செல்வம் சேரும். வணங்குபவர்களின் இல்லங்களில் பொன் முதலான ஐஸ்வர்யங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலில் இந்த ஊரில் பொன் விளைந்த கதையைத் தெரிந்துகொள்வோமா?

700 வருடங்களுக்கு முன்னால்...



வைணவ ஆச்சார்யாரான தூப்புல் நிகமாந்த மகாதேசிகன், ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் இந்தக் களத்தூரில் ஒருநாள் தங்கினார்.

அவர், தன்னுடன் எப்போதும் ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் கொண்டு வருவார். அதற்கு இருவேளையும் பூஜை செய்வார்.

அன்றைய தினம், மாலை பூஜையின்போது நிவேதனத்திற்குப் பிரசாதம் எதுவும் கிடைக்காததால் துளசி தீர்த்தத்தையே ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகி உறங்கப் போனார்.

அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். சிறந்த பக்திமான்.

அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நெல்லை விளைவித்து அந்த வருமானத்தில் அரையும் குறையுமாக அவன் வாழ்ந்து வந்தான்.

மறுநாள், அவன் களத்தில் நெல் அறுக்கவேண்டிய நாள். யாராவது திருடர்கள் கதிரை அறுத்துவிடுவார்களோ அல்லது காட்டு மிருகங்களால் பயிருக்கு ஏதாவது சேதம் வந்துவிடுமோ என்ற கவலை அவனுக்கு. அதனால் அன்றிரவு தன் நிலத்தைப் பார்வையிடக் கிளம்பினான்.

அவன் நினைத்தது நடந்தது. பளபளவென ஒரு பெரிய வெள்ளைக் குதிரை, அந்தக் குடியானவனின் நிலத்தில் திருப்தியாக மேய்ந்து கொண்டிருந்தது.

கோபம் கொண்ட அவன், குதிரையைத் துரத்த, அது நாலுகால் பாய்ச்சலில் விரைய, இவன் இரண்டு கால் பாய்ச்சலில் எகிற... கடைசியில் அந்த அபூர்வ வெள்ளைக்குதிரை தூப்புல் நிகமாந்த மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது.

சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம் அவன் விஷயத்தைச் சொல்ல, மகாதேசிகனுக்கு உடல் சிலிர்த்தது. மேய்ந்தது சாதாரண குதிரையல்ல துளசிதீர்த்தம் போதாத, குதிரைமுகக் கடவுளான ஹயக்ரீவனின் லீலை அது என்று புரிந்தது.

மெய்சிலிர்த்துப் போன மகாதேசிகன் ``பகவானின் காட்சி கண்ட புண்ணியப் பிறவியப்பா நீ'' என்று அவனிடம் சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு களத்துக்கு விரைந்தார்.

அங்கே அந்த அற்புதம் நிகழ்ந்திருந்தது. வெள்ளைக்குதிரை நெல்லை மேய்ந்த இடங்களில் எல்லாம் காணாமல் போன நெல் மணிகளுக்கு பதிலாகப் பொன்மணிகள் நிலத்திலே விளைந்திருந்தன.


பொன் விளைந்த களத்தூர்!

அத்தனை மகத்துவம் மிக்க இந்த ஊரில் உள்ள மூன்று வைணவ ஆலயங்களில் முதலாவதாக உள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயத்திற்குள் நுழைவோமா?


Moolavar : Vaikunta Vaasa Perumal 
Goddess : Ahobila Valli Thaayar
Utsavar : Lakshmi Narasimha
Temple Time : 8am-11am and 5pm-730pm

அழகிய இந்த ஆலயத்தில்தான் நெல்லைப் பொன்னாக்கிய ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்.
 அகோபிலவல்லி தாயார் 
மூலவர் லட்சுமி நரசிம்மர். உடனே சிங்கமுகத்துடன் பெருமாள் காட்சி தருவார் என்று நினைக்காதீர்கள். `சிங்க முகத்துடன் சேவை சாதித்தால் என்னைப் போன்ற குழந்தைகள் பயப்படுவார்களே' என்று பிரகலாதன் கேட்டதற்கிணங்க, சாந்த சொரூபியாய், அழகு ரூபத்துடன் நரசிம்மர் காட்சியளித்தாரே, நினைவிருக்கிறதா? அப்படித்தான் அகோபிலவல்லி நாயகியுடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.



இவருக்கும் ஒரு கதை உண்டு.

108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கடல் மல்லையில் இருந்தவர் இந்தப் பெருமாள்! 1000 ஆண்டுகளுக்கு முன்னால், அன்னியர்களால் கடல்மல்லை (மாமல்லபுரம்) கோயிலுக்கு ஆபத்து வந்தபோது, கவலை கொண்ட பக்தர்களிடம் நரசிம்மரே அசரீரியாகப் பேசினார்.

``கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. என்னை இங்கிருந்து எடுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் செல்லுங்கள். கருடனும் என்னுடன் பறந்து வருவான்.

அந்தக் கருடன் எந்த ஊரில், எந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறானோ அந்த இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்யுங்கள்'' என்று கூறினார்.

அவ்வாறு கருடன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த ஆலயம். அதாவது பகவான் லட்சுமி நரசிம்மரே தானாக வந்து விரும்பி அமர்ந்து கொண்ட இடம் என்பதால், இதன் சிறப்பைச் சொல்லியா ஆகவேண்டும்?

ஒரு பிரதோஷ நேரத்தில்தான் நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்கிறார் என்பதால் அந்த நேரத்தில் நரசிம்மரை சாந்தப்படுத்த, ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் நரசிம்மருக்கு இங்கே திருமஞ்சனம் உண்டு.

அகோபிலவல்லித் தாயார், ஆண்டாள், கோதண்டராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்கள்.


அடுத்து அமைந்திருப்பது கோதண்டராமர் (பட்டாபிராமர்) திருக்கோயில்.

இங்கே மூலவர் பட்டாபிராமர், பட்டாபிஷேகக் கோலத்தில் சீதாப்பிராட்டியை இடது மடியிலும், லட்சுமணனை வலது புறமாகவும் வைத்துக்கொண்டு சேவை சாதிக்கிறார். கருவறையிலேயே ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்.



ஸ்ரீனிவாசப் பெருமாளும், திருமகள், நிலமகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.




Moolavar : Chathur Bhuja Rama East Facing Sitting Posture
Utsavar : Kothandarama with Sita, Lakshmana and Anjaneya
Temple Time : 730am-830am and 5pm-6pm


மூன்றாவதாக அமைந்திருப்பது தர்ப்பசயன சேதுராமர் திருக்கோயில்.

ராமபிரானை இந்த ஆலயத்தில் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் (பட்டாபிஷேகக் கோலம்) படுத்த நிலையிலும் (தர்ப்ப சயனம்) ஆக மூன்று கோலத்திலும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.

இந்த மூன்று கோயில்களைப் பார்த்தால் மட்டும் போதாது இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னின் பதர்கள் விழுந்த பொன்பதர்க் கூடத்திற்கும் சென்று வரவேண்டும். அங்கேதான் ராமபிரான் நான்கு கரங்களுடன் தான் ஓர் அவதார புருஷன் என்பதை நிரூபிக்கிறார்.

எந்த சக்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாதாரண மனிதனாக, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக பகவான் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ஆனாலும் தான் யார் என்பதை கௌசல்யாதேவி, திரிசடை, ஆஞ்சநேயர், ராவணன், மண்டோதரி மற்றும் தேவராஜ மகரிஷி ஆகியோருக்கு மட்டும் நான்கு கரங்களுடன் காட்சி தந்து `நானே மகாவிஷ்ணு' என்பதை அடையாளம் காட்டினார்.

அப்படி ஓர் அற்புத தோற்றத்தில் ராமர் இங்கே காட்சியளிக்கிறார்.



நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் அபய, வரத முத்திரை கொண்டு `பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறேன்.கேட்கும் வரங்களையெல்லாம் தருகிறேன்' என்பதுபோல சேவை சாதிக்கும் காட்சி என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன இனிமை!

நீங்கள் பொன்விளைந்த களத்தூர் சென்று லட்சுமி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், சேதுராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கையும் ஒரே நாளில் தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வறுமைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் அது உதவும்.

எங்கே? எப்படி?

பொன்விளைந்த களத்தூருக்கு எப்படி செல்வது?

``செங்கல்பட்டு புது பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ. தூரம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்?

நரசிம்மர் கோயில் : 9-11, 5-7.

கோதண்டராமர் கோயில் : 9-10, 6-7

தர்ப்பசயனராமர் கோயில் : 8-9, 5-7.

சதுர்புஜராமர் கோயில் : 7-8, 5-6.


தொடர்புக்குத் தொலைபேசி எண்?``044-27441142''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக