வியாழன், 30 ஜூன், 2016

சுகபோக வாழ்வருளும் சுந்தரகாமாட்சி!

இறைவன் சுயம்புலிங்க வடிவாய் அருளாட்சி புரிந்து வரும் திருத்தலம் சிறுகரும்பூர்.

 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில், சுந்தர காமாட்சி சமேதராக  திரிபுராந்தக ஈஸ்வரர் பேரருள் புரிந்து கொண்டிருக்கிறார். கஜபிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட இக்கோயில் சோழமன்னர் களால் 10ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது என்கின்றன இக்குள்ள கல்வெட்டுகள். அன்னியர்கள் படையெடுப்பின்போது இத்திருக்கோயிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள் இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் என்பவரால் ஆலயம் வெளிக்கொணரப்பட்டது.

அம்பிகை சுந்தரகாமாட்சி  பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய் அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். இத்தல நாயகி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர்.

அம்பிகை கோடி சூரியப் பிரகாசத்துடன் ஆனந்தமயமானவளாய், தன்னை நாடிவந்து தன் தாள்களைப் பணியும் அன்பர்களுக்கு சகல சம்பத்துக்களையும்  அள்ளித்தருகிறாள். தாயாய், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி  அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள்.

தேவியை விழி  இமைக்காமல் தரிசித்துகொண்டே இருக்க மனம் விரும்புகிறது. அம்பாளின் எதிரில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் உள்ளது.

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இக்கோயில். ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தூரம்  அல்லது காவேரிப்பாக்கத்தில் இறங்கினால் மூன்று கி.மீ. தொலைவு. ஓச்சேரியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக