புதன், 6 ஜூலை, 2016

திருலோக்கி அகிலாண்டேஸ்வரி!


காவிரியின் வடகரையில் அமைந்த ஏமநல்லூராகிய திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது சூரியனார் கோயில், துகிலி வழியாகவும்  இதனை அடையலாம். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர  வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும்.



‘அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி, நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ, இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையினது வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும், இடது கரத்தில் மலர் ஏந்தியும், உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் ‘பார்யா ஸௌக்ய ப்ரதாயினி’ என்பதாகும்.



அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள்; நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை. இந்த அழகுக் காட்சியைக் காணவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக் கொண்டு நவகிரக குரு பகவான் பக்தி பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதி!




 திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார். இவரது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் கொன்றைமாலை அணிவித்து முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார்.

அவரது அன்பான சிரத்தையான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் ‘ப்ருஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குருபலம்’ பெற்று மகிழ்ச்சியான இல்வாழ்க்கை பெற உமது பலம் பெருகட்டும்’ என்று அருளினார். குரு சுந்தரேசப் பெருமானிடம் அருள்பெற்ற இனிய  நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் திருநட்சத்திரம்) ஆகும்.



சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு.
ஆனால், இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிப்பது அவர் பெற்ற பேரானந்தத்தின் விளைவுதானே? இது மட்டுமா! இந்தப் பீடத்தின் பின்புறம் சிவலிங்க வடிவைக் காணும்போது நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. சிவலிங்க மூர்த்தியை குரு பூஜை செய்ததன் பலனாக. சிவபிரான் ரிஷப வாகனத்தில் உமாமகேஸ்வரராக தோன்றி அம்பிகையை ஆலிங்கனம் செய்த எழிற்கோலத்தில் காட்சியளித்தார். இம்மாதிரி ஓர் அற்புத வடிவை தமிழ்நாட்டில் வேறெங்கும் காண இயலாது. குரு பூஜித்து அருள்பெற்று தமது குருபலத்தை பூலோக மக்களுக்கு வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் திருலோக்கிதான் .

இந்த தெய்வீக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த் தேவர் சுந்தரன் சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்ய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவால்  பாடி மகிழ்கிறார்.

  ‘‘வேதங்களின் சாரமாகிய உபநிஷத் தேனை குடித்து அருந்தமிழ் மாலை சற்று சிவமணம் கமழப் பெற்ற காரணத்தினால் காந்தாரப் பண்ணில்  கருவூர்த் தேவர் இசைத்த இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான நல்லறம் பெற்று இன்புறுவார்’’ என்று போற்றுகிறார். 

கருவூர்த் தேவரது திருவுருவை இக்கோயிலின் வெளிமண்டபத் தூணில் காணலாம்.

இத்தலத்தில் கண்ணுக்கு விருந்தாகும் மற்றொரு அற்புத வடிவம் ரதி-மன்மதன் பேரெழில் காட்சியாகும்.



வலது கையில் புஷ்பம் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளைத் தழுவியபடியும் மன்மதன்; ரதியின் வலது கரம் காமதேவனை அணைத்தும், இடது கையில் ஜடை மாலையும், தலையில் அலங்காரக் கொண்டையுடன் உடலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் அவளது பேரழகு வடிவம் வார்த்தைகளால் வருணிக்க இயலாது. அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர்.

திருவாசி (பிரபை)யுடன் ஐந்தடி உயரத்தில் மிகவும் மிருதுவான கல்லில் நேர்த்தியாக அமைந்த தெய்வீகக் சிலை. ஹொய்சாலர் காலத்து  கலைக் கருவூலமாகும்.

மூலஸ்தானத்தில் திரைலோகிய சுந்தரனான சுந்தரேசப் பெருமானை தரிசித்து வெளி மண்டபத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு வலம் வரும்போது தெற்கு பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

  இங்கே கிழக்கு நோக்கி புதிதாக அமைக்கப் பெற்ற சித்திர சபையில் உமாமகேஸ்வர மூர்த்தி ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் குருபகவான் கரங்கூப்பி அந்த அழகு காட்சியை ரசிக்கிறார். பின்புறம் கண்ணாடி பொருத்தப்பெற்று குரு பூசித்த சிவலிங்கத் திருமேனி காட்சியளிக்கிறது. அவருக்கு இடதுபுறம் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். மற்றும் விஸ்வநாதர், பைரவர் துர்க்கை, சண்டேசர் சந்நதிகளும அமைந்துள்ளன.

தலவரலாற்றுப்படி பிருகு முனிவர் வழிபட்டதும், தருமன் என்பவனது பேச்சுக் குறை நீங்கப் பெற்றதுமான பெருமையுடையது. இத்திருக்கோயில், கணித  சக்ரவர்த்தியால் கட்டப் பெற்றது என்பர்.

திருலோக்கியில் உமாமகேஸ்வரப்  பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து  குருவருளும் திருவருளும் பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக