செவ்வாய், 26 ஜூலை, 2016

புஷ்ப யாகம்!


கவானைத் தினமும் பக்தியுடன் பூஜிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவம் வேறு எதுவுமில்லை.

இப்பிறவியில் மட்டுமல்ல; இதற்கு முன் நாம் எடுத்துள்ள பல பிறவிகளில் செய்துள்ள பாவங்களையும், அத்தகைய பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும்,  தோஷங்களினால் ஏற்படும் துன்பங்களையும் போக்குகிறது, தினமும் நாம் பகவானைப் பூஜிப்பதால் ஏற்படும் புண்ணிய பலன்!



எம்பெருமானை நம் குழந்தை போல் பிரேமையுடன் பூஜிக்கவேண்டும். நம் குழந்தை மீது  நாம் எத்தகைய பிரேமையையும், பாசத்தையும் வைத்திருக்கிறோமோ, அதே பாசத்தையும் பிரேமையையும் நாம் ஆராதிக்கும் பெருமானிடம் வைக்கவேண்டும்  என்பது  பொருள்.



அவரவர் மனோபாவத்திற்கு ஏற்ப, பகவானை ஆராதித்து, அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்கவேண்டும். சிலர் எம்பெருமானின் திருமேனி விக்கிரகத்திற்கு உயர்ந்த  ஆடைகளை அணிவித்து ஆனந்தப்படுவார்கள். வேறு சிலர், உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவனது அழகு திருக்கோலத்தைத் தரிசித்து மகிழ்வர். வேறு சிலர்,  பகவானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து ஆனந்தப்படுவதுண்டு.



நறுமணம் கொண்ட அழகான தூய மலர்கள் நம் பாரத புண்ணியபூமியில் ஏராளமாகப் பூக்கின்றன. அவை  அனைத்தும் இறைவனின் நந்தவனமாகிய இப்பூமியில் மலர்கின்றவையே!



இத்தகைய மலர்களை மாலையாகத் தொடுத்து பகவானுக்கு அணிவித்து அவனது பேரழகைத் தரிசித்து ஆனந்திப்பது, அம்மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது ஆகியவை  பக்தர்கள் யுகம் யுகமாகச் செய்து மகிழும் புஷ்ப கைங்கர்யமாகும்.



உயர்ந்த ஜாதி மலர்களைக் கொண்டு பகவானைப் பூஜிக்கும் முறையை பெரிய அளவில் செய்வதற்கு புஷ்ப யாகம் என்று  பெயர்.


 
இத்தகைய புஷ்ப யாகம்  திருப்பதி-திருமலை ஏழுமலையானின் திருச்சந்நிதியில் புஷ்ப யாக உற்சவமாக மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  வருடத்தில் ஒருநாள் புஷ்ப யாகம் செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.



புஷ்ப யாகம்!

இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தினமும் எம்பெருமானுக்குச் சாற்றப்படும் மலர் மாலைகள் மற்றும் அர்ச்சனை, ஆராதனைகள்  ஆகியவற்றுக்கு உபயோகப் படுத்தப்படும் புஷ்பங்களில் குறைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். பல காரணங்களினால் பல திருக்கோயில்களுக்குத் தினமும் அர்ச்சனை செய்வதற்கு துளசி மற்றும் மலர்கள் எதுவும்  கிடைப்பதில்லை. இத்தகைய குறைகள் பகவானின் சான்னியத்தியத்தைப் பாதிக்கக்கூடும். இவற்றை சரிசெய்வதற்காகவே திருக்கோயில்களில் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.



புஷ்ப யாகம் செய்வது மிகவும் கடினமானது. உயர்ந்த, தரமான புஷ்பங்கள் நிறைய வேண்டும். மேலும், ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்த வேத விற்பன்னர்களைக்  கொண்டு புஷ்பத்தை முதலில் அக்னியில் பிரதிஷ்டை செய்து, அதன்பின் அந்தப் புஷ்பங்கள் அனைத்தும் எம்பெருமானின் திருமேனி மீது மந்திரப் பிரயோகத்துடன்  அர்ச்சிக்கப்படுகின்றன.



முதலில் துளசிகளைக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளில் அர்ச்சிக்கப்படுகிறது. அதன்பின்பு, உயர்ந்த பல நிறமுள்ள புஷ்பங்கள் அவரது திருவடிக்கும் கீழே இருந்து  ஆரம்பித்து, அவரது திருமார்பு அளவுவரை வேத மந்திரங்கள், மற்றும் திவ்யப் பிரபந்த பாசுரங்கள் முழங்க சாற்றிக்கொண்டாடப்படுகிறது.



மிகப் பெரிய அளவில்,  உயர்ந்த ஜாதிப் பூக்கள் அனைத்தும் பகவானின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்போது, புஷ்பங்களின் நிலை உயர்ந்து கொண்டே சென்று, பகவானின் விக்கிரக திருமேனியைச் சிறிது சிறிதாக மறைக்கும்போது, கூர்ந்து பக்தியுடன் கவனித்தால், எம்பெருமானின் உதடுகள் சற்று விரிந்து புன் னகை மலர்வதைக் காணமுடியும். புஷ்பயாகத்தினால் எம்பெருமான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.



இத்தகைய புஷ்ய யாகத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம் பக்தர்களுக்கு ஏற்படுவதை அனுபவத்தில் காணமுடிகிறது.



சூளைமேடு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் புஷ்ப யாகம்!

‘தர்மமிகு சென்னை’ என்று பெரியோர்களால் புகழப்பட்ட சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் மிகப் புராதனமான, ஏராளமான திருக்கோயில்கள் திகழ்கின்றன. இன்று சென் னை மாநகரம் செல்வச் செழிப்புடன், தெய்வ பக்தி, கலை, கலாசாரம் ஆகியவற்றில் கற்பனைகளையும் மீறிய அளவிற்கு முன்னேற்றமடைந்து, லட்சக்கணக்கான குடும்பங் களுக்கு இருக்க இடம் தந்து, உணவளித்து வாழ்வு தருவதற்கு இத்திருக்கோயில்களின் சக்தியே காரணமாகும்.



அத்தகைய உன்னதமான திருக்கோயில்களில் ஒன்றுதான், மிகப் புராதனமான சூளைமேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலாகும். நம் நாடு மற்றும் மக்கள் மேலும் நலன்கள் பல பெற்று நல்வாழ்வு பெறவும், உலகம் அமைதி பெறவும் இத்தி ருக்கோயிலில், ஏகாதசிகளில் தனி தெய்வீக சிறப்பு பெற்ற கைசிக ஏகாதசியானயன்று அதிக பொருட்செலவில் மகா புஷ்ப யாக வைபவத்தை நடத்துகின்றனர்.

 

ஸ்ரீ தன்வந்திரி சந்நிதி!
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் சந்நிதி அளவற்ற சக்தி வாய்ந்த சந்நிதியாகும். இப்பெருமானுக்கு நேர்ந்துகொண்டு, பலவித நோய்களிலிருந்து  பூரண குணமடைந்த பக்தர்கள் ஏராளம்.

 
பகவானைத் தரிசிப்பது ஒன்று! ஆனால் அவனை புஷ்ப யாகத்தில் அனுபவிக்கும்  பேரின்பம் இருக்கிறதே அதற்கு ஈடாக எதையும் கூறமுடியாது.

ஆண்டுதோறும் திருக்கோயில்களில் செய்துவரும் புஷ்ப யாகம், அன்னப்பாவாடை, பவித்ர உற்சவம், லட்சார்ச்சனை, லட்ச தீபம் ஆகியவை, அறிந்தோ, அறியாமலோ தி ருக்கோயில்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து பகவானின் சிலா மற்றும் விக்கிரக திருமேனியின்  மகத்தான சக்தியைப் பாதுகாக்கின்றன.



புஷ்ப யாகத்தை தரிசிப்பது முன்வினைப் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.

கிடைத்தற்கரிய இது போன்ற வைபவங்களில்  பக்தியுடன் பங்கேற்று உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்க  வைக்கும் புஷ்ப யாகத்தைத் தரிசித்து  அருள் பெறுவோம்!

 

 

 

 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக