செவ்வாய், 26 ஜூலை, 2016

மகரம், கும்ப ராசிக்கு மாமியார் மருமகள் பிரச்னையைத் தீர்க்கும் இறைவன்


‘‘எனக்கு எல்லாருமே ஒண்ணுதான்’’ என்பதுதான் மகர ராசிப் பெண்களின் அடிப்படை குணமாக இருக்கும். பெற்ற தாய், தந்தையைப் போலவே மாமனார், மாமியாரையும் நேசிப்பீர்கள். புகுந்த வீட்டில் நுழைந்தவுடன் கள்ளங் கபடமில்லாமல் எல்லோரையும் நூறு சதவீதம் நேசிப்பீர்கள். மகரச்சனி என்பதால் வேகமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வீர்கள். அதேசமயம் சூழ்நிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் நீங்கள்தான். புகுந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவீர்கள். அதனால் எடுத்தவுடனே உணர்ச்சிகரமாக முடிவெடுக்க வேண்டாம். ‘‘இந்த வீட்ல இவங்க இப்படியெல்லாம் இருப்பாங்கன்னே தெரியாது’’ என்றெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில், பொதுவாகவே மகர லக்னம் அல்லது மகர ராசியில் பிறந்தவர்களின் மாமனார், மாமியாரிடையே எப்போதும் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல், இருவரிடமும் பேசிக்கொண்டு ஒட்டியும், ஒட்டாமலும் இருந்து விடுவது நல்லது.



உங்களின் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மகர ராசிக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதியான சனியும், சுக்கிரனும் நெருங்கிய நண்பர்கள். அதனால் உங்களின் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் மாமியார் எளிதாகப் புரிந்து கொள்வார். எல்லா விஷயத்தைப் பற்றியும் ஏதேனும் ஒரு கருத்து சொல்வார். எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கவே விரும்புவார். நீங்கள் அடிக்கடி புகழ்ந்து கொண்டே இருந்தால் போதும்... எல்லா வகையிலும் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் அவர் காதில் போட்டு வையுங்கள். ‘‘உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன்’’ என்று பேசுங்கள். ஏனெனில், துலாச் சுக்கிரன் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், ‘‘எங்கிட்ட சொல்லாம யாரும் எந்த காரியமும் செய்ய மாட்டாங்க’’ என்கிறமாதிரி பெருமை பேசுகிறவராக மாமியார் இருப்பார்.

கலாரசனை மிகுந்தவராக இருப்பார். ‘‘இந்த வீடு கட்ட ஆரம்பிச்சதுலேர்ந்து முடிக்கற வரைக்கும் எல்லாமே என் ஐடியாதான். பெயின்ட் கலர்லேர்ந்து டைல்ஸ் வரைக்கும் என் சாய்ஸ்தான்’’ என்று பேசுவார். அதேபோல தோட்டம், கொலு வைத்தல் போன்ற விஷயங்களில் எல்லாம் மிகுந்த ஆர்வம் காட்டுவார். பாரம்பரியமான விஷயங்கள் எதையும் விடாமல் பின்பற்றுபவராக இருப்பார். உங்கள் மாமியாருக்கு அவ்வளவாக வயது தெரியாது. அத்தனை தூரம் உடலையும் மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்கவே முயற்சிப்பார். ‘‘கஷ்டமெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி வாழ்க்கையை நிம்மதியா வச்சுக்கணும். வீட்லயே உட்கார்ந்திருக்காம நாலு ஊருக்கு போயிட்டு வாம்மா’’ என்பார்கள். அவரும் பிரயாணப் பிரியராக இருப்பார். ஆளுமையும், அன்பும் சம அளவில் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை பலவீனமாக இருந்தால்தான் மாமியார் கொஞ்சம் அதிக கெடுபிடிகளோடு இருப்பார். மற்றபடிக்கு மாமியார் குறித்து எந்தக் கவலையும் வேண்டாம்.
மகர ராசிக்காரர்களின் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். இங்குதான் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். மாமியாருக்கு சுக்கிரன் அதிபதியாக வருகிறார். தேவ குருவுக்கும், அசுர குருவான சுக்கிரனுக்கும் ஆகாது என்பதால், மாமனார் - மாமியாருக்குள் ஏதேனும் சிறு சிறு பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கும். அதில் நீங்கள் அவ்வளவாக தலையிடாமல் இருப்பது நல்லது. மாமனார் ஸ்தானத்திற்கு குரு அதிபதியாக இருப்பதால், சிறு சிறு விஷயங்களில் கூட அவர் நேர்த்தியை எதிர்பார்ப்பார். ‘‘வச்சது வச்ச இடத்துல இல்லேன்னா எனக்கு கோபம் வரும்’’ என்று கூறுவார். சில விஷயங்களை அவ்வப்போது குத்திக் காட்டுபவராக இருப்பார். ‘‘ஏம்மா... பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணுமே. மே மாசம் வந்துடுச்சே’’ என்று எல்லாவற்றிற்கும் முன்னதாகவே தயார்படுத்துவார். எல்லா விஷயங்களையும் தர்க்கரீதியாக அணுகுவார். ‘‘உன் மாமியாருக்கு வாழ்க்கைல இருக்கற கஷ்டங்கள் எதுவும் தெரியாது. அதனால அவ ஜாலியாத்தான் இருப்பா. ஆனா, கஷ்டத்தை தெரிஞ்சுக்கணும்’’ என்று அவ்வப்போது ஏதேனும் உபதேசிப்பார். உங்களுக்கு பொதுவாகவே மாமனார், மாமியார் பிரச்னைகள் அவ்வளாக இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். அடிப்படையாக வரும் சிறுசிறு உரசல்களை தாண்டி பெரியளவில் ஒன்றும் பாதிப்பு இருக்காது. 



உங்கள் ராசிக்கு மாமனாருக்கு உரியவராக மீன குரு வருகிறார். மாமியார் ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் வருகிறார். எனவே, அம்பிகை சந்நதியும், ஞானியரின் ஜீவ சமாதியும் ஒரே தலத்தில் இருப்பதுமான கோயில்களுக்குச் சென்றால் பிரச்னைகள் கரையும். அப்படிப்பட்ட தலமே திண்டிவனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே இருக்கும் திருவக்கரை ஆகும். இங்கு வக்ரகாளி அருள்பாலிக்கிறாள். அதேசமயம் கோயிலின் உள்ளுக்குள்ளே குண்டலினி சித்தரின் ஜீவ சமாதியும் உள்ளது. மிகுந்த அதிர்வலைகளோடு உள்ள சந்நதியாகும். வக்ரகாளியின் வெம்மையும், ஞானியரின் ஜீவசமாதி தரும் தன்மையும் ஒரு புதுமையான புத்துணர்ச்சியைத் தரும். இருவரையும் தரிசித்து வாருங்கள்... பிரச்னைகள் எளிதில் தீரும். 

கும்பம் என்பது குடத்தைக் குறிக்கும். உள்ளுக்குள் நீர் இருக்கிறதா இல்லையா என்பது நெருங்கிப் பார்த்தால்தான் புரியும். அதுவரை அது ஏதோ ஒரு பொருள் என்பதாகத்தான் கண்ணுக்குப் படும். அதுபோலத்தான் கும்பத்தில் பிறந்தவர்களும் இருப்பீர்கள். ‘‘இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு எப்படி அமைதியா இருக்கீங்க...’’ என்பார்கள் உங்களை. அதே சமயம், ‘‘அவங்க ரொம்ப அழுத்தமானவங்க. மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது. சரியான அமுங்குனி’’ என்று பேசவும் செய்வார்கள். இதுதான் கும்ப ராசியின் அடிப்படை குணாம்சம்.



புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது பூனை மாதிரி இருப்பீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களை வெளிப்படுத்துவீர்கள். பத்து நிமிடம் உங்களோடு பேசியதற்குப் பிறகுதான் உங்களைப் பற்றிய விஷயத்தை சொல்லவே ஆரம்பிப்பீர்கள். உங்கள் ராசிநாதனாக சனி பகவான் வருகிறார். மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறது. அதேபோல உங்களின் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. சனிக்கு செவ்வாய் எதிர்மறைக் கதிர்வீச்சாக இருப்பதால் எப்போதுமே ஒரு பனிப்போர் இருக்கத்தான் செய்யும். அல்லது மாமனார், மாமியார் இருவரில் ஒருவர் நோய்வாய்ப்பட்டவராக இருப்பார். எனவே, கும்ப ராசிப் பெண்களாகிய நீங்கள், இருவரையும் புரிந்து நடந்து கொள்வது நல்லது.

முதலில் மாமியார் ஸ்தானத்தைப் பற்றிப் பார்ப்போம். விருச்சிகச் செவ்வாயாக இருப்பதால் சூட்சுமமான ஆளுமைத் திறனோடு இருப்பார். மிகுந்த நுண்ணறிவோடு எல்லா காரியங்களையும் செய்வார். எளிதாக எதிரேயுள்ளவரின் மனதைப் படித்து விடுவார். விருச்சிகத்தில் சந்திரன் நீசமாவதால் எல்லா விஷயத்திலும் அனுபவத்தில் உள்ளதை மட்டுமே பேசுவார். அதனாலேயே, ‘‘என் அனுபவத்துல சொல்றேன்...’’ என்றே பல விஷயங்களைக் கூறுவார். பல விஷயங்களை உங்களுக்கு முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் திறன் பெற்றிருப்பார்கள்.

அதே சமயம் வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்தும் உங்களிடம் அடிக்கடி பேசியபடி இருப்பார்கள். ஆனால், ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பார். ‘‘நீ இந்த அர்த்தத்துல பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை’’ என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவார். அவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று திணிக்கவும் செய்வார். அவ்வளவுதான்! உங்களின் சொந்த ஜாதகத்தில் செவ்வாய் நேரடியாக சனி, ராகு பார்வை பெற்றிருப்பின், மாமியார் சிறுசிறு விஷயங்களைப் பெரிதுபடுத்துவார். கோபத்தால் வீட்டில் சண்டை வந்தபடி இருக்கும்.

மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. அரசாங்கத்துறையிலோ அல்லது சமூகத்தில் செல்வாக்குள்ள மனிதராகவோ இருப்பார். கண்டிப்பும் கறாரும் மிக்கவராக விளங்குவார். உங்களின் ராசியாதிபதியான சனியின் எதிர்மறை கதிர்வீச்சாகவே மேஷச் செவ்வாய் வருவதால், மாமனார் உங்களை எளிதில் புரிந்து கொள்ள மாட்டார். எப்போதுமே பெரிய இடைவெளி இருக்கும். பின்னாளில் சொத்துப் பிரச்னைகள் ஏதாவது வருவதை இந்த அமைப்பு காட்டுகிறது. எனவே, சில சமயம் முன்னரே வீட்டில் அமர்ந்து எல்லா விஷயங்களையும் பேசி விடுவது நல்லது. இம்மாதிரி செவ்வாய், சனி அமைப்பிருப்பதால் தனிக் குடித்தனம் செல்லவே யோசிப்பீர்கள். எனவே, ஒன்றுக்கு நான்கு முறை மாமனார், மாமியாரோடு ஒவ்வொரு விஷயத்தையும் பேசி முடிவெடுங்கள். பொறுமை, சாந்தம் என்பதுதான் உங்களின் பொதுவான இயல்பாக இருப்பதால், எல்லாவற்றையும் எதிர்கொள்வீர்கள். ஆரம்பத்தில் சில பிரச்னைகள் இருந்தாலும் போகப் போக எளிதாகும்.

தனுசு ராசியினருக்கு மாமனார் ஸ்தானத்திற்கு மேஷச் செவ்வாயும், மாமியார் ஸ்தானத்திற்கு விருச்சிக செவ்வாயும் வருகிறார்கள். இவ்வாறு முழுக்க முழுக்க செவ்வாயின் ஆதிக்கமாக வரும்போது முருகனின் பூரண ஆதிக்கமுள்ள கோயிலை வழிபடுங்கள். அப்படிப்பட்ட தலம்தான் திருவிடைக்கழி முருகன் கோயிலாகும். இத்தலத்தில் முருகன் குரா மரத்தினடியில் அமர்ந்து சிவனை பூஜித்தார். சிவனும், முருகனும் ஒருவரே என்பதை உலகிற்கே உணர்த்தும் தன்மை பெற்றது இத்தலம்.

குரா மரத்தின் கீழ் சிவலிங்கத் திருமேனியுடன், முருகப் பெருமானின் திருமேனியும் ஒருங்கே அருளும் அரிய தலம் இது. சனிக்குள் இலகும் சிவாம்சத்தையும், செவ்வாயின் அதிபதியான முருகனும் ஒன்றாக இருக்கும் தலம் என்பதால் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள். சனி, செவ்வாயின் பகைக் கதிர்வீச்சுகளின் வீர்யம் இதனால் குறையும். முருகப் பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது. சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடு துறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத்தேடுவோம்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக