சனி, 16 ஜூலை, 2016

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்!

 அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன. 

ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம்.

முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

லலிதா சஹஸ்ரநாமம்

 அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது.

தோன்றிய விதம்

 பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள்.
ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லாத் தேவதைகளும் சூழ லலிதாதேவி கொலுவிருக்கையில் வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர்.

“என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய பிரீதியின் வளர்ச்சிக்காகப் படிப்பதுடன் என் பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த சஹஸ்ரநாமத்தை எனது பிரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்யவேண்டும்”, என்று ஸ்ரீ மாதாவாகிய ஸ்ரீலலிதா தேவி
ஆசி கூறினாள்.
அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

ஆயிரம் மந்திரங்கள்

 இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின் ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.

இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.
ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.

ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம்.

அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.

செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு.
வில்வ இலை, துளசிப் பூங்கொத்து, செம்பரத்தம்பூ, நந்தியாவட்டை மல்லிகை, சம்பகம், அரணி முதலிய மலர்கள் சிறப்பு. வேறெந்த மலரையும் வைத்துச் செய்யலாம். சரஸ்வதி பூஜையன்று செய்வதும் நல்லது.

அம்பிகையின் பக்தர்களுக்கு அம்பிகையே ஏதாவது வகையில் குருவாய் வருவாள். வழியையும் காட்டுவாள். அல்லது தகுந்த குருவை அடைய வழி செய்வாள்.

பயன்படுத்தும் விதம்

 லலிதா சஹஸ்ரநாமத்தை இருவிதமாகப் பயன் படுத்தலாம்.
ஆயிரம் மந்திரங்களையும் தனித்தனியாக தொடர்ந்து கூறிவரலாம். ஒவ்வொரு மந்திரத்துக்கும் முன்னால் பிரணவத்தைச் சொல்லி மந்திரத்தையும் சொல்லி, பின்னால் நமஹ என்று கூறுகிறோம். இது நாமாவளி சொல்லும் முறை. அர்ச்சனையின்போது இவ்வாறு செய்கிறோம்.

உதாரணம்:
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
ஓம் ஸ்ரீ மஹா ராஜ்ஞை நமஹ
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை நமஹ

 இன்னொரு முறையில் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் மந்திரங்களையும் வரிசையாக ஒன்றாக இணைத்துக் கூறுகிறோம். ஆயிரம் மந்திரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்து ஒரு பெரிய மந்திரமாக அமைத்துச் சொல்கிறோம். இது ஒரு பெரிய பாடலின் அமைப்பில் விளங்கும். அனுஷ்டுப் சந்தஸ் எனப்படும் தாள அமைப்பில் இது விளங்கும். இந்தப் பாடல் வடிவைத் தோத்திரம் என்று கூறுகிறோம். இந்தத் தோத்திரத்தில் நூற்று எண்பத்து மூன்று சுலோகங்களாக ஆயிரம் மந்திரங்களும் இணைந்திருக்கின்றன. ஆனால் அமைப்பில் இது ஒரே மந்திரந்தான். பல மந்திரங்கள் இணைந்து ஒரு பெரிய மந்திரமாக உருவாகமுடியும். அவ்வாறான இணைப்பால் உருவாகிய பெரிய மந்திரத்தை மாலா மந்திரம் என்று கூறுகிறோம்.

பல மலர்கள் இணைத்துக் கோர்க்கப்பட்டு ஒரு மாலை உருவாவதைப் போலவே இருப்பதால்தான் இதனை மாலா மந்திரம் என்று கூறுகிறார்கள்.

இம்முறையில் இது ‘ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம ஸ்தோத்திர மாலா மஹா மந்திரம்’ என்று அழைக்கப் படுகிறது.

இம்முறையில் பாராயணம் செய்யப்படும்போது அதன் முன்னரும் பின்னரும் சொல்லிச் செய்யவேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
நியாசம் என்று இவற்றைச் சொல்வார்கள். ஆரம்ப நிலையில் இருந்து படித்து நன்றாகச் செய்து பழக விரும்புகிறவர்கள் நியாசத்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதுண்டு. இருப்பினும் நியாசத்துடன் செய்வது இன்னும் சிறப்பு.

மாலா மந்திர அமைப்பு

 ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராஜ்ஞி ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேஸ்வரீ

 மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும். மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது.

ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.

பிரசாதம் இனிப்பாக இருக்க வேண்டும். பொங்கல், பால் பாயாசம், பால், தேன் முதலியவை நல்லது. இவை கிடைக்காத சமயத்தில் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவற்றுடன் வெறும் தண்ணீரைக் கூட நைவேத்தியமாக வைக்கலாம். புதிதாகச் சமைத்த சாதத்தை யாரும் உண்பதற்கு முன்னதாகக் கூட அம்பிகைக்குப் படைக்கலாம்.

 அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.
பெண்கள் ஸஹஸ்ரநாம பூஜை செய்வதை அம்பிகை மிகவும் அதிகமாக விரும்புவாள்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக