செவ்வாய், 26 ஜூலை, 2016

திருவரங்குளம் பெரியநாயகி!






ம் வீட்டுக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாக இருந்து சிவ- பார்வதி குடியிருந்து காத்தருளும் தலம் என திருவரங்குளத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள்!



பெரியநாயகி யாக அம்பாள் அவதரித்து, சிவனாரை கரம்பற்றியதால், கல்யாண வரம் தரும் கோயில்; குழந்தைகளை நோயின்றிக் காத்தருளும் ஆலயம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவரங்குளம்.


புதுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்!
குலோத்துங்க சோழீச்சரம் என அழைக்கப்பட்ட இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாரின் திருநாமம்... சார்ந்தாரைக் காத்த ஈஸ்வரன். தன்னை நாடி வரும் அன்பர்களைக் காத்தருளும் மூர்த்தி இவர். ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி என அழைக்கின்றனர் பக்தர்கள்!





திருஅரங்குள நாதர் என்கிற திருநாமமும் உண்டு.
சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டவர் ஸ்ரீஅரங்குளநாதர். சிறிய மூர்த்தம்தான் என்றாலும் மிகப்பெரிய சாந்நித்தியம் கொண்டவர் சிவனார் என்கின்றனர் அடியார்கள்!





ஏழு தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான இந்தத் தலம், மிகச் சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. சிவ- பார்வதியை தரிசித்து, விளக்கேற்றி வணங்கினால், நல்ல வரன் அமையும் என்கின்றனர் பக்தர்கள்.


புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி. எனவே, இந்தத் தலத்து நாயகியின் திருநாமமும் அதுவே!


நோய் நொடியில்லாத, ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன? இந்தத் தலத்தில் அம்பாள் சந்நிதிக்கு முன்னே உள்ள ஸ்ரீசக்கரம் ரொம்பவே விசேஷம்.







இந்த ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தபடி, ஸ்ரீபெரியநாயகியை மனதாரப் பிரார்த்தனை செய்தால், நரம்புத் தளர்ச்சி முதலான உடல் கோளாறுகள், காத்துக் கருப்பு முதலானவை, மனக்குழப்பம் என சகலமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!





குழந்தையின் ஜாதகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது குழந்தை பிறந்தது முதலே ஏதேனும் உடல் உபாதையால் தவித்து வந்தாலோ... இங்கு சிவனாருக்கு தத்துக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. குழந்தையை ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீபெரியநாயகியின் சந்நிதியில் வைத்து, 'இனி, இது உன் குழந்தை. நீதான் ஒருகுறையும் இல்லாம, இந்தக் குழந்தையைக் காப்பாத்தணும்’ என்று குழந்தையை இறைவனுக்குத் தத்துக் கொடுத்துவிட்டு, பிறகு எடுத்துச் செல்கின்றனர்.


இதன் பிறகு குழந்தைகளுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும்; ஆரோக்கியத்துடன் நோயின்றி வளர்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக