புதன், 13 ஜூலை, 2016

எழில்மிகு பெருமாள் ஆலயத்தில் ஏழின் சிறப்புகள்!


ஏழு  எண்ணுக்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏழு உலகங்கள், ஏழு சமுத்திரங்கள், ஏழு தீவுகள், கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி போன்ற ஏழு நதிகள், 

திருவேங்கடவன் கோயில் கொண்டுள்ள ஸப்தகிரி எனப்படும் ஏழுமலை (கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி)  அயோத்யா, மதுரா, காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி),  துவாரகா, மாயாபுரி (ஹரித்வார்) ஆகிய ஏழு முக்தித்தலங்கள், 

அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப ஆங்கிரஸ  என்ற ஸப்த ரிஷிகள்,  அஸ்வத்தாமா, மஹாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள், 

தேவியின் அம்சமான ஸப்த மாதர்கள், 
வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கும் சூரியனின் ஏழு குதிரைகள்,
திருமணத்தில் முக்கியச் சடங்கான ஏழு அடி எடுத்து வைக்கும் ஸப்தபதி,
சங்கீதத்திற்கு ஆதாரமான ஸப்தஸ்வரங்கள், 
வாரத்தின் ஏழு நாட்கள்…  
என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 


சுமார் 6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவும் நான்கு கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட,  வைணவர்கள் “கோவில்’’ என்று போற்றப்படும் திருவரங்கத்திற்கும் கீர்த்தி மிகுந்த ஏழு என்ற எண்ணிற்கும் உள்ள தொடர்பு ஆலயத்தின் அற்புதத்தைப் பெருமை சாற்றுவதாக அமைந்துள்ளது. 







பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற பெருமையைக் கொண்டது இந்த ஆலயம். ஸப்த ப்ராகாரங்கள் எனப்படும் ஏழு திருச்சுற்றுகள் ஏழு உலகங்களைக் குறிப்பதாகக் கூறுவர். இந்த ஏழு திருச்சுற்றுகளையும் வளைத்து தன்னகத்தே கொண்டபடி அவற்றிற்கு வெளியே அமைந்திருக்கும் திருச்சுற்று அடையவளைந்தான் திருச்சுற்று என்றே அழைக்கப்படுகிறது.
எண் ஏழுக்கும் திருவரங்கத்திற்கும் உள்ளஎழிலான தொடர்புகள்:
*இந்தியாவில் ஏழு திருச்சுற்றுக்களுடன் (ஸப்த பிராகார க்ஷேத்ரம்) கூடிய ஒரே ஆலயம் என்ற பெருமையைக் கொண்டது திருவரங்கம்.  ஒவ்வொரு திருச்சுற்றுக்கும் புராண-சரித்திர தொன்மையைப் பறைசாற்றும் தனிப் பெயர்கள் உள்ளன: முதலாவது தர்மவர்மன் திருச்சுற்று, இரண்டாவது ராஜமகேந்திரன் திருவீதி, மூன்றாவது குலசேகரன் திருவீதி, நான்காவது ஆலிநாடன் திருவீதி, ஐந்தாவது அகலங்கன் திருவீதி, ஆறாவது திரிவிக்ரமன் திருவீதி, ஏழாவது சித்திரைத் திருவீதியாகும்
*ஸ்ரீ ரங்கம் ரங்க நாதப் பெருமாளுக்கு ஸ்ரீதேவி,   பூதேவி  ,  துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார், கமலவல்லித் தாயார்,   கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார் என ஏழு தேவியர்கள் உள்ளனர். 
*இந்த ஆலயத்தில் உற்சவரான நம்பெருமாள், (1)விருப்பன் திருநாள், (2) வசந்த உற்சவம், (3) விஜயதசமி, (4) வேடுபறி, (5) பூபதி திருநாள், (6) பரிவேட்டை, (7)ஆதி பிரம்மோற்சவம், ஆகிய ஒவ்வொரு திருநாளிலும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். 

* ஓர் ஆண்டில் 322 நாட்களுக்கு உற்சவங்கள் கொண்டாடப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் வருடத்திற்கு ஏழு திருவிழாக்கள். அவை: 1. சித்திரை, 2. வைகாசி, 3.ஆடி,
4. புரட்டாசி, 5. தை, 6. மாசி, 7. பங்குனி ஆகிய மாதத் திருவிழாக்கள். இச்சமயங்களில் உற்சவர் நம்பெருமாள் திருவரங்கத்தை  விட்டு வெளியே எழுந்தருளுகிறார். 

*ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடைபெறும் 1. சித்திரை, 2.வைகாசி, 3.ஆவணி, 4.ஐப்பசி, 5.தை, 6.மாசி, 7.பங்குனி ஆகிய மாத உற்சவங்களின் ஒவ்வொரு உற்சவத்திலும் ஏழாவது நாளன்று ஏழு முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். 

* இங்கு நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் ஏழாம்  திருநாளன்று ரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறுகிறது. 
*தமிழ் மாதங்களில் ஏழாவதான ஐப்பசி (துலாக் காவேரி மாதம்)  மாதத்தில் மட்டும் 30 நாட்களும்  திருமஞ்சனத்திற்காக தங்கக்குடத்தில் புனித காவிரி நதி நீர், யானையின்  மீது எடுத்து வரப்படுகிறது. பிற மாதங்களில் கொள்ளிடத்திலிருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
*தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமாவதாரத்தின் போது  ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை கொண்டவர்
 அரங்கநாதப் பெருமாள். இதனால்  ராமபிரானின் குலதெய்வமாகத் திகழ்ந்த  ரங்கநாதர் இக்ஷ்வாகு குல தனம் என்றே போற்றப்படுகிறார். 
*மார்கழி மாதம் நடைபெறும் இராப்பத்து உற்சவத்தின் ஏழாம்  திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
*ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் திருச்சந்நதியில், 1. கோடை உற்சவம், 2. வசந்த உற்சவம், 3. ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, 4. நவராத்திரி, 5. ஊஞ்சல்உ ற்சவம், 6. அத்யயநோற்சவம், 
7. பங்குனி உத்திரம் என்று வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறுகின்றன.
*இந்த ஆலயத்தில் பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சந்நதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்:
 1. முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார், 2. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார், 3. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், 4. குலசேகரர், 5. திருப்பாணாழ்வார், 6. தொண்டரடிப்பொடி, 7. திருமழிசை. 
*தெற்கு திசை நோக்கி சேவை சாதிக்கும் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் காட்டும்  தென் திசையில். 1. நாழிகேட்டான் கோபுரம், 2. ஆர்யபடாள் கோபுரம், 3. கார்த்திகை கோபுரம், 4. ரெங்கா ரெங்கா கோபுரம், 5. முதலாவது தெற்கு கட்டை கோபுரம், 6. இரண்டாவது தெற்கு கட்டை கோபுரம், (7) ராஜகோபுரம் ஆகிய ஏழு கோபுரங்கள் அமைந்துள்ளன. 
*ஏழு உற்சவங்களின் போது,  குறிப்பிட்ட மண்டபங்களைத் தவிர மற்ற மண்டபங்களுக்கு உற்சவர்  எழுந்தருளுவதில்லை: 1. வசந்த உற்சவம், 2. சங்கராந்தி,  3. பரிவேட்டை, 4. அத்யயநோற்சவம், 5. பவித்ர உற்சவம், 6.  ஊஞ்சல் உற்சவம், 7. கோடை உற்சவம்.
* இங்கு நடைபெறும் உற்சவங்களில் ஏழு சந்தர்ப்பங்களில் மட்டும் இந்த அரிய சேவைகளை ஆண்டில் ஒரு முறை மட்டுமே பக்தர்கள்  கண்டு தரிசிக்கலாம்:  1. பூச்சாட்டல்  சேவை, 2. கைசிக ஏகாதசி அன்று இரவு பக்தர்கள் பச்சைக் கற்பூரத்தைக் காணிக்கையாக்கும் கற்பூர படியேற்ற சேவை, 3. மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, 4. வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், 5. உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும்  ராமநவமி சேர்த்தி  உற்சவம், 6. தாயார் திருவடி சேவை,
 7. ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவத்தை அடுத்து தீபாவளி அன்று மாலை நம்பெருமாளுக்குச் செய்யப்படும் ஜாலி அலங்காரம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக