செவ்வாய், 26 ஜூலை, 2016

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?




சனி பகவான் மகரம், கும்பம் என்று இரண்டு லக்னங்களுக்கு அதிபதியாக வருகிறார். அதிலும் இந்த மகர லக்னத்தில் பிறந்த நீங்கள் எல்லாவற்றிலுமே திறமைமிக்கவர்களாக இருக்க விரும்புவீர்கள். சனி என்றாலே மந்தன் என்பார்கள். ஆனால் நீங்களோ, அதீத வேகத்தில் இயங்குவீர்கள். புகழேணியின் உச்சியில் ஏறிவிட ஆசைப்படுவதோடு மட்டுமின்றி, பிரபலங்களின் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். உங்கள் தந்தையார் செலவாளியாகவும், ஊர் நலன் விரும்பியாகவும் இருப்பார். உங்களின் லக்னாதிபதியான சனியே வாக்கு ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால், யாரையும் பேச்சால் சாய்த்து விடுவீர்கள். எங்கு இனிமையாகப் பேச வேண்டும்; எங்கு பொடி வைக்க வேண்டும்; எப்போது யாரிடம் பேசக் கூடாது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பேச்சில் கூட காரம், புளிப்பு, இனிப்பு என்று சரிவிகிதமாகக் கலந்து பரிமாறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அதிகமாக நேசிப்பீர்கள். என்ன வேண்டுமென்பதை முன்னரே தீர்மானித்து செய்து கொடுப்பீர்கள். மனசாட்சி கூறுவதை மறைக்காமல் வெளிப்படுத்துவீர்கள். சூழ்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட, ‘‘எனக்கென்னவோ இதுதான் சரின்னு தோணுது’’ என்பீர்கள்.

எப்போதும் கையில் பணம் புரண்டுகொண்டே இருக்கும். கோடீஸ்வரர் ஆவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணம் இருக்கிறதோ இல்லையோ, மெகா பட்ஜெட் போடுவீர்கள். வாசனைத் திரவியங்களை அதிகமாக சேர்த்து வைத்துக் கொள்வீர்கள். எப்போதும் மலர்ச்சியாகத் தோற்றமளிக்கவே விரும்புவீர்கள். வியாபார சிந்தனை அதிகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பீர்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை சரியாகக் கணித்து வைத்திருப்பீர்கள். நம்பியவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். அறிஞர்களின் நட்பை விரும்புவீர்கள். பெரும்பாலானோர் உங்களின் பரம்பரைத் தொழிலில் ஈடுபடுவீர்கள். விஷய ஞானம் அதிகம் இருப்பவர்களிடம் பேசி, நிறைய கிரகித்துக் கொள்வீர்கள். எல்லோரையும் அரவணைத்துப் போவீர்கள். ‘‘உங்களால்தான் எல்லாம் சாத்தியமாயிற்று’’ என்று எல்லோரையும் சொல்லவும் வைத்து விடுவீர்கள். பொதுநலனுக்காக குரல் கொடுப்பீர்கள். நலிவுற்ற கலைஞர்களை அடையாளம் கண்டு உதவுவீர்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைவீர்கள். பிறந்த ஊர், வளர்ந்த ஊர், படித்த ஊர் என்று அவ்வப்போது பழைய நினைவுகளோடு ஊருக்குச் செல்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி மூவரும் வருகின்றனர். இந்த மூன்று கிரகங்களும் உங்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் நன்மையையே செய்வார்கள். மகர லக்னத்தில் பிறந்து, சுக்கிரன் மற்றும் புதனின் ஆட்சி பெற்ற துறைகளான கலைத்துறையில் ஈடுபாட்டோடு இருந்தீர்கள் என்றால் சக்கைப் போடு போடுவீர்கள். சுக்கிரனும் புதனும் முதலாவதாக உதவுவார்கள். அதற்குப் பிறகு சனி உதவுவார்.

உங்களின் பிரபல யோகாதிபதியாக சுக்கிரன் வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார். பிள்ளைகளுக்காகவே வாழ்வீர்கள். இருப்பதிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். அடுத்த தலைமுறைக்கென்று பல விஷயங்களை திட்டமிட்டு செய்வீர்கள். பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயது வரை அலுவலக வேலைக்குச் சென்று, பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும் புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள். எப்படியேனும் கலைத்துறை அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலோ, அல்லது பலவீனமாக இல்லாமலோ இருந்தாலே போதும்... எல்லா வளங்களையும் கைமேல் கனியாகக் கொண்டு வந்து தருவார். சுக்கிரனோடு புதனும் சேர்ந்தால், மாபெரும் ராஜயோகம் உண்டு. இதைத்தான் ‘மாலுடன் வள்ளி சேரின் மதிமிகப் பெருகுந்தானே’ என்றார்கள். புத்தி சாதுர்யம் பிரமிக்கத்தக்க வகையில் அமையும்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சரிதான்... நடைமுறை வாழ்க்கையில் சுக்கிரனை பலப்படுத்துங்கள். காதல் திருமணம் செய்தவர்களுக்கும், ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கும் உதவுங்கள். முருங்கைக்காய், பரங்கிக்காய், நூல்கோல், சமோசா, செர்ரி பழம், மாதுளை போன்றவற்றை அவ்வப்போது ருசி பாருங்கள். எப்போதும் சுக்கிரனின் அருள் வேண்டுமெனில், வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள். உங்களுக்கு எந்தத் தசை நடந்தாலும் அதில் சுக்கிர புக்தி, அந்தரம் இருக்கும் நேரங்கள், பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்கள், 6, 15, 24 தேதிகளில் எல்லா நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.


உங்களின் ஆறாம் அதிபதி மற்றும் பாக்யாதிபதியான புதன் நல்லவற்றையே செய்வார். அவமானங்களைத் தாங்கிக் கொண்டு வளர்வீர்கள். எதிரியின் தூண்டுதலால்தான் நீங்கள் முன்னேறுவீர்கள் என்றும் சொல்லலாம். தாய்மாமன் மற்றும் தாய் வழிச் சொந்தங்கள் ஏதேனும் தொந்தரவு கொடுத்துவிட்டு விலகுவார்கள். நரம்பு தொடர்பான தொந்தரவுகள், வயிறு பிரச்னைகள், மூட்டு வலி, வலது உள்ளங்காலில் வலி வந்து நீங்கும். புதன் செவ்வாயோடு சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ, அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ கொஞ்சம் அவஸ்தைகள் இருக்கும். எத்தனை தடவை முயற்சித்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தாலோ, ஏழு அல்லது பத்தில் அமர்ந்திருந்தாலோ, திருமண வாழ்வு நிம்மதியில்லாமல் இருக்கும். ஆனாலும், இவையெல்லாவற்றையும் தாண்டி புதன் உதவ முயற்சிப்பார். புதன் 4, 7ம் இடத்தில் அமர்ந்திருந்தால் சிரமப்படுவீர்கள். ‘தாயா... தாரமா...’ என்கிற போராட்டம் இருக்கும். குருவின் பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது. இது எதுவுமே வாய்ப்பில்லை எனில், குருவை சனி பார்த்துவிட்டால் போதுமானது. குருவால் வரும் பாதக பலன்கள் குறையும்.

மேலும், ஒன்பதாம் இடம் எனும் பாக்கியஸ்தானத்திற்கும் புதனே அதிபதியாக வருவதால், தந்தைவழியில் சொத்துகள் கிடைக்கும்; தந்தையால் மிகுந்த நன்மைகள் உண்டு. அவர் பார்த்த வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு அமையும். நில புலன்களோடு புதன் வாழ வைப்பார். சொந்த ஜாதகத்தில் புதன் நன்றாக இருப்பின், தந்தையாருடனான நட்பு நன்றாக இருக்கும். அவரின் வழிகாட்டுதல் எப்போதும் உண்டு. வற்றாத செல்வத்தை இந்த பாக்கிய ஸ்தானம்தான் தீர்மானிக்கிறது. சேமிப்புகளைக் கூட இந்த இடம் பேசுவதால் வங்கிக் கணக்குகளில் பணம் நிரம்பி வழியும்.
உங்கள் ஜாதகத்தில் புதன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை... அவரை பலப்படுத்த நடைமுறை வாழ்வில் சிலவற்றை மேற்கொள்ளுங்கள். உணவில் பச்சைப் பயறு, சௌசௌ, சுண்டைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி, முந்திரி சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கும், தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கும், மனநலம் குன்றியவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் இயன்ற அளவு உதவுங்கள். புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம் போன்ற நேரங்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்கள், 5, 14, 23 போன்ற தேதிகளில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

சனி பகவான் உங்களின் லக்னாதிபதியாகவும், இரண்டாம் இடமான தனாதிபதியாகவும் வருகிறார். இதனால் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென்று கையில் காசே இல்லாதது போன்றிருக்கும். இப்படி ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கஷ்டத்தோடு வருகிறவர்களுக்கு தூக்கிக் கொடுத்து விடுவீர்கள். வாக்கு ஸ்தானாதிபதியாக சனி வருவதால், நறுக்குத் தெறித்தது போலப் பேசுவீர்கள். குழந்தைகளை அனுபவசாலியாக வளர்க்க ஆசைப்படுவீர்கள். பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும்விதமாக பிள்ளைகளை வளர்ப்பீர்கள். தெரிந்ததை சொல்லிக் கொடுத்து விடுவீர்கள். பிறகு ‘உலகம் உனக்கு போதிக்கும்’ என்று விட்டு விடுவீர்கள். சனி பகவான் எளிதில் கைமேல் கொண்டு வந்து வெற்றியை கொடுக்க மாட்டார். சுக்குபோல காய வைத்துத்தான் வெற்றி பெறச் செய்வார்.

உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்... அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்கள், 8, 17, 26 தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த சில காரியங்கள் செய்யலாம். முதியோருக்கும், விபத்தில் காலை இழந்தவர்களுக்கும் உதவுங்கள். தந்தையிழந்த பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். நிறைய பயணங்கள் செய்யுங்கள். முடிந்தபோதெல்லாம் கடலுக்கருகே சென்று தனிமையில் அமர்ந்து கொள்ளுங்கள். அருநெல்லிக்காய், கத்தரிக்காய், தக்காளி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு, பூசணிக்காய், சேப்பங் கிழங்கு, கறுப்பு திராட்சை, பாதாம் பருப்பு உணவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

மூன்று கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட, மேலே சொன்ன நடைமுறை பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தாண்டி இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அப்படிப்பட்ட ஓர் தலமே திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக தாயார் அருளுவதால், என்னைப் பெற்ற தாயே என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. இறைவன் பக்தவத்சல பெருமாள் என்கிற திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் திருவள்ளூருக்கு அருகேயுள்ளது. சென்னையிலிருந்து சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு. 
(தீர்வுகளைத் தேடுவோம்...)

மாற்றம் தரும் மந்திரம்

மகர லக்னத்தில் பிறந்தவர்கள், திருமங்கையாழ்வார் திருநின்றவூர் குறித்துப் பாடிய இந்தப் பாசுரத்தை தினமும் சொல்லி வாழ்வில் வளம் பெறுங்கள்:
ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக