திங்கள், 25 ஜூலை, 2016

ஆடிவெள்ளி அருளும் ஆனந்த வெகுமதி!



ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
 
 
தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!


மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!

ஸ்ரீ அபிராமியன்னையின் இந்ததுதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே!



தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவம்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!




ஆடி வெள்ளியன்றும் ஆடிச் செவ்வாய்க் கிழமைகளிலும் அம்மனை சிறப்பாக பூஜை செய்வது வழக்கம். ஆடி மாதம் பிறந்தவுடன் சிறிய அம்மன் கோயில் முதல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் வரை விழாக்கோலம் பூணும்.


ஆடிவெள்ளி பூஜை

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தடி அம்மன் நாகர் விக்கிரகங்களுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அரச மரத்தடி பூஜை அனைத்தையுமே காலை எட்டு மணிக்குள் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் மகாவிஷ்ணுவும் மகாலஷ்மியும் அரச மரத்தில் குடி கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம்.
 
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு இனிப்புப் பண்டம் செய்து நிவேதிக்க வேண்டும்.
 
 
முதல் வெள்ளியன்று நல்ல பாகு வெல்லம், தேங்காய் சேர்த்த இனிப்புக் கொழுக்கட்டை குறைந்தபட்சம் பன்னிரெண்டாவது செய்ய வேண்டும்.
 
இரண்டாவது வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல்.
 
மூன்றாம் வெள்ளியன்று கேசரி செய்யலாம்.
 
நான்காம் வெள்ளியன்று பருப்புப் பாயசம் செய்ய வேண்டும். கொழுக்கட்டை தவிர அனைத்து இனிப்புகளிலும் நிறைய முந்திரி, திராட்சையை வறுத்துப் போட வேண்டும்.

   
செளந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், சூக்தம், பூ சூக்தம், நீளா சூக்தம், இந்திரன் கூறிய மகாலஷ்மி அஷ்டகம், ஆதிசங்கரர் அருளிய மகாலஷ்மி ஸ்தோத்திரம் ஆகியவற்றில் இயன்றதை இல்லத்தாரே சொல்லலாம்.
 
பூஜைக்குத் தயாராகும் முறை!
 
ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலையில் எழுந்து, தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.
 
இல்லத்தில் பெண் குழந்தைகள் இருந்தால் எண்ணெய், சீயக்காய் தேய்த்து நன்கு ஸ்நானம் செய்விக்க வேண்டும். பின்னர் அழகிய தூய ஆடை உடுத்தச் செய்து, நன்கு உலர்ந்த பின் பின்னலிட்டு, பூச்சூட்டி, பொட்டிட வேண்டும்.
 
இதே போல் வீட்டில் உள்ள குத்து விளக்கை நன்கு துலக்கி, சந்தனம், குங்குமம் இட்டு, பூச்செருக வேண்டும். பின்னர் நெய்யிட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபம் முத்துப் போல் பிரகாசிக்க வேண்டும். இவள் தீபலஷ்மி. இவளது பாதங்களில் புஷ்பம் இட்டு ஆராதிக்க வேண்டும்..
ஸ்லோகங்கள் சொல்லி, நிவேதனம் செய்ய வேண்டும்.
 
பிரசாத விநியோக முறை!
 
பிரசாதத்தை முதலில் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். பின்னர் ஆண் குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் கொடுத்துவிட்டு இல்லத்தரசி உண்ணலாம்.
 
புஷ்பங்களால் அன்னையை ஆராதித்து அளவில்லா ஆனந்தம் பெற ஆடி வெள்ளி அரிய தருணம்.
 
 




 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக