செவ்வாய், 27 செப்டம்பர், 2016

முத்தான வாழ்வருளும் மூகாம்பிகை!

 

மூகாம்பிகை மூலமந்திரம்!

ஐம் கௌரி ஐம் கௌரி ஐம்
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா:

த்யானம்!

பாஸ்வத் ரத்னாபரண வஸநாலங்க்ருதே சாருஹஸ்தை:
ஸங்கம் சக்ரம் வரதமபயம் ஸம்வஹந்தி த்ரிநேத்ரி
ஹேமப்ரக்யே ப்ரணதவரஸந்தாத்ரி பத்மாஸனஸ்த்தே
காருண்யாத்ரே பகவதி மூகாம்பிகே மாம் ரக்ஷ நித்யம்.

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார். கருடபகவானின் பெயர் சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது.



அவ்வளவு மகிமை வாய்ந்த  அந்த  இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது.



அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார். அதனால் வரம் எதுவும் கேட்க முடியாத அந்த கம்காசுரன் பேச்சிழந்ததால் மூகாசுரன் என்றானான். வரம் ஏதும் கேட்க முடியாத ஆத்திரத்தோடு அலைந்த அவன், கோலமாமுனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவரைத் துன்புறுத்தினான். அவர் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்தான். அதனால் மனம் வருந்திய முனிவர் பரதேவதையிடம் முறையிட்டார். தன் பரிவாரங்களோடு தேவி, அஷ்டமி தினத்தன்று நடுநிசியில் மூகாசுரனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். அவன் இறப்பதற்கு முன் தேவியிடம், ‘‘அம்மா தங்கள் கையால் மடிவதால் என் பாவங்கள் தொலைந்து நான் சுத்த ஆத்மாவானேன். இந்த திவ்ய திருத்தலத்தில் உனது பெயர் நிலைத்திருக்கும்வரை எனது பெயரும் நிலைக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.



 தேவியும் அவனுக்கு அந்த வரத்தை அருளி மூகாம்பிகையாய் கோலமா முனிவர் பூஜித்த ஜோதிர் லிங்கத்தில் ஸ்வர்ண ரேகையாகக் கலந்தாள். இந்த ஸ்வர்ண ரேகையை அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இதன் இடது புறம் நான்முகன், ஈசன், திருமால்; வலது புறம் அலைமகள், கலைமகள், மலைமகள் உறைகிறார்கள். இந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களையும் வழிபட்ட பலன் கிட்டும். அபிஷேகம் அனைத்தும் இந்த சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் இது ஒன்று இல்லை எனினும், இது அர்த்தநாரி பீடம் என வழிபடப்படுகிறது.



தேவியின் அருளாணைப்படி ஆதிசங்கரர் ஐம்பொன்னால் ஆன மூகாம்பிகை தேவியின் திருவுருவை கொல்லூரில் பிரதிஷ்டை செய்தருளினார்.



முக்கண்கள், சங்கு, சக்கரம், அபய, வரதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து முப்பெருந்தேவியரின் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது. மூகாம்பிகையை பூஜிக்க, பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூகாம்பிகையின் பின்புறம் பஞ்சலோகத்தினாலான காளி, சரஸ்வதி தேவியர் அருள்கின்றனர். அக்கினி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.




இந்த அம்பிகையின் ஆபரணங்கள் விலை மதிப்பற்றவை. முகாபரணம் முழுதும் தங்கத்தால் ஆனது. அதில் மரகதம், கோமேதக ரத்னங்கள், ஒளிர்கின்ற நெற்றிக்கு அழகு செய்யும்  இந்திர நீலக்கற்கள், நாசியை அழகு செய்யும் பச்சைக் கல் மூக்குத்தி, வைரத் தோடுகள் என சர்வாலங்காரங்களோடு துலங்குகிறாள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த மூகாம்பிகையிடம் நேர்ந்து கொண்டு தன் பிரார்த்தனை பலித்ததன் நன்றிக் காணிக்கையாக தங்க வாளை தேவிக்கு காணிக்கையாகச் செலுத்தினார். அதை இன்றும் ஆலயத்தில் காணலாம்.



பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா காண்கிறாள் அம்பிகை. அவ்விழாவின்போது மூகாசுரன் கேட்ட வரத்தின்படி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. அதுவே தேவியின் கருணை. துர்க்காம்பிகைக்கு செய்யும் அர்ச்சனைகள் அவள் திருவடியில் வீற்றிருக்கும் மகிஷனுக்கும் செய்யப்படுவதுபோல் இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சந்நதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள். ஆதிசங்கரர் மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியைப் பாடி தேவியின் திருவருள் பெற்றார். எனவே கல்வி, கலை வளம் செழிக்க பக்தர்கள் மூகாம்பிகையை பிரார்த்தனை செய்து பயனடைகின்றனர்.



விஜய தசமி இத்தலத்தில் வித்யாதசமியாகக் கொண்டாடப்படுவது விசேஷம். தன் ஸௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.



ஒரு முறை ஆதிசங்கரர் தேவியைக் குறித்து தவம் செய்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகை தேவி அவருக்கு கஷாயம் செய்து தந்து அவரைக் குணப்படுத்தியிருக்கிறாள். அதை நினைவூட்டும் வண்ணம் ஆலயத்தில் இன்றும் இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பின் கஷாய பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுகிறது. பலவித மூலிகைகள், குறுமிளகு, இஞ்சிப்பொடி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து செய்யப்பட்டு தேவிக்கு நிவேதிக்கப்படும்  அந்த கஷாயத்தை பக்தியுடன் அருந்த சகல உடற்பிணிகளும் மனப்பிணிகளும் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதேபோன்று முதல்நாள் இரவு சுயம்புலிங்கத்திற்குச் சாத்திய சந்தனக் காப்பில் ஸ்வர்ணரேகை பதிந்திருக்கும். அந்த சந்தனமும் சகல நோய்களையும் தீர்க்கும். அந்தப் பிரசாதம் கிடைக்கப் பெறுபவர்கள் மகாபாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.



இந்த மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்டதேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருமேயானால், அவர்கள் இத்தலத்தில் ஓடும் சௌபர்ணிகை நதியில் நீராடி தூய மனதோடு தேவியை வழிபட அந்த பிரச்னைகள் தவிடுபொடியாகும்.



அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம். கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களுள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மற்ற ஆறு தலங்கள் உடுப்பி, சுப்ரமண்யா, கும்பகாசி, கோடேச்வரா, க்ரோடசங்கர நாராயணா, கோகர்ணம் ஆகியவையாகும். குடசாத்ரி மலையில் இருந்து இரண்டு கணவாய்கள் வழியாக ஆறு உற்பத்தியாகி கொல்லூர் வரும்போது சம்பாரா என அழைக்கப்படுகிறது. பல்வேறு மூலிகைத் தாவரங்கள் கலந்து வரும் இந்த ஆற்றில் விடியற்காலையில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.



மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள ஆயிரத்தெட்டு தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வெள்ளியன்று இரவு தங்க ரதத்தில் மூகாம்பிகை திருவுலா வருகிறாள். அதைக் காண சகல தேவ தேவியரும் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.



இந்த மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஐம்’, நான்கு முறை இடம்பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்குத் தரும் என்பதைக் குறிக்கிறது.

தவி மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.
பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.



அன்னை காளியிடம் பக்தி செலுத்தி நமக்கு சாக்த உபாசனையின் மேன்மையை தன் புனித வாழ்வின் மூலம் நிரூபித்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். அவர் தன் சீடர்களிடம், ‘‘என்னைப் போன்ற முட்டாள் குழந்தையை அன்னை காளியைத் தவிர யாரால் நேசிக்க முடியும்?’’ என்று சொல்வாராம். மேலும் ‘ஆலோபகோபவிதிதா’ என்றும் ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு. அறிவு முதிர்ச்சியில்லாத சிறுவர்களாலும் இடையர்களாலும் கூட அறியப்படக்கூடியவள் என்று அது போற்றுகிறது. அவளுடைய குழந்தைகளாகிய நாம் அவளை எப்படி உபாசித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அனுக்ரஹம் செய்வாள். பக்தியும் சிரத்தையுமே முக்கியம்.



 ‘ஐம்’ என்பது வாக்பவ பீஜம். இந்த ஐம் பீஜம் இடம் பெற்றிருப்பதாலேயே பாலா மந்திரம் பெருமை பெற்றது. பாலா மந்திரம் இடம் பெற்றதால் பஞ்சதசீ மந்திரம் பெருமை பெற்றது. பஞ்சதசீ மந்திரம் இடம் பெற்றதால் மஹாக்ஷோடஸி மந்திரம் மகத்தானதானது. அவ்வளவு பெருமை பெற்ற ஐம் பீஜம் இந்த மூகாம்பிகையின் மூல மந்திரத்தில் நான்கு முறை இடம் பெற்றுள்ளதிலிருந்தே இந்த மூகாம்பிகையின் மகிமையை அறியலாம். சர்க்கரை என்றால் நா இனிக்காது. அதை சுவைத்தால்தான் இனிக்கும். அதே போன்று மூகாம்பிகை தேவியின் மூல மந்திர மகிமையை அனைவரும் ஜபம் செய்தால்தான் அறிய முடியும். இந்த மந்திரம் பேச்சிழந்தவனையும் பேசவைக்கும் ஆற்றல் கொண்டது. சொல்லாற்றலால் சாதகன் இந்த உலகத்தையே வெல்லலாம். அவளே ஜகஜ்ஜனனீ, பரதேவதை என்ற திடமான நம்பிக்கையுடன் உபாசித்தால் பதினாறு செல்வங்களையும் தந்து காப்பாள் மூகாம்பிகை.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்திலும் பாஸ்கரராயர் பிரதிஷ்டை செய்த மேருவுடன் கூடிய மூகாம்பிகை திருவருள் புரிந்து வரப்ரசாதியாக அருள்கிறாள்.
 
 
 

புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

                


சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது அன்று “அகல்கில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”,  விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுண்டப் பதவியும்  பெறுவர்.
 
வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஒரு  ஸ்லோகம் இது
 
ஸ்ரீவைகுண்ட வ்ரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே
ரமயா ரம மாணாய  வேங்கடேசாய மங்களம்
 
பரமபதத்தில் பரவாசுதேவன் ரூபத்தில் இருந்துகொண்டு பக்தரக்ஷணம் எண்ணும் தன் காரியத்தை நன்கு நிறைவேற்ற இயலாமல் (இந்த  கலியுகத்தில்) எம்பெருமான் திருமலையில்  ஸ்வாமி புஷ்கரிணி தீரத்தில் திருவேங்கடமுடையான் ரூபத்தில் அர்ச்சையாய் எழுந்தருளியிருந்து பக்தரக்ஷணம் எனும் காரியத்தை நன்கு நிறைவேற்றுகிறான். மஹா லக்ஷ்மியும் திருமலையில் தனிக் கோயில் கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோவிலாகக் அமைத்துக் கொண்டாள் அத்தகைய திருவேங்கடையமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

இவ்வாறு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், ஏழுமலை வாசன், ஸ்ரீநிவாசன், நெடியோனாகிய திருவேங்கடவன் திருமலையில் இந்த கலியில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளியது புரட்டாசி மாதம் திருவோணத்தன்றுதான். ஆகவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். இதை பெருமாள் மாதம் என்றும் அழைப்பர். அதுவும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அவரை வழிபட மிகவும் உகந்தது.

பலர் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபடுவர். பலர் இல்லங்களில் சனிக்கிழமையன்று வேங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவர். 

சிறு வயதில் நாங்கள் நெற்றியில் திருமண் தரித்து, சொம்பு கையில் ஏந்தி வீடு வீடாக சென்று “நாராயண மூர்த்திக்கு” என்று  அரிசி பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு வந்து அதில் மாவிளக்கு செய்து பெருமாளுக்கு படைத்து வழிபடுவோம். அன்று அவ்வாறு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு அரிசி பிச்சையும் போடுவோம்.

நம்முடைய பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில்  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், நெடியானான திருவேங்கடவன் "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்தநாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில்  பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும். அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில்  மூலவராகவே மாட வீதீ வலம் வந்து  சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.  
மூலவராக மலையப்பசுவாமி கருட சேவை

புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம். புதனின் அதி தேவதை பெருமாள் ஆவார். ஆகவே  புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான்.  அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள்  ஆயிற்று

புரட்டாசி  விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக  இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த கோரிக்கை.


மலையப்ப சுவாமி

இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ”ஏடுகொண்டலு வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா…’ 
ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,  என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.



வடுவூர் இராமர் 

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி. அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.   ஒருநாள் அவர்  ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார். பெருமாளுக்கு  அர்ச்சனை செய்வதற்காக  அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.  அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக்  இருந்ததை கவனித்தார். தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

மறுநாளும் அவர் திருவேங்கடவனின்  சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு  குழம்பிப் போனார்.  அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன் . அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து  கொண்டிருந்ததைக் கண்டார் “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி.

அதற்கு அந்த பக்தர் “அரசே… நானோ பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் வாடும். எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.
 
 
இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன்  மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு  செல்வம்  அளித்தார்.  குசேலனைப் போல  ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக  திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

ஸ்ரீ: கருடப்பத்து!

புரட்டாசி சனிக்கிழமையின் போது பல இல்லங்களில் கருடபத்து சேவிப்பது வழக்கம்.  “கருடன் மீதீல் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே” என்று இந்த கருடப்பத்தில் வருவதால் அன்று.. “ஆதி மூலமே”  என்றழைத்த யானைக்கு கருடன் மீதில் அமர்ந்து வந்த காத்தருளிய கண்ணன் நம்மையும் காத்தருள்வான் என்பது திண்ணம். இதோ கருட பத்து.



ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியேய ருக்கன் பதினெட்டுஞ் சேரும் 
காரணனே கருமுகில் பொன்மேனி சேருங் கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் 
வாரணனே லட்சுமியோடெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா
ஆரணனே ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (1)

 

மந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ்சேரும் வாழ் கிரக மொன்பதுமே வந்து சேரும்
கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நூல் வேதங் கலந்து வாழும்        
நந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற 
ந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (2)

 

மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ 
சீல முதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே சிவனுடைய திருநாமம் நீதானாகும் 
காலமுதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே கருணை பெருமிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங் கையேந்துங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (3)

 

நவ்வென்றும் கிலியென்றும் ஓம் சிவாய வென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்காரரீங்காரமாகித் தவமுடைய இவ்வெழுத்தும் நீதானாகும்,
ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்துபோற்ற 
அவ்வென்று ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (4)

உதிக்கின்ற சிவசொரூப முனக்கேயாகும் ஓம் அவ்வும் உவ்வும் கிலியுமென்றே 
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சைமுகில் மேனியனே பனிந்தெனுன்னை                                                     
விதிக்கிசைந்த மெய்ப்பொருளே அரிகோவிந்த விளக்கொளி போல் மெய்தவமே விரும்பித்தாதா அதற்கிசைந்த நடம் புரியுங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் புரிவாயே. (5)

வேதமுதலாயிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய் 
பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணை வருவாய் யசோதைபுத்ரா 
நாதமுதல் வித்துவா யுயிர்க்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் 
வாதபிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(6)

முக்கோண
நாற்கோண மொழிந்தைங்கோண முச்சுடரேயறு கோண மெண்கோண மாகும்
ஷட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும்  
இக்கோணம் இது முதலாய் வகாரமட்டும் இறைவனாய்த் தானிருந்துரட்சித்தாலும்           அக்கோண மீதிருந்து கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே. (7)

பச்சை முகில் மேனியனே உனக்கு இந்த பார்தனிலே பத்தவதாரமுண்டு       
மச்யமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும் வாம(ன) மென்றும் ராமன் என்றும் பவித்யமென்றும் துஷ்டரையடக்க மோகினி வேடங் கொண்டு தோன்றினாயுன் சொரூபமெல்லாம் அறிவாருண்டோ அச்சந்தீர்த்தெனையாளக் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(8)

வேதியனாய்த் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்கரூபமானாய் சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருப்பாய் தரணி வாழ்க                  சோதனைகள் பார்த்திடுவோர் துடிப்போர் தம்மை துஷ்டரையும் வதைசெய்து லோகமாள்வாய் ஆதிமுதலோரெழுத்தே நீ கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (9)

மாயவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா                              காயம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா           நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா                 ஆயர் குலத்துதித்தவனே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (10)

முப்புரத்தை யெரித்தவனே இப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகந்நாதா முன்னே வாவா
எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைபங்கிலிருப்பவனே இறங்கி வாவா                            ஒப்பிலா மணி விளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா   
அப்பனே ரகுராமா கருடன் மீதில் அன்புடன் ஏறி வந்தருள் செய்வாயே. (11)

துளசிமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா                      களப கஸ்தூரியனே கடாட்சந்தாதா கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா                          பரம் பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பக்தி முக்தி சித்தி செய்யவுன் பாதந் தாதா         அளவிலா மெய்ப்பொருளே கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே.(12)