செவ்வாய், 27 செப்டம்பர், 2016

அற்புத வாழ்வருளும் அக்னி துர்க்கை!



அக்னி துர்க்கை த்யானம்!

ஜ்வாலாமாலா வலீடாஜ்வலநசாதனு: சங்க சக்ராஸிகேடான்
சூலம் ஸ்ந்தக் ஜநீம்பா கர ஸரஸிருஹை: ஸந்ததானா த்ரிநேத்ரா:
ஔர்வாக்னீம் ஸங்கிரந்தீ ரணபுவிதிதீஜான் நாசயந்தீ பராஸா
துர்க்கா ஜாஜ்வல்யமானா பவது மம ஸதா ஸிம்ஹஸம்ஸ்தா புரஸ்தாத்:


அக்னி துர்க்கை காயத்ரி!

ஓம் அக்னி துர்க்காயை வித்மஹே
ஸிம்ம வாஹின்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.


அக்னி எனும் நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையே, ஜாதவேதோ எனும் அக்னி துர்க்கை. இத்தேவியின் புகழை, துர்க்கா ஸூக்தம் பல இடங்களில் போற்றுகிறது; செந்தீ நிறத்தினள். தனது ஒளியால் பகைவர்களை அழிப்பவள். தன்னை வணங்கும் பக்தர்களின் ஆபத்துகளை போக்குபவள். சிங்கத்தின் மீது ஆரோகணித்திருப்பவள். கேடயம் ஏந்திய தோழியரால் வணங்கப்படுபவள். எட்டு கரங்கள் கொண்ட தேவி இவள். இத்தேவியே இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, சிம்மாரூடையாய் தோற்றமளிக்கும்போது, கந்த துர்க்கா தேவி எனவும் போற்றப்படுகிறாள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அக்னி இல்லாமல் யாக, யக்ஞங்கள் நடைபெறவே முடியாது. அதன் வடிவாக விளங்குபவள் இந்த அம்பிகை. கிராம தேவதைகளான மாரியம்மன், பிடாரி போன்றோரின் தலையில் கொழுந்து விட்டு எரியும் அக்னி ஜ்வாலையைக் காணலாம். இது, அவர்கள் அக்னி துர்க்கையின் அம்சம் கொண்டவர்கள் என்பதை எடுத்துணர்த்தவே.
இத்தேவி அம்பிகையின் முகத்திலிருந்து தோன்றியவள்.

ஒரு நொடியில் உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் சக்தி கொண்டவள். தேவியின் திருவருளைப் பெற விழையும் ஒவ்வொரு பக்தரும் இந்த அம்பிகையையே சரணடைகின்றனர். தேவரும் முனிவரும் இவளை நாடியே அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். இத்தேவி பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்கு பயத்தையும் தருபவள்.

யோகத்தில் இருந்த ஈசனின் யோகத்தைக் கலைக்க தேவர்களின் தூண்டுதலால் மன்மதன் மலரம்புகளை ஈசன் மீது தொடுத்தான். தேவியின் பதியாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பு அவனைச் சாம்பலாக்கியது. சித்திரசேனன் என்பவன் அந்த சாம்பலை ஒரு பொம்மையாக்கினான். அதை ஈசன் பார்த்தவுடனே அந்த பொம்மை உயிர் பெற்று கம்பீரமாக எழுந்து நின்றது. அவனே பண்டாசுரன். ஈசனின் கோபாக்னி சாம்பலிலிருந்து உண்டானதால் உக்கிரத் தன்மை கொண்ட அசுரனானான். அசுரகுருவான சுக்கிராச்சார்யாரின் ஆலோசனைப்படி அரிய தவமிருந்து ஈசனருளைப் பெற்றான். வலிமை மிக்கவனாகி, பெரும் அசுர சேனையோடு தேவர்களை தேவ லோகத்திலிருந்து விரட்டி விட்டு தன் ஆதிக்கத்தை அங்கு செலுத்தி எல்லா லோகங்களையும் ஜெயித்து வெற்றி வீரனானான்.

அதனால் மனம் நொந்த தேவரும் முனிவரும் பராசக்தியைக் குறித்து யாகம் செய்யத் தீர்மானித்தனர். அதன்படி அவர்கள் செய்த வேள்வியில் பேரொளியாய் யாகத் தீயினின்று வெளிப்பட்டாள் அக்னி துர்க்கை. அனைவருக்கும் திருவருள் புரிந்தாள். தேவியை தரிசித்த பேரானந்தத்தில் அனைவரும் அவளை வணங்கினர். விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. தேவி தன் பரிவாரங்களுடன் பண்டாசுரன் வசிக்கும் சூன்யக நகரை அடைந்தாள். யுத்த களத்தில் இரு படைகளும் போரிட்டன. பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வி யாருக்கு என புரியாத நிலை உருவானது. போர் தர்மத்தை மீறி பண்டன் இருளில் போர் புரிந்தான். திடீர் திடீரென இருளில் தாக்கும் அசுர சேனைகளுக்குப் பதிலடி கொடுக்க திருவுளம் கொண்டாள் தேவி.

மண், கல் கோட்டைகளைத் தகர்த்து எதிரிகள் உள்ளே நுழையலாம். முதலைகள் நிறைந்த அகழியைக்கூட எதிரிகள் சமாளித்துவிடுவர் என தீர்மானித்த தேவி, அக்னியால் கோட்டை அமைக்க தீர்மானித்தாள். அதில் பிரவேசிக்க முனைந்தால் எரிந்து சாம்பலாக வேண்டியதுதான். எனவே யுத்த களத்தைப் பிரகாசப்படுத்தும்படி திதி நித்யா தேவியருள் இருவரான வஹ்னிவாசினிக்கும், ஜ்வாலாமாலினி தேவிக்கும் கட்டளையிட்டாள். அதன்படி நூறு யோஜனை பரப்பளவுள்ள பூமியை வளைத்து முன்னூறு யோஜனை ஜ்வாலை வரும்படி நெருப்புக்கோட்டையை எழுப்பினர். அதன் வாயிற்படி மட்டும், தான் நின்று போர்புரிய, வெப்பமின்றி இருக்க அன்னை கட்டளையிட்டாள்.

எதிரிகளின் சேனைகள் தேவியின் சேனையை அண்டாமல் தடுக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய அக்னி பிராகாரம் அமைத்த காரணத்தால் இந்த தேவி அக்னி துர்க்கை எனப் போற்றப்படுகிறாள்.

பண்டாசுர வதத்தின் பின் காமனைப் பிரிந்த ரதி தேவியின் அவல நிலைக்கு மனமிரங்கி கருணை உள்ளத்துடன் அருள் புரிய ஈசனை தேவி வேண்டினாள். அவளது பெருங்கருணையால் மன்மதன் உயிர்பெற்று ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு வரமளித்தார்.

இத்தேவி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகளினால் துன்பம் ஏற்படாமல் இருக்க ஜ்வாலாமாலினி, வஹ்நிப்ராகாரமண்டலா என்ற பெயர்களைப் பெற்று அக்னி ஜ்வாலை போன்ற அரணாக இருந்து அவர்களைக் காக்கிறாள். இவள் தன் திருக்கரங்களில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கியருள்பவள்.

இவளே அறியாமை எனும் இருளை அழிப்பவள். ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்து யோக சித்தியையும் அருள்பவள். இருள் சூழ்ந்த இடத்தில் நம் கண்களுக்கு எதுவும் புலப்படாது. அதனால் அந்த இடத்தில் எதுவுமே இல்லை என்ற பொருளில்லை. நமது கண், காது, மூக்கு போன்ற இந்திரியங்கள் ஓரளவுக்குத்தான் பொருட்களை உணர்த்தும்.

 அக்கண்களால் காணமுடியாத அரிய பெரிய பொருட்களை நாம் அகக் கண்களால் காணமுடியும். அறியாமை எனும் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியை நாம் மனதில் ஏற்ற, அறியாமை என்ற இருள் தானாகவே மறையும். அந்த ஞானத்தை நாம் எவ்வளவு முயன்றாலும் பெறமுடியாது.

அவள் அருள் கிட்டினால் நொடியில் பெற்றிடலாம். அக்னி துர்க்கையே நம் அறியாமை இருளைப் போக்கியருள்பவள்.

இந்த அக்னி துர்க்கையின் தத்துவத்தில்தான் ஸப்தஸதி பாராயணம் எனும் தேவி மஹாத்மியத்தின் பதிமூன்று அத்தியாய தேவதைகளை பதிமூன்று தீபங்களில் ஆவாஹனம் செய்தும் சமஷ்டியாக பூஜிப்பதும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

கேரள தேசத்தில் பகவதி சேவை எனும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தீபத்தில் தேவியை ஆவாஹனம் செய்து அனுஷ்டிக்கப்படும் பிரசித்தி பெற்ற வழிபாடு அது. யோக முறையில் சித்தி அடைய பெரிதும் உதவுபவள் இந்த அக்னி துர்க்கை. இவளே ஆத்மா. உள்ளத்தில் ஜோதிபோல் ஆத்மா விளங்குகிறது. இவள் சத், சித், ஆனந்தம் போன்ற வடிவினளாய் நம் உடலின் உள்ளேயும் வெளியேயும் பிரவேசித்து தான் ஒருவளாகவே விளங்குகிறாள். எது இருக்கிறதோ அது சத், எது பிரகாசிக்கிறதோ அதுவே சித், எது பிரியமானதோ அது ஆனந்தம் இந்த மூன்றும் சேர்ந்தவளே சச்சிதானந்த ரூபிணியான அக்னி துர்க்கை.

நவராத்திரியின் மூன்றாவது நாளான த்ரிதியை திதி அக்னி துர்க்கைக்கு உரியது.

இவளே அக்னியில் ஷடாக்ஷர வடிவமாய் இருப்பவள். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பு 6 குழந்தைகளாக வெளியில் வந்தபோது அதில் ஞானச்சுடர்களாக சூட்சுமமாக இருந்தவளே அக்னி துர்க்கை. யாகங்களில் அர்ப்பணிக்கப்படும் யாக திரவியங்களை தனக்குள் ஏற்று அவற்றை பரிசுத்தமாக்கி, அக்னி வடிவமாய் துலங்குபவள். இவளை வணங்கினால் மாயை விலகி ஞானம் கிட்டும். மாயை, மகாமாயை என இரு வித மாயைகள் உண்டு. மாயை என்பது சாதாரண மனிதர்களைப் பற்றும். ஆனால், மஹாமாயையோ ஞானியரையும் சித்தர்களையும்கூடப் பற்றும். நாம் ஞானம் அடைந்துவிட்டோம் என்ற அகங்காரம்தான் அந்த மகாமாயை.

தட்சனின் மகளாகப் பிறந்த தாட்சாயணி அக்னியில் பஸ்மமான பின், ஈசன் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தாட்சாயணியே மஹாமாயை. அந்த மஹாமாயையை சாம்பலாக்கியபின் ஞானசக்தியாக ஈசன் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார் என்பதே அதன் தாத்பரியம். யாகத்தில் தோன்றும் அக்னி மூலமாக நம்முடைய எத்தனையோ தீய கர்மாக்களுக்கு பரிகாரம் கிட்டும். அதனால் இந்த துர்க்கை யாகபரிகார துர்க்கை என்றும் போற்றப்படுகிறாள். யாகங்களில் இடப்படும் திரவியங்களுக்கு அதிபதி என்பதால் இத்தேவி வாசம் செய்யும் இடங்களில் பரிமள சுகந்தம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும். கேனோபநிஷத்தில் அம்பிகை ஒரு மாபெரும் ஜோதியாக வர்ணிக்கப்படுகிறாள்.

நம் சரீரத்தினுள்ளும் தினமும் ஹோமம் நடக்கிறது. நாம் உண்ணும் உணவையே நம் உடலில் ஜீரண சக்தியாக ஜீரணாக்னியாக இருந்து தினமும் ஏற்றுக்கொண்டு நம்மை சக்தியோடு வைத்திருக்கிறாள் தேவி. நம்முள் நடக்கும் நித்ய ஹோமத்திற்கு நாம் இடும் ஹவிஸே அன்னம்.  பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளை இத்தேவி தீர்த்தருள்பவள்.

திரிதியை திதியில் பொங்கலிட்டு அதில் தேன் கலந்து இத்தேவிக்கு படைக்க அந்தக் குறைகள் தேவியின் திருவருளால் நீங்கும். இந்த தேவியை தினமும் வேண்டிக்கொள்ள, நின்று போன கட்டிட வேலைகள் முடியும். சொத்து பிரச்னைகள் நீங்கும். மூலம், சூலநோய், வயிற்று நோய்கள், வெண்குஷ்டம் போன்ற வியாதிகள் மறையும். மாணவர்கள் இந்த தேவியை பிரார்த்தித்தால் ஞாபகமறதி நோய் நீங்கும்.

முக்கண்ணியாக விளங்கி பக்தர்களைக் காப்பதே தன் கடமையாகக் கொண்ட அக்னி துர்க்கை தேவியைப் பணிந்து,

ஜாத வேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸன: பர்ஷத்தி துர்காணி
விச்வாநாவேவசிந்தும் துரிதாத்யக்னி

-என்ற மந்திரத்தைச் சொல்லி அக்னி துர்க்கையை வழிபட்டு வளம் பல பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக