யோகாதிபதி சிவனின் யோகத்தைக் கலைப்பதற்காக தேவர்களது தூண்டுதலால் காமன் மலரம்புகளை ஈசன் மீது தொடுத்தான். அதனால் கோபமுற்ற ஈசனின் நெற்றிக்கண் கிளப்பிய தீப்பொறிகள் மன்மதனைச் சாம்பலாக்கியது. சித்திரசேனன் என்பவன் அந்தச் சாம்பலை மனித உருவாக்கினான். அதை ஈசன் நோக்கியவுடன் அது உயிர் பெற்று எழுந்து கம்பீரமாக நின்றது. அவனே பண்டாசுரன் எனப் பெயர் பெற்றான்.
ருத்ர கோபாக்னி சாம்பலிலிருந்து தோன்றியதால் உக்கிரத் தன்மையுடைய அசுரனாகத் தோன்றிய பண்டாசுரன் ஈசனைப் பணிந்து வணங்கினான். அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் உதவியால் விவரமறிந்து கடுந்தவம் புரிந்து ஈசனருள் பெற்றான் பண்டாசுரன். பெரும் அசுர சேனையோடு மிக்க வன்மையுடவனாகி, தேவர்களை தேவலோகத்தினின்று விரட்டிவிட்டு தன் ஆதிக்கத்தை அங்கு செலுத்தி, எல்லா லோகங்களையும் ஜெயித்து வெற்றி வீரனாகத் திகழ்ந்தான்.
தேவர்களும் முனிவர்களும் வேதனைப்பட்டு பராசக்தியைக் குறித்து மஹாயக்ஞம் செய்வதென்று தீர்மானித்தனர். அன்னை பேரொளியாய் யாகத் தீயில் இருந்து வெளிப்பட்டு அனைவருக்கும் திருவருள் புரிந்தாள். தேவியின் தரிசனம் கண்டு அனைவரும் பேரானந்தம் கொண்டு எல்லோரும் அவளை வணங்கினர். விண்ணிலிருந்து பூமாரி பெய்தது. அன்னை தன் பரிவாரங்களுடன் பண்டாசுரன் வாழ்ந்து வரும் ‘சூன்யக நகரை’ அடைந்தாள். யுத்த களத்தில் இரு படைகளும் சந்தித்தன. பெரும்போர் மூண்டது. வெற்றி யாரைச் சார்வது என்று மயக்கம் கொண்டது. போர் தர்மத்தை மீறி பண்டாசுரன் இருட்டில் யுத்தம் செய்தான். திடீர் திடீரென இருளில் தாக்கும் அசுர சேனைகளுக்குப் பதிலடி கொடுக்க திருவுளம் கொண்டாள் பராசக்தி.
மண், கல் கோட்டைகளைத் தகர்த்து எதிரிகள் உள்ளே நுழைந்து விட வாய்ப்புண்டு. நீரால் சூழப்பட்ட முதலைகள் நிறைந்த அகழியைக் கூட எதிரிகள் சமாளித்து விடுவர். ஆனால், அக்னியால் சூழப்பட்ட அரணைக் கடக்க முற்பட இயலுமா? யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அப்படி முயற்சித்தால் சாம்பலாக வேண்டியதுதான். அஞ்ஞான வடிவான எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, ஞானவடிவான அக்னியால் கோட்டை அமைக்க தீர்மானித்தாள் தேவி.
போர் தர்மத்தை மீறி பண்டனின் மந்திரியான விஷங்கன் இருளில் போர் புரிந்தான். யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினிதேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜ்வலிக்கும் தன்மை கொண்டவர்கள்.
ஜ்வாலா மாலினி என்றால், நெருப்பையே மாலையாக அணிந்தவள் என்று பொருள்! பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்கு பயத்தையும் தருபவள். நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையை தாமக்னி வர்ணாம் என்று வேதம் போற்றுகிறது. அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.
இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்தார்கள். காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுந்தரி சண்டபா குவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகனையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள். அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள்.
‘‘உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்களுக்கு, வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும்,’’ என்றும் அம்பிகை அருளினாள்.
எதிரிகளின் சேனைகள் தேவியின் சேனைகளை அண்டாமல் தடுக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய அக்னி ப்ராகாரம் அமைத்த காரணத்தினால் இந்த தேவி ஜ்வாலா துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
எதிரி வர்க்கங்களை அழிப்பது ஒரு வகை என்றால், எதிரிகள் தன் பக்கமே நெருங்காமல் தடுப்பது ஒரு வகை. அப்படி தன் பக்தர்களிடம் தீமை ஏதுமே நெருங்க முடியாதபடி காப்பவள் ஜ்வாலா மாலினி. இவளது பக்தர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். புறப் பகைவர்கள் மட்டுமல்லாது நம்முள்ளேயே இருந்து நம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பொறாமை, கோபம், பேராசை போன்ற எதிரி வர்க்கங்களையும் ஜ்வாலா மாலினி பொசுக்கி விடுவாள்.
எதிரி என்றும் பகை என்றும் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் அஞ்ஞானம். அறியாமை எனும் இருள் நம்மைச் சிந்திக்க விடாது; குரோதமும் கோபமும் அஞ்ஞானத் தின் பிள்ளைகள்.
இவற்றுக்கு இடம் கொடுத்தால் வாழ்வே இருள் மயமாகி விடும். ஆனால், அக்னியோ என்றும் ஞான ஸ்வரூபம். இந்த அக்னியின் ஒளி வந்தால் மட்டுமே இருள் விலகும், அதுதான் ஜ்வாலா மாலினியின் பணி!எதிர்பார்ப்பில்லாமல் இவளை உள்ளார்ந்த பக்தியுடன் வணங்கி வந்தால், எதிர்பாராத தருணத்திலெல்லாம் வாழ்வில் வளங்களை அள்ளிக் கொடுப்பாள்.
செல்வ வளத்துக்கும் பண வரவுக்கும் ஒரு குறைவும் வராது. இவளை வணங்குவதால் ஆகர்ஷண, வச்ய, ஆவேச சித்திகள் அனாயாசமாக உண்டாகும். செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பது போல, எங்கும் இவர்கள் பேச்சுக்கே மதிப்பு இருக்கும். பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் தலைமைப் பொறுப்பேற்கவும், அனைவரையும் தன் சொல்படி கேட்க வைக்கவும் ஜ்வாலா மாலினியின் அருளால் முடியும். இந்த தேவியை பக்தியோடும் முறையான வழியிலும் வணங்குவோர்க்கு சகல சித்திகளும் உண்டாகும்.
‘‘பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினள். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம்’’ என்கிறது ஸௌந்தர்யலஹரி. தன்னை உபாசிப்பவர்களை எவ்வித துன்பமும் அணுகாமல் காக்கும் தேவி இவள். ஒரு நொடியில் உலகை அழிக்கும் சக்தி உடையவள்.
தேவ தேவியர்களையும் மற்றும் முனிவர் முதலான பலரையும் காத்தருளும் இவ்வன்னை பல அசுரர் களை மாய்த்திருக்கிறாள். இத்தேவியின் செயல்கள் துஷ்டர்களுக்கு பயத்தையும், பீதியையும் தருபவை. ஆனால், சாதுக்களுக்கும், ஞானியர்களுக்கும், அவளை மனமுருகி வழிபடுவோர்க்கும் அவளுடைய செயல்கள் நன்மையளிக்கக் கூடியவை.
பண்டாசுர வதத்தின் பின் காமனைப் பிரிந்த ரதிதேவியின் அவலநிலைக்கு மனமிரங்கி தாயுள்ளத்துடன் அருள் புரிய பரமனை தேவி வேண்டினாள். அவரது பெருங்கருணை கடாட்சத்தினால் உயிர் பெற்று ரதி தேவியுடன் இணைந்தான். உலகிற்கு அவன் உருவம் தெரியாதென்றும், ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் புலப்படுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார் ஈசன்.
அம்பிகை தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகளினால் துன்பம் ஏற்படாமலிருக்க ஜ்வாலா மாலினி க்ஷிப்த வஹ்னி ப்ரகார மண்டலா எனும் திருப்பெயரோடு பக்தர்களை அக்னி ஜ்வாலை என்ற அரணாக இருந்து காப்பாற்றுகிறாள். ஜ்வாலா துர்க்கா நெருப்பு மயமான பாணம், வில், அம்பு, சங்கு, சக்ரம், வாள், கேடயம், சூலம், தர்ஜனி முதலானவற்றைத் தன் திருக்கரங்களில் கொண்டிருப்பவள். மூன்று கண்களை உடையவள்.
சிம்மத்தை வாகனமாகக் கொண்டவள். திரிபுரசம்ஹாரம் செய்த பரமசிவ பத்தினியின் திருப்பாதங்களில் ஒலிக்கும் இரண்டு சதங்கைகளும் அதன் ஒலியால் நம்மை ‘அஞ்சேல் நான் உனை ரக்ஷிக்கிறேன்’ என்று நமக்கு அபய வாக்கு தருவது போல் உள்ளது. தேவியின் தாமரைப் பாதங்கள் சிவந்து ஒளிர்ந்து இருளை நீக்குகின்றன! நகதீதிதி ஸஞ்ஜன்ன தமஞ்ஜன தமோகுணா எனும் லலிதா ஸஹஸ்ரநாமாவும் தேவியின் பாதங்களை வணங்குபவர்களின் தமோகுணத்தை தேவி நீக்கியருள்கிறாள் என்று கூறுகிறது.
ஒளிபட்டவுடன் இருள் ஓட வேண்டியதுதானே! மேன்மையும், அழகும் நிறைந்த அந்த பாதங்களை மூகர் தன் பாதாரவிந்த சதகத்தில் வேண்டுவது போல நாமும் தேவியிடம் ‘அம்மா நொடிப்பொழுதேனும் உன் திருவடிகளை என் தலைமீது வைத்து அதைப் பரிசுத்தமாக்குவாய் தாயே’! என வேண்டிடுவோம்.
அவ்வாறு தொடர்ந்து வேண்டி வந்தால் தேவியின் காற்சதங்கைகளின் ஓசையை ஒரு நாள் கட்டாயம் நம் காதுகள் கேட்கும் என கூறப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உடனே திருவருள் புரியும் இத்தேவியைப் பணிந்து வாழ்வில் நலங்கள் பல பெறுவோம். நம் உடலினுள் தினம் தினம் யாகம் நடக்கிறது. நாம் உண்ணும் உணவை நம் உடலில் ஜீரண சக்தியாக ஜீரணாக்னியாக இருந்து தினமும் ஏற்றுக்கொண்டு நம்மை சக்தியோடு வைத்திருக்கிறாள் தேவி. நம்முள் நடக்கும் நித்ய யாகத்திற்கு நாம் தரும் ஹவிஸ்ஸே நாம் உண்ணும் உணவு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளை தீர்ப்பவள் இந்த அம்பிகை.
த்ரிதியை திதியில் பொங்கலிட்டு அதில் தேன் கலந்து இவளுக்கு நிவேதிக்க மாத விடாய்க்கோளாறுகள் நீங்கும். இத்தேவியின் திருவருள் கிட்டிட நின்று போன கட்டிட வேலைகள் முடியும். சொத்து பிரச்னைகள் தீரும்.
கடன்கள் தீரும். சூலை நோய், மூலம், வயிற்று நோய், வெண்குஷ்டம் போன்ற நோய்கள் மறையும். மாணவர்கள் தினமும் இவளை அடிபணிந்து வணங்க ஞாபக சக்தி பெருகி மறதி அகலும். திருவிளக்கின் ஜ்வாலையில் ஜொலிக்கும் இத்தேவி, தனது ஜ்வாலையால் பக்தர்களின் பாவங்களைப் பொசுக்குபவள். கர்மவினையினால் ஏற்படும் நோய் களை நீக்கியருள்பவள்.
ஜ்வாலாத் துர்க்கா த்யானம்!
ஜ்வாலாமாலா வலீடா ஜ்வலந சரதனு
சங்க சக்ராஸி கேடான்
சூலம் ஸந்தர்ஜநீம்யா கரஸரஸிருஹை
ஸந்ததானா த்ரிநேத்ரா
ஔர்வக்னிம் ஸ்ங்கிரந்தீ ரணபுலி திதிஜான்
நாசயந்தீபராஸா
துர்கா ஜாஜ்வல்யமானா பவது மமஸதா
ஸிம்ஹஸம்ஸ்தா புரஸ்தாத்
ஜ்வாலாத் துர்க்கா காயத்ரி!
ஓம் அக்னி துர்க்காயை வித்மஹே
ஸிம்ம வாஹின்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக