சனி, 10 செப்டம்பர், 2016

வேண்டிய வரம் தரும் புரட்டாசி மாத பெருமாள் வழிபாடு!

சூரியனுக்கு மிக அருகாமையில் உலவும் புதனின் உச்சவீடா கிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை புரட்டாசி மாதமென அழைக்கின்றோம்.புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் துரிதமாய்க் கற்றுணரக்கூடியவர்கள். சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள்.

இந்த மாதத்தில் வெயில் குறைந்து, மழை அவ்வப்போது தலைகாட்டி, இரவில் குளிரும், பகலில் உஷ்ணமும் இருக்கும் . பயிர், பச்சைகளுக்கு நல்ல நீர் கிடைத்து, பூக்கத் துவங்கி வெய்யிலை ஜீரணித்துச் செழித்து வளரும் மாதம்.

புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றும் அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து , தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டு, துளசி தீர்த்தம் பருகி, பெருமாள் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பிதுர் லோகத்தில் வசிக்கும் மறைந்த நம் முன்னோர் இந்த மாதத்தில் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்று கூறப்படும்.

இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை.

இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக்களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

அதிகப்படியான இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள் . புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவானும் அவதரித்தார் . எனவே ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட சனியால் உண்டாகும் தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். திருப்பதிக்கு சென்றும் வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வேங்கடவன் திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புரட்டாசி சனிக்கிழமை வேங்கடவனை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை ஏந்தியபடி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர் . இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தன் திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக