திங்கள், 26 செப்டம்பர், 2016

ஜகம் புகழும் ஜாதவேதோ துர்க்கை!

 

அக்னியின் வடிவமாக துலங்குபவளே ஜாதவேதோ துர்க்கை. அக்னியில் க்ஷடாஷர வடிவாய் ஒளிர்பவள் இத்தேவி. பரமேஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புச் சுடர்கள் வெளிப்பட்டு வந்தபோது அக்னியின் வடிவமான ஜாதவேதோ துர்க்கையே அவற்றை  அக்னி பகவான் மூலமாக சரவணப் பொய்கையில் சமர்ப்பித்து ஆறுமுகன் தோன்றக் காரணமாய் இருந்தாள். எனவே இவளை ‘ஸ்கந்த துர்க்கா’ என்றும் அழைக்கின்றனர்.

அக்னியையே ஜாதவேதோ துர்க்கை எனக்கூறுகிறது, துர்க்கா ஸூக்தம். அவள் ‘சிவப்பு நிறமான தீயின் நிறத்தினள் என்றும், தன்னுடைய ஜ்வாலையினால் தீயவைகளை எரித்தழிப்பவள்’ என்றும் அது கூறுகிறது.

 இத்தேவியின் அம்சமாகத் தோன்றியவரே வீரபத்திரர். உலகில் உள்ள அனைத்திலும் சிறந்தது அக்னியே. ஏனென்றால் அதுதான் மிகவும் பவித்ரமானது. சுத்தமானது. அதுமட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்த எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடக்கூடிய தன்மையுடையது.

இத்தேவி யாகத்தீயில் அலங்கார வடிவத்துடன் திருக்காட்சி அளிப்பவள். தேவ தேவியர்களை திருப்திப்படுத்த மகாயாகங்கள் பல செய்கிறோம். ஜாதவேதோ துர்க்கை அந்த யாகங்களுக்கெல்லாம் அதிதேவதையாக நின்று நாம் செய்யும் யாகங்களை அந்தந்த தேவ தேவியரின் வடிவத்தில் நம் வேண்டுதல்களை அந்தந்த பரிகார ப்ரீதியுடன் ஏற்றுக் கொண்டு அவற்றை நிறைவேற்றி அருள்பவள்.

 அதன் மூலம் யாகம் செய்பவர்களுக்கு சாந்தம், சந்தோஷம் இரண்டையும் அள்ளித் தருபவள். நம் பாவங்களை பஸ்மமாக்கி நல்வாழ்வு கொடுப்பதோடு நம்மை ஞான வழிக்கு அழைத்துச் செல்பவள்.

செந்தீ வர்ணத்தினளான இவள் தனது பேரொளியால் பகைவர்களை எரிப்பவள். ஆபத்தைப் போக்குபவள். மின்னல் போன்ற ஒளியுடையவள். ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவள். கேடயம் ஏந்திய கன்னியர்களால் சேவிக்கப்படுபவள். எட்டுக் கரங்களையுடைய இவள் சக்கரம், கதை, வாள், கேடயம், வில், பாசம், தர்ஜனி ஆகியவற்றைத் தன் கரங்களில் தாங்கி அமர்ந்திருக்கின்றாள்.

இத்தேவி இரு கரங்கள் கொண்டவள் எனவும் சில புராணங்கள் கூறுகின்றன. சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியிருப்பவள் என்றும் அவை சித்தரிக்கின்றன. இந்த அம்பிகையும் வனதுர்க்காவைப் போல முக்கண்கள் கொண்டவள். சிரசில் உள்ள கிரீடத்தில் சந்திரகலையைத் தரித்தருள்பவள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் வடிவாக இருப்பவள் அம்பிகை. உக்கிர தேவதைகள் பலருக்கும், உதாரணமாக மாரியம்மன், பிடாரி போன்ற தெய்வங்களின் தலையில் கொழுந்து விட்டு எரியும் அக்னி ஜ்வாலை இருப்பது அவர்கள் ஜாதவேதோ துர்க்கையின் அம்சம் என்பதை எடுத்துரைக்கவே.தன் தவத்தைக் கலைக்க முனைந்த மன்மதனின் செயலைக் கண்டு ஈசன் கோபம் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தார்.

அந்த கோபாக்னி மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது. எனினும் ஈசனின் கோபம் தணியவில்லை. அச்சுடர்கள் மூவுலகங்களையும் தகிக்கத் தொடங்கியது. ஈசன் அந்த தீப்பிழம்பை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்க அக்னி பகவானுக்கு ஆணையிட்டார். அக்னி பகவானாலும் அந்த தீப்பிழம்பைத் தொடமுடியவில்லை. அக்னி பகவான் மனமுருக தேவியைத் துதிக்க, அவரின் வேண்டுகோளுக்கிணங்க தேவி அந்த தீப்பிழம்பினுள் பிரவேசித்தாள்.

அக்னி பகவான் தீப்பிழப்பின் வெப்பத்தை உணரா வண்ணம் அந்த வெம்மையைத் தான் ஏற்று, துணை நின்று சரவணப் பொய்கையில் அதனைச் சேர்ப்பிக்க திருவருள்புரிந்தாள். அந்த தீப்பிழம்பான சிவ தேஜஸே பின் முருகனாக உருவெடுத்தது. அக்னி வீரபத்திரர், இவரது அம்சமாகத் தோன்றியவர்.  கேனோபநிஷத்தில் அம்பிகை ஒரு மாபெரும் ஜோதியாகவே வர்ணிக்கப்படுகிறாள். உடலில் உஷ்ண சம்பந்தமான நோய்களை இத்தேவி தீர்ப்பவள். சொத்து விவகாரங்களை சுலபமாக முடித்து வைப்பவள்.

சடைமுடியில் பிறைச்சந்திரனை அணிந்த ஈசனாகிய செம்பவளக் குன்றில், தேவி மணம் வீசும், பசும்கொடியாக படர்ந்து நிற்பவள். சிவானுபவத்தில் திளைப்பவர்கள் பக்தி எனும் அன்பு நீர் பாய்ச்சி அந்தக் காட்சியில் மனமொன்றி, மன, வாக்கு, காயங்களின் துன்பங்களையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் கடந்து சிவானுபவத்தில் தோய்ந்து, மற்றுமொரு பிறவி எடுக்காத பெறும் பேற்றைப் பெறுவதுடன் இப்பிறவியின் பயனையும் அடைந்து விடுகிறார்கள்.

அவர்கள் உலகில் அதன் பின் வாழ்ந்திருந்தாலும் அக்காட்சி, அந்த அனுபவம் அவர்களை விட்டு அகலுவதில்லை. ஈசனைக் குன்றாக உருவகப்படுத்தி, தேவியை பசுமையான பூங்கொடியாக ஒளி பொருந்திய ஈசனின் மேனியைத் தழுவிக்கொண்டிருப்பது போல் ஆதார கமலங்களில் குண்டலினீ சக்தி ஊடுருவிச் சென்று ஸஹஸ்ராரத்தில் குன்றாக விளங்கும் ஈசனைத் தழுவி நிற்கின்றாள் என்றும் கூறலாம்.

இவ்வுலகியல் சேற்றில் நாம் மூழ்கியிருந்தாலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேவியின் பாத கமலங்களை நாம் தியானிக்க வேண்டும். அதிலிருந்து பெருகும் அமிர்த தாரையை நம் மனதில் சிந்திக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் தும் ஜாதவேதஸே ஸுனவாம  ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸன: பர்ஷத்தி துர்காணி
விச்வாநாவேவசிந்தும் துரிதாத்யக்னி

- எனும் மந்திரத்தை பாராயணம் செய்து ஜாதவேதோ  துர்க்கையை வழிபட்டு வளங்கள் பல பெறுவோம்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக