ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சௌபாக்கியம் அருளும் சப்த கன்னியர்!

சப்த கன்னியர்கள்

 சப்த கன்னியர்கள் என்பவர்கள் ஆதி சக்தியின் தேவகணங்களாய் அவளது கோட்டைக்கு காவல் இருப்பவர்கள். மிக சூட்சுமமாக இருக்கும் இவர்கள் ஏழு பேரும் ஏழுவிதமான அம்சங்களை உடையவர்கள்.


 பிராஹ்மி: ஆதிசக்தியின் முகத்திலிருந்து உதித்தவள் இவள். பிரம்மனின் அம்சம். உயிர்களின் பிரதானமான மூளையின் செயல்களை ஆளுபவள். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் இவளை மனமுருகி வணங்க வேண்டும்.

 மகேஸ்வரி:  இவள் தோள்-களிலிருந்து தோன்றியவள். அழிக்க வேண்டியவைகளை அழித்து, காக்க வேண்டியவைகளை காத்து ரட்சிப்பது இவளது குணம்.

 கௌமாரி: இவள் சக்தியின் கால்களிலிருந்து தோன்றியவள். சிவனாலும் சக்தியாலும் அழிக்க முடியாத தீய சக்திகளை அழிப்பதற்கு அவதாரம் எடுத்தவள். சூரனை வென்ற சக்திவேல், அந்த சக்திவேலனின் அம்சமாகத் தோன்றியவள்.  மண், மனை பிரச்னைகள், வீடு கட்டுதலில் உள்ள தடைகள் நீங்குவதற்கும், செவ்வாய் தோஷம்  உள்ளவர்களும்  இவளை வணங்கி வழிபாடு செய்தால் அனைத்து பிரச்னைகளும் நீங்கி நலமுடன் வாழ்வார்கள்.

 வைஷ்ணவி: இவள் மகாவிஷ்ணுவின் அம்சமாவாள். மனம் நினைப்பதை செயலாக்குவது கைகள்தான். அதன் அம்சமாக சக்தியின் கைகளில் இருந்து தோன்றியவள். ஊக்கமுடன் செயலில் வெற்றி பெற இவளை வணங்கி வழிபாடு செய்தல் வேண்டும்.

 வராஹி: சக்தியின் பிருஷ்டப் பாகத்திலிருந்து தோன்றியவள். ஏழு பேரிலும் வித்தியாசமான குண முடையவள். இவள் விஷ்ணுவின் ரௌத்ர அம்சமாவாள். தமிழ்நாட்டிலேயே தஞ்சை பெரிய கோயிலில்தான் வராஹிக்கென தனி சந்நதி உள்ளது. ராஜ ராஜ சோழனுக்கு இவளே இஷ்ட தெய்வம்.

 இந்திராணி: உலக உயிர்களின் மகிழ்ச்சிக்கும், உயிர்கள் உருவாகுவதற்கும் காரணமான ஆதிசக்தியின் ஸ்தானத்தில் உதித்தவள். மகாலட்சுமியின் அம்சம். வாழ்க்கையில் கணவன்-மனைவி சந்தோஷமாகவும், புத்திர பாக்கியத்தை பெறவும், ஆண்-பெண் இருபாலருக்கும் தகுந்த துணையை அடைய இவள் அருள் புரிவாள்.

 சாமுண்டி: சக்தியின் பிரதி அம்சமான இவள் வீரத்தின் விளை நிலம். மாந்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள்பவள். மனிதர்கள் தமது வாழ்வில் எந்த ஒரு நல்ல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால் நல்லவனாக இருக்க வேண்டும்; அதோடு வல்லவனாகவும் இருக்க வேண்டும். அந்த வல்லமையை பெறுவதற்கு இவளை போற்றி வணங்குதல் வேண்டும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக