திங்கள், 26 செப்டம்பர், 2016

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்!

ஏழுநிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து வணங்கி, அனுமதி பெற்று கோயிலினுள் சென்றால், ‘பெருமாளை பக்தி செய்ய வரும் அடியவர்களே வருக,’  என்றழைப்பதுபோல நம்மை ஆழ்வார்களும், ஆசார்யார்களும் வரவேற்கிறார்கள். இவர்கள் மட்டுமா, அருகிலேயே தனிச்சந்நதியில் விபீஷணாழ்வாரும்  வரவேற்கிறார். ஸ்ரீரங்கத்துப் பெருமானை, விமானத்துடன் இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்ற விபீஷணன் இந்தக் கோயிலில் கொலுவிருப்பது எப்படி? அதுவும் பெருமாளின் கருணையே. ‘‘திருவரங்கத்தில் நீ சயனித்தத் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயனே, உன் நடையழகையும் காண ஆவலாக  உள்ளேன்,’’ என்று விபீஷணன் விரும்பிக் கேட்டுக்கொள்ள, அவனுக்காக இந்தத் தலத்தில் பெருமாள் நடந்து காட்ட, அந்த அழகில் சொக்கிப் போன விபீஷணன்  சிலையாக சமைந்து போனான்! அவனது அந்த கோலத்தைதான் நாம் இங்கே தரிசிக்கிறோம்.

இதே சந்நதிக்குள் இன்னொரு சிலையும் உள்ளது. அது, விபீஷணனின் மகளான திரிசடை (அசோகவனத்தில் சீதைக்குக் காவலாக மட்டுமின்றி, உறுதுணையாகவும், நம்பிக்கை ஊட்டியவளாகவும் இருந்தவள்) என்கிறார்கள். இப்படி விபீஷணனுக்கு நடையழகைக் காட்டிய சம்பவம், இப்போதும் ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. (இந்த வருடம் 30.9.2016 அன்று)அதன்படி, கருவறையிலிருந்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் மெல்ல நடந்து  இந்த விபீஷணன் சந்நதிவரை நடையழகு காண்பித்துத் திரும்புவார். அஷ்டாக்ஷர மந்திரத்தின் முழு சாந்நித்தியமும் திகழும் தலம் இது. அந்த மந்திரத்தின்  ஒவ்வொரு அட்சரமும் ஒவ்வொரு கோயிலைக் குறிக்கிறதென்றும், மொத்த மந்திர சாரமும் திருக்கண்ணபுரம் கோயிலாக விளங்குகிறதென்றும் சொல்வார்கள்.

அதாவது, திருவேங்கடம், திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நான்குநேரி, சாளக்கிராமம், பத்ரிகாச்ரமம், நைமி சாரண்யம் ஆகிய தலங்கள் ‘ஓம் நமோ நாராயணாய’  என்ற அந்த மந்திரத்தின் ஏழு அட்சரங்களாக விளங்க, எட்டாவது அட்சரமாகவும், ஒட்டு மொத்தப் பெரும் பொருளாகவும் திருக்கண்ணபுரம் விளங்குகிறது;  சௌரிராஜப் பெருமாள் அந்த மந்திரத்தின் சொரூபமாகவும், சாரமாகவும் திகழ்கிறார். சௌரி என்றால் யுகந்தோறும் அவதரிப்பவன் என்று பொருள். அந்த வகையில்  இந்தத் தலம் எழுபத்தைந்து சதுர்யுகங்களைக் கண்டது என்றும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். ஆனால், சௌரி என்ற சொல்லுக்கு லௌகீகமாக, தலைக் கேசம்  என்றும் பொருள் கொள்ளலாமென்று கூறி, இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தையும் விவரிக்கிறார்கள்.

ஸ்ரீதரன் என்பவர் இந்தக் கோயிலில் பெருமாளுக்கு நித்திய ஆராதனைகளை செய்து வந்தான். ஒருசமயம், இவர் தான் காதலித்த பெண்ணுக்கு ஒரு மலர்  மாலையைச் சூட்டி, மகிழ்ந்து, பிறகு அதே மாலையை பெருமாளுக்கும் சூட்டி அழகு பார்த்தான். அச்சமயம் அப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த சோழ மன்னன்  கோயிலுக்கு வந்தான். ராஜ மரியாதை செய்யவேண்டிய நிமித்தத்தில், ஸ்ரீதரன், பெருமாளுக்கு சூட்டிய மாலையை எடுத்து மன்னனுக்கு அணிவித்தான்.  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக்கொண்ட மன்னன் உடனே முகம் சுளித்தான். காரணம், அந்த மாலையில் ஓரிரு தலை முடிகள் ஒட்டிக்கொண்டிருந்ததுதான்.  கடுங்கோபம் கொண்ட அவன், அர்ச்சகரிடம் விளக்கம் கேட்க, ‘அது பெருமாளுக்குச் சூட்டிய மாலை தான். அவருக்குத் தலைமுடி வளர்ந்துள்ளதால் அவற்றில்  ஒன்றிரண்டு மாலையுடன் ஒட்டிக்கொண்டு விட்டது போலிருக்கிறது,’ என்று பளிச்சென்று பதில் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டுத் திடுக்கிட்ட மன்னன், நம்பமுடியாதவனாக,  உடனே கருவறைக்குள் சென்று பார்க்க, அங்கே பெருமாளின் பின்தலையில் ஏழெட்டு முடிகள் நீண்டு  வளர்ந்திருந்தன! அப்படியும் சந்தேகம் விலகாத மன்னன், தான் பார்ப்பது உண்மைதானா என்பதை சோதிக்க, ஸ்ரீதரனை அந்த கேசங்களில் ஒன்றைப் பிடித்து  இழுக்குமாறு ஆணையிட, அவனும் அப்படியே செய்ய, அந்த முடி பறிக்கப்பட்டதோடு, பெருமாளின் தலையிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் தெறித்து மன்னன் மீது  விழவும் செய்தது. தன் பக்தனைக் காப்பதற்காக, இறைவன்தான் எப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறான்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் இத்தல இறைவன்  சௌரிராஜப் பெருமாள் என்றழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இத்தலத்தின் தாயார், கண்ணபுர நாயகியாகத் தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி புராணச் சிறப்பு கொண்டது. சித்தஸ்ரவஸ் என்பவன் பாண்டிய மன்னன்.

அவன் தன் குடும்பத்தாருடன் தாமிரவருணி நதியில் நீராடினான். அச்சமயம் திடீரென்று நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவே, மன்னனும் அவனது மகள்  உத்தமையும் அடித்துச் செல்லப்பட்டனர். விவரம் அறிந்த நாட்டு மக்கள் திகைத்து, வருந்தி நிற்க, அமைச்சர்களின் ஒருவரான சுநீதி, மன்னர் மீண்டு வருவார்  என்று கனவு கண்டதாகக் கூறியதும், அகத்திய முனிவர் தன் ஞானதிருஷ்டியால் அதை உறுதிப்படுத்தியதும் மக்களை ஓரளவு நிம்மதி கொள்ளவைத்தன.  இதற்கிடையில் கங்கை, யமுனை, தாமிரவருணி முதலான புண்ணிய நதிகள் பிரம்மனிடம், தாங்கள் மக்களின் பாவங்களைச் சுமந்து, சுமந்து நலிவுற்றுப்  போய்விட்டதாக வருத்தம் தெரிவித்தன. அந்தப் பாவங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை வாங்கித் தருமாறு அவரிடம் இறைஞ்சின. பிரம்மனும்,  திருக்கண்ணபுரத்திலுள்ள நித்ய புஷ்கரணியில் அவர்கள் நீராடினால் அந்தப் பாவங்களிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, அந்நதிகள் இந்தத் திருக்குளத்திற்குப் பாய்ந்தோடி வந்தன. அவற்றில் ஒன்றான தாமிரவருணி அப்படி ஓடிவந்தபோது, தன்னுடன் சித்தஸ்ரவஸ்  மன்னனையும் அவனது மகள் உத்தமையையும் சேர்த்து அடித்துக்கொண்டு வந்தது! இதனாலேயே பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்ல, அவர்களுடைய புனர்ஜன்ம  வாழ்க்கைக்கும் இந்த புஷ்கரணியில் நீராடுதல் வழிவகுக்கும் என்கிறார்கள். பெருமாள் இங்கே மும்மூர்த்தி அம்சமாக அருள்வது குறிப்பிடத்தக்கது. வைகாசி  பிரம்மோத்ஸவ விழாவின் 7ம் நாளன்று மஹாவிஷ்ணுவாகவும், இரவில் தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்ட தாமரை மலரின் நடுவே சிருஷ்டி பாவத்தில்  பிரம்மனாகவும், விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரத்துக்கு ஸம்ஹார பாவத்தில் சிவனாகவும் தோன்றுகிறார். (இந்த முகூர்த்த நேரத்தில் பெருமாளுக்குப்  பட்டையாகத் திருநீறு சாற்றுகிறார்கள். பட்டர்கள், வைணவ பக்தர்கள் அனைவரும் தம் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்கிறார்கள்.

வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு வழங்கப்படுகிறது!) இந்தத் தோற்றங்களும், நிகழ்ச்சியும் வேறெந்த திவ்ய தேசத்திலும் காணப்படாதவை என்றே  சொல்லலாம். கருவறையில் பெருமாளை தரிசிக்கும்போது அவர் நெற்றியில் ஒரு சிறு வடு ஏற்பட்டிருப்பதை பட்டர் காண்பிக்கிறார். அது அரையர் சேவை  (பெருமாளின் பாசுரங்களை இசையாகப் பாடியும், நடனமாக ஆடியும் செலுத்தும் பக்தி) புரிந்த ஒரு பக்தரால் ஏற்பட்டதாம். திருவரங்கத்தைப் போலவே இந்தக்  கோயில்களிலும் ஏழு மதில் சுவர்கள் இருந்தன. சோழ மன்னன் ஒருவன், அந்தச் சுவர்களை இடித்து அந்த கற்களைக் கொண்டு வேறொரு கோயில்  நிர்மாணித்தான். இதுகண்டு பொறுக்காத அரையர் ஒருவர், ‘உன் கையிலுள்ள சக்கரம் செயலிழந்து போனதேன்?’ என்று கோபமாகக் கேட்டபடி தன் தாளக்  கட்டையை பெருமாளை நோக்கி வீசியெறிந்தார். அது பெருமாளின் நெற்றியில் பட்டு காயம் உண்டாக்கியது.

உடனே பெருமாள் தன் சக்கரத்தை ஏவி அந்த மன்னனை வதைத்தார். இதனாலேயே இந்தக் கோயிலில் இப்போது ஒரு மதில் சுவர் மட்டுமே எஞ்சியிருக்கிறது.  தான் உடற்காயம் பட்டாலும், தன் பக்தன் மனக்காயம் படக்கூடாது என்ற பரந்தாமனின் பேரருள் சிலிர்க்க வைக்கிறது. இன்னொரு சம்பவம்: முனையதரையர்  என்ற பக்தர் பெருமாளுக்கு அரும் சேவை ஆற்றியவர். குறிப்பாக பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யாமல் அவர் உணவு எடுத்துக் கொண்ட தேயில்லை.  ஒருசமயம், அவர் வெளியூர் போக வேண்டியிருந்தது. அன்று அர்த்தசாம வேளையில், தன் மனைவி தன் வீட்டில் தயாரித்து வைத்திருக்கக்கூடிய பொங்கலை  வெளியூரிலிருந்தபடியே மானசீகமாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் முனையதரையர். மறுநாள் கோயிலுக்குச் சென்றவர்கள், கருவறையிலிருந்து  வெளிப்பட்ட பொங்கல் நறுமணத்தை நுகர்ந்து வியந்தார்கள்.

அது முனையதரையரின் மானசீக நிவேதனத்துக்குப் பெருமாள் காட்டிய அங்கீகாரம் என்று புரிந்துகொண்டு வியந்து பாராட்டினார்கள். அன்று முதல் இன்றுவரை  அர்த்தசாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் திருவாராதனம் செய்கிறார்கள். அந்தப் பொங்கலை, முனைய தரையன் பொங்கல் என்றே குறிப்பிடுகிறார்கள். கோயிலுக்குள் துவாரகை கிருஷ்ணன், ராதையுடன் தனிச்சந்நதியில் கொலுவிருக்கிறார். வட இந்திய பாணியில் பளிங்குக் கற்களால்ஆன சிற்பங்கள் இவை. பெருமாள் மீது பாசுரம் பாடிய ஆண்டாளுக்கும் தனிச்சந்நதி. விபீஷணனுக்கு நடையழகு காட்டிய பெருமாள் ராமராக, சீதை, லட்சுமணனுடன் தனியே  மூலவராகவும், உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகளுக்கும் தனித் தனிச்சந்நதிகள் உள்ளன.

திருவாரூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக