திங்கள், 26 செப்டம்பர், 2016

மகத்தான வாழ்வருளும் மயிலை மாதவ பெருமாள்!

 

சென்னை - மயிலாப்பூரிலுள்ள மாதவப் பெருமாள் திருக்கோயில், 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், முதலாழ்வார்கள் காலத்திலேயே இத்திருக்கோயில் இருந்துள்ளது. பாடல்கள் பெறாத பல புராதன வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவே இத்திருக்கோயில் இருந்துள்ளது. இத்திருத்தலம் தோன்றிய விதம், இறைவன் இங்கு வந்து குடிகொண்டு அமிர்தவல்லித் தாயாரை மணம் புரிந்தது. மயிலாப்பூர் தோன்றிய விதம், பேயாழ்வார் அவதார வைபவம் ஆகிய புராண வரலாற்றை பிரம்மாண்ட புராணத்தில் ‘மயூரபுரி மஹாத்மியம்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். அதில் இந்த இடம் ‘மாதவபுரம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



‘கலியுகத்தில் கலிதோஷமில்லாது தவம் செய்ய சிறந்த இடம் எது?’ என வினவிய வேத வியாசருக்கு, ‘ப்ருகு முனிவர் ஆசிரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது’ என ஸ்ரீமன் நாராயணனே அருளியிருக்கிறார்.



இத்திருக்கோயில் இப்போது இருக்கும் இடத்தில் ப்ருகு முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தில் இருந்த திருக்குளம்தான் ‘சந்தான புஷ்கரணி’ என்ற சிறப்போடு விளங்குகிறது. மாசி மாதத்தில் மகநட்சத்திரம் கூடிய சுக்ல பட்சத்துப் பௌர்ணமி திதியில் சகல தீர்த்தங்களும் இத்திருக்குளத்தை வந்தடையும்.



அப்போது அதில் நீராடி அம்ருதவல்லி உடனுறை மாதவப் பெருமாளை வணங்கி வழிபட்டோருக்கு புத்திரப்பேறு கிட்டும் என மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு பேறு பெற்றிருக்கின்றனர்.



முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் இத்திருக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள ‘மணிகைரவம்’ என்ற வாவியில் செவ்வல்லிப்பூவிலே ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் திருமாலின் ‘நந்தகம்’ என்னும் வாளின் அம்சமாக அவதரித்தார். அவர் அருளிச்செய்த அந்தாதியாகிய நூறு பாசுரங்களும் மூன்றாம் திருவந்தாதி எனப்பெயர் பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓர் அங்கமாக அமைந்துள்ளன. இவருக்குத் ‘தமிழ்த் தலைவன்’ என்றும் பெயருண்டு.

எங்கும் இல்லாத பெருமையாக  ஸ்தலாதிபதியாகிய இத்தலத்தின் தாயார் சந்நதித் தூண்களில் பல்வேறு வாகனங்களில் காட்சி தரும் வகையில் அழகான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இது பேயாழ்வாருக்கும் இத்திருக்கோயிலுக்கும் உள்ள பிணைப்பை விளக்குகிறது.



பேயாழ்வார் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். பேயாழ்வார் உற்சவர் நின்ற கோலத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரத்தில் திருவீதிப் புறப்பாடும், மாசி மாதத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றது. இந்த மாதவபுரத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு ஞான உபதேசம் செய்ததால், ஐப்பசி மாதத்தில் பேயாழ்வார் அவதார உற்சவத்தில் 4ம் நாள் திருமழிசை ஆழ்வாருக்கு ஞான உபதேச வைபவமும், 8ம் நாள் திருக்கோவிலூர் வைபவமும் மற்ற நாட்களில் ஒவ்வொரு வாகனத்திலும் (தாயார் சந்நதி மண்டபத்தில் இவருடைய வாகன வைபவம் ஒவ்வொரு தூணிலும் மிகச் சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளது) திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.



தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டபோது தேவர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீமந்நாராயணனை வைகுண்டத்தில் வணங்கி அசுரர்களை அடக்கி தங்களுக்கு நிரந்தர அமைதி ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதை பெருமாள் ஏற்று, ‘நானும், லட்சுமியும் பூலோகத்தில் அவதரித்து உங்களுடைய ராஜ்ய பரிபாலனத்திற்கு அசுரர்களால் இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்கிறோம்,’ என்று அவர் களுக்கு உறுதி வழங்கினார். பிறகு பூலோகத்தில் அவதாரம் செய்து, அமிர்தத்தை கடைந்தபோது மகாலட்சுமி தோன்றினாள்.



அவரை பெருமாள் மயூரபுரி க்ஷேத்திரத்திலுள்ள ப்ருகு முனிவர் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். இத்திருத்தலத்தில் மகாலட்சுமி அமிர்தவல்லித் தாயாராக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பிள்ளைப்பேறு வேண்டித் தவம் புரிந்த ப்ருகு முனிவரின் குறை நீக்க மகாலட்சுமி அவரது ஆசிரமத்தை அடைந்து அழகான குழந்தையாகத் தோன்ற முனிவரும் அக்குழந்தையை அமிர்தத்தோடு தோன்றி அருளிய லட்சுமி ஆதலால் அமிர்தவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தார்.



மாதவனாக ஸ்ரீமந்நாராயணன் முனிவரின் ஆசிரமம் அடைந்து அமிர்தவல்லியை மணம் புரிய வேண்ட முனிவரும் மாதவபுரம் என்று இந்நகரைப் பெருநகராக்கி பங்குனி உத்திரத்தில் திருமணம் முடித்து வைத்ததாகப் புராணம் கூறுகிறது.



பாற்கடலில் தோன்றிய அமிர்தவல்லியாகையால் திருமணப் பிரார்த்தனைக்காக கல்கண்டு, குங்குமப்பூ சேர்த்த பால் நிவேதனம் செய்து சேவார்த்திகள் கைப்படவே வழங்கும் வழக்கம் இத்திருக்கோயிலில் உண்டு.

தாயாருக்கு 9 நாள் நவராத்திரி உற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பிள்ளை வேண்டுவோர் செய்யும் பிரார்த்தனை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன.



இத்தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் திருமகளும் நிலமகளும் உடன் இருக்க, ஆனந்த நிலைய விமானத்தின்கீழ் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார் மாதவப் பெருமாள். கல்யாணத் திருக்கோலத்துடன் இருப்பதால் இவரை ‘கல்யாண மாதவன்’ என்றும் ‘பிரார்த்தனை நிறைவேற்றும் பெருமாள்’ எனவும் போற்றப்படுகிறார்.

சங்கு - சக்கரம், அபயம், கதை ஆகியவற்றுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார்.



இவருக்கு சித்திரை பிரம்மோற்சவ விழா, வசந்த உற்சவ விழா, பவித்திர உற்சவ விழா, திருக்கோவிலூர் வைபவம் மற்றும் பகல் பத்து வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து உற்சவம், ரதசப்தமி, தெப்ப உற்சவம், பங்குனி உத்திரத்திருக்கல்யாண உற்சவம் ஆகிய வைபவங்கள் நடக்கிறது.



ஆண்டாள், தன் திருப்பாவை 9வது பாசுரத்தில் ‘மாயன் மாதவன் வைகுந்தன்’ என்றும் கடைசி பாசுரத்தில், ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை’ என்று அழைக்கிறாள்.



ஆண்டாளுக்கு இங்கு தனியான புராதன சந்நதி அமைந்துள்ளது. ஆண்டாள் மடியில் மாதவர் கொண்டிருக்கும் சயனத் திருக்கோலம் இத்திருக்கோயிலில் மிகவும் சிறப்பானது. மார்கழி மாதத்தில் நீராட்டு உற்சவம் மற்றும் போகித் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றன.



சந்தான புஷ்கரணியின் மேற்குப் பக்கம் கிழக்கு முகமாக திருமகளுடன் வராக மூர்த்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு ‘ஞானப்பிரான்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. மேலும், இத்தலத்தில் சீதை, லட்சுமணர் அனுமாருடன் ராமர் அருள்பாலிக்கிறார். வேணுகோபாலன் உற்சவ மூர்த்தி சங்கு - சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார்.

செல்லப் பிள்ளை என்றழைக்கப்படும் சம்பத்குமார் உற்சவ மூர்த்தி சங்கு, சக்கரம், அபயம், கதையுடன் சேவை சாதிக்கிறார். இவருடைய திருப்பாதங்களில் மகாலட்சுமி அமர்ந்துள்ளார். உடன் ஆண்டாளும் இருக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் பிரார்த்தனை திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் பால ஆஞ்சநேயராக காட்சி காட்சி தருகிறார். புன்னை மரம் தல விருட்சம். இக்கோயிலின் மூலஸ்தானத்தின் பின்புறம் புன்னை விருட்சமும், நந்தவனமும் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக