சனி, 10 செப்டம்பர், 2016

வேண்டும் வரமருளும் விநாயகர் விரதங்கள்!


விநாயகர் சதுர்த்தி முதல் கடவுளான விநாயகரின் முக்கியமான விழாவாகும். இந்த விழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவானது விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

பலன் தரும் விநாயகர் விரதங்கள்!

விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.

1. வெள்ளிப்பிள்ளையார் விரதம் - ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

2. செவ்வாய் பிள்ளையார் விரதம் - ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.

3. சதுர்த்தி விரதம் - பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

4. குமாரசஷ்டி விரதம் - கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

5. தூர்வா கணபதி விரதம் - கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

6. சித்தி விநாயக விரதம் - புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

சித்தி விநாயக விரதம்!
புரட்டாசி, வளர்பிறை சதுர்த்தியில் விநாயக விரதம் அனுஷ்டிப்பது.  இது பிரஹஸ்பதியால் கூறப்பட்டு தருமபுத்திரர் அனுஷ்டித்த புகழ் மிக்க விரதமாகும். 

7. தூர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

8. விநாயக நவராத்திரி - ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

9.  அங்காரக சதுர்த்தி விரதபூஜை - பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன

10.  சங்கட ஹர சதுர்த்தி!

இது மாசிமாதம், தேய் பிறையில், செவ்வாய்க்கிழமை யோடு கூடி வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருக்கதுவங்கி ஓராண்டு வரை  தேய்பிறை சதுர்த்தியில் நிறைவு செய்யும் ஒரு விரதமாகும். அதைத்தான் ஒரு வருடம் தொடர்ந்து விரதம் என்பதில்லாமல், ஒவ்வொரு தேய்பிறையில் வரும் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்தி என்று விநாயகப் பெருமானை விதிப்படி பூஜிக்கிறோம். 

விநாயகர் விரதத்திற்கு விதிகள்:
 
1. ஒரு வருட காலத்திற்கு விரதம் செய்வதால் இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்தி விட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு வெறும் சாதத்தை போட்டு அது எடுத்த பின் விரத பூஜை செய்ய வேண்டும். 

2. திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம் (பாதக்கிரிச்சனம்) என்றும் ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும். 
 
3. கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் பெரும் தொகை கூட படிப்படியாக அடைந்து விடும். 
 
4. தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையையும் சேர்த்து வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். இதற்கு ஸ்வர்ண கணபதி என்று பெயர். 
 
5. கல்வியில் முன்னேற்றம் வேலை கிடைப்பதற்காக வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பூஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். 
 
6. வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்ய முடியாத தீட்டுக் காலங்கள் வெளியூருக்குச் செல்லவேண்டிய சுப கால நிகழ்ச்சிகள் வந்தால் மறு வெள்ளிக்கிழமை தாம்பூலத்தில் 2 ரூபாய் நாணயம் வைத்து தானம் கொடுத்தபின் செய்யலாம். 
 
7. விநாயக விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது. அப்படி விட நேர்ந்தால் 5 பேருக்கு அன்னதானம் இட்டு (6 மாதத்திற்குப் பிறகு) தொடர்ந்து செய்ய விரும்புகிற மற்ற ஆண்-பெண் ஏற்பளிப்பு ஒப்புதலோடு தாம்பூலத்தில் ஒரு ரவிக்கைத் துணி வைத்து கொடுத்து விடலாம். 
 
8. விரதம் பூர்த்தியாகும் (ஒரு வருடத்தில்) நாளில் கணபதி யக்ஞம், அன்ன பிரசாதம் 12 பேருக்கு கொடுத்து முடிக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ விநாயகாய மங்களம். 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக