சனி, 10 செப்டம்பர், 2016

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_35170710087.jpg
 
செல்வத் திருமகள்  மஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.
 
யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள்.
 
யானைகளின் பிளிறலை இலட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.  பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) இலட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர்.
 
கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், இலட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.
 
அட்சய திரிதியை அன்று கோமாதா பூஜை, கஜ பூஜை செய்வது மிகவும் நல்லது.

மஹாலக்ஷ்மிக்குரிய விரதங்கள்!

இதில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், இலட்சுமி விரத நாளாகும்.
 
ஆவணி வளர்பிறை பஞ்சமியை "மகாலட்சுமி பஞ்சமி" என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதற்கு, "மகாலட்சுமி நோன்பு" என்று பெயர்.

கார்த்திகை மாத பஞ்சமியை "ஸ்ரீபஞ்சமி" என்று அழைத்து, அன்று இலட்சுமி பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பைத் தரும்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.
 
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் இலட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று இலட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் விருத்தி தரும்.

வசந்த மாதவர் பூஜை:-
அட்சய திரிதியையன்று, பெருமாளை வசந்தமாதவர் என்ற திருநாமம் சொல்லி அழைத்து வணங்குவது மரபு. இது தவிர மகாலட்சுமியையும் அன்று வணங்கலாம். பல கோயில்களில் கருவறை வாசல் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலை திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது.
 
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோற்ஸவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் இலட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள். இவளை, சாந்தி லட்சுமி, பூதிலட்சுமி, பலலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள்.

யாக குண்டங்களின் வடமேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு மண்டலரூப லட்சுமி என்று பெயர்.

திருப்புத்தூர் தீர்த்தம்:- அட்சய திரிதியையின் நாயகியாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார். அந்த தாண்டவம் "இலட்சுமி தாண்டவம்" என்று அழைக்கப் பட்டது. இதுபற்றி திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) திருத்தளிநாதர் கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்த கோயில் "ஸ்ரீதளி" என்றும், ஊர் "திருப்புத்தூர்" என்றும், திருக்குளத்திற்கு "ஸ்ரீதளி இலட்சுமி தீர்த்தம்" என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

"ஸ்ரீ", "திரு" ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமியைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி இலட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள். இவை இலட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு இலட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.

சிவன் கோயிலில் இலட்சுமி பவனி!

சிவாலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி பவனி நடக்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா! இந்த பவனியைக் காண வேண்டுமானால் திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் இலட்சுமி அலங்கரிக்கப்பட்டு, உட்பிரகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் விழா, வேறு சிவாலயங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டலட்சுமி வாசல்!


சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே,
  • ஸ்ரீ துவாரம்
  • இலட்சுமி துவாரம்
  • வாருணி துவாரம்
  • கீர்த்தி துவாரம் என்கின்றனர்.
ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்.
 
சுமங்கலி பூஜை!
  • துளசி
  • வில்வம்
  • நெல்லி
  • மா ஆகியவை மகாலட்சுமியின் அம்சம் கொண்டவை.

இவை இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள சீனிவாசப்பெருமாள் கோயிலில் நெல்லி தலவிருட்சமாக உள்ளது. இங்கு அலமேலுமங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
 
வெள்ளிதோறும் மாலையில் இவளது சன்னதியில் கோ பூஜையுடன், விசேஷ திருமஞ்சனம் நடக்கும். இவ்வேளையில் மங்கல சின்னமான மஞ்சளை பிரசாதமாகத் தருவர். இதை நெற்றியில் இடுபவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது தீவிர நம்பிக்கையாக உள்ளதால், இந்நாளில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இலட்சுமியுடன் ஆந்தை!

வடநாட்டில் இலட்சுமிதேவி, ஆந்தை மீது பவனி வருபவளாகக் குறிக்கப்படுகிறாள். அவளது உருவத்துடன் ஆந்தையின் உருவத்தையும் வரைந்து வழிபடுகின்றனர்.
 
சென்னை வண்டலூர் அருகிலுள்ள இரத்னமங்கலம் இலட்சுமி குபேரர் கோயிலில், ஆந்தையுடன் கூடிய அதிர்ஷ்டலட்சுமிக்கு தனிச்சன்னதி உள்ளது. நேபாள நாட்டிலும் ஆந்தையை வாகனமாகக் கொண்ட இலட்சுமி கோயில் உள்ளது.
 
திருமகளை பொன்மயிலாகவும் போற்றுகின்றனர். மயிலாப்பூர் கேசவப்பெருமாள் கோயிலில் இலட்சுமிக்கு மயூரவல்லி என்று பெயர். மயூரம் என்றால் மயில் என்று பொருள்.

மகாலட்சுமியின் பெயர்கள்!
 
செல்வச்செழிப்பைத் தரும் மகாலட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. இன்று நாம் நவீனமாக சூட்டும் பெயர்கள் இவளது பெயர்களேயாகும்.
  • ஹரிணி
  • வசுந்தரா
  • ஹேமா
  • ஐஸ்வர்யா
  • கமலா
  • விஜயா
  • ஜெயா ஆகிய பெயர்கள் மகாலட்சுமிக்கு உரியவையே.

"கேரள" இரகசியம்!
 
கஜம் என்றால் யானை. யானைகளை அலங்கரித்து, அவற்றுக்கு வேண்டிய உணவளித்து செய்யப்படும் பூஜையாகும். கஜங்கள் இருக்குமிடத்தில் செல்வலட்சுமி இருப்பாள். "யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்று இதைத்தான் சொல்வார்கள். கேரளாவில் கஜபூஜை பெரிய கோயில்களில் நடக்கிறது. கேரள மாநிலம் நினைத்ததைச் சாதிக்கும் மக்களைப் பெற்றிருப்பதன் இரகசியமும் இதுவே.

ஹரிணி - பெயர் விளக்கம்!

 
மகாலட்சுமியை மான் வடிவிலும் போற்றுகின்றனர். இதனால் மானுக்கு, "ஹரிணி" என்ற பெயரும் உண்டு. ஹரியாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்பதால், மகாலட்சுமிக்கு இப்பெயர் அமைந்தது. மான் செல்வத்தின் அடையாளமாகும். இதனால்தான், செல்வந்தர்களை "ஸ்ரீமான்" என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
ஒருசமயம் இலட்சுமி பிராட்டி, கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள். பல இடங்களில் திரிந்தபின், திருமால் யோகமூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள். அவளைக்கண்ட திருமால், அன்புடன் பார்த்தார். அந்த மான் கருவுற்றது. கருவுற்ற அவள்,  வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டாள். வேடர்கள், அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர். வள்ளி என்னும் பெயரில் வளர்ந்த அந்தப்பெண் தவம் செய்து, முருகனை மணந்தாள்.
 
தான திருவிழா!
 
அட்சய திரிதியைக்கு இன்னொரு பெயரே "தானத்திருவிழா" என்று சொல்லலாம். அன்று செய்யும் தானம் மிக உயர்ந்த பலன்களைத் தரும். ஏழைகளுக்கு தயிர்ச்சாதம் செய்து கொடுப்பது மிக மிக உயர்ந்த தர்மம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதற்கடுத்த நிலையை கோதுமை பிடிக்கிறது. கோதுமை தானியம், கோதுமை மாவு மற்றும் கோதுமையில் செய்த பண்டங்கள் தானம் செய்யலாம்.
 
இவற்றைவிட, ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையான கல்விச்செலவை ஏற்பது, இன்னும் சிறப்பான பலன் தரும். இந்நாளில் உணவை வீணாக்கக்கூடாது. வரவுக்குள் செலவழிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது. செல்வம் மிக்கவர்கள் தகுதியானவர்களுக்கு கொடுத்து உதவ தயங்கக்கூடாது. எந்தளவுக்கு சேமிக்க முடியுமோ அதைச் சேமித்தால் பிற்காலத்தில் யாரையும் நம்ப வேண்டியிருக்காது.

இலட்சுமி வாசம்!
 
மகாலட்சுமி, திருவாரூர் தியாகராஜப்பெருமானை வழிபட்டாள். இதனால், இக்கோயிலை "கமலாலயம்" என்பர். கோயில் முன்புள்ள திருக்குளத்திற்கும் "கமலாலய தீர்த்தம்" என்றே பெயர். "கமலம்" என்ற சொல்லுக்கு "தாமரை" என்று பொருள். மகாலட்சுமி தாமரையில் வீற்றிருப்பவள் என்பதால், அவளை கமலா என்றும் அழைப்பர். தியாகராஜப்பெருமான் வீற்றிருக்கும் கொலு மண்டபத்திற்கு பின்புள்ள கருவறையை "இலட்சுமி வாசம்" என்று அழைக்கின்றனர்.
 
இராமேஸ்வரத்தில் இலட்சுமி தீர்த்தம்!

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்கு புத்திரப் பேறு இல்லை. குழந்தை பாக்கியம் வேண்டி, இராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடினான். அப்போது அவனுக்கு அருள எண்ணிய மகாலட்சுமி, அங்குள்ள சேது தீர்த்தக்கரையில் குழந்தையாகத் தவழ்ந்தாள். தனித்திருந்த குழந்தையைக்கண்ட மன்னன், அவளை எடுத்து வளர்த்தான். "சேதுலட்சுமி" எனப்பெயரிட்டான். அவள் தனது பருவ வயதில் மகாவிஷ்ணுவையே கணவராக அடைய வேண்டி, இங்கு ஒரு தீர்த்தம் உண்டாக்கி இராமநாதசுவாமியை வணங்கினாள். அவளை மணக்க எண்ணிய மகாவிஷ்ணு, ஒருசமயம் இளைஞனின் வடிவில் இங்கு வந்தார். சேதுலட்சுமியின் கையைப் பிடித்து வம்பு செய்தார். அரண்மனைக்கு தகவல் பறந்தது. மன்னன் கோபத்துடன் வந்து, திருமாலைக் தைது செய்து சிறையில் அடைத்தான். அவர் தப்பிச்செல்ல முடியாதபடி காலில் சங்கிலியைக் கட்டிவிட்டான்.

அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, தானே இளைஞனாக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த மன்னன், தன் மகளை அவருக்கே மணம் முடித்து தந்தான். மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் மன்னனுக்கு காட்சி தந்தான். இவ்வாறு மன்னனால் சிறைப்படுத்தப்பட்ட சேதுமாதவருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. இவரை, "ஆதிமாதவர்" என்றும் அழைக்கிறார்கள். சுவாமியின் காலில் தற்போதும் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற இத்தலத்தில் இலட்சுமியின் பெயரில் ஒரு தீர்த்தம் (தெப்பக்குளம்) உள்ளது. இராமேஸ்வரத்திலுள்ள 22 தீர்த்தக்கட்டங்களில், இதுவே முதல் தீர்த்தமாகும். தீர்த்தநீராடுபவர்கள் இதில் நீராடியபிறகே, பிற தீர்த்தங்களில் நீராடுகிறார்கள். இத்தீர்த்தக் கரையில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி உள்ளது.

அட்சய திரிதியை விளக்கம்!

 "திரிதியை" என்பது சந்திரனின் மூன்றாம் பிறை. "அட்சயம்" என்றால் "வளர்ச்சி". மூன்றாம் பிறை பார்ப்பது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. இந்த நாளில் எடுக்கும் முயற்சிகள் வளர்ச்சியடையும். சந்திரன் மனநிலையை பலப்படுத்தும் கிரகம். மனோபலம் வளர்ந்தால் எந்த செயலும் எட்டிவிடும் தூரத்திற்குள் வந்துவிடும். அட்சய திரிதியை நாளில் முயற்சியை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் எளிமையாக பலன்களை அடைய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
அட்சய திரிதியை பாடல்!

மகாலட்சுமிக்கு "இராஜ்யஸ்ரீ" என்றும் பெயருண்டு. இப்பெயரே இராஜஸ்ரீ என பிற்காலத்தில் திரிந்தது. இராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி இலட்சுமி என்பதால் இவளுக்கு இப்பெயர் அமைந்தது. அட்சய திரிதியை அன்று காலையில், திருவிளக்கு முன்பு கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாடினால் அளப்பரிய செல்வ வளம் கிடைக்கும்.

பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக