புதன், 27 செப்டம்பர், 2017

கார்த்திகை (சுக்ல பட்ச) நந்த சப்தமி!

நந்த சப்தமி
கார்த்திகை சுக்ல பட்ச  மாத வளர்பிறை சப்தமி திதியை நந்த சப்தமி என்று வழிபடுவர்.
அன்றைய தினம் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சிறப்பு.
பசுவின் உடலில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். "உபநிடதங்கள் அனைத்தும் பசுக்கள்; அதை மேய்ப்பவனும் கறப்பவனும் கிருஷ்ணன்' என்று பகவத்கீதை கூறுகிறது.
பசுவுக்கு "ரிக்வேதம்' பின்பக்கமாகும். யஜுர்
வேதம் நடுப்பகுதி. சாம வேதம் முகமும், கழுத்துமாகும். இஷ்டம், பூரிதம் ஆகியன இருகொம்புகள். பசுவின் ரோமங்கள் சகல சூக்தங்கள். சாந்தி கர்மாவும், புஷ்டி கர்மாவும் கோமயம். வேதம் வகுத்த நான்கு வர்ணங்கள் பசுவின் பாதங்கள். ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், ஹந்த் என்ற நான்கும் பால்சுரக்கும் தனங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடையும்போது பல அரிய பொருட்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று காமதேனு என்கிறது புராணம். காமதேனுவின் வாரிசாக பல பசுக்கள் பூவுலகில் தோன்றின. அவற்றுள் சிறப்புமிக்க நால்வகை தெய்வப் பசுக்களில் சுஷுதையை இந்திரனுக்கும், கபிலையை எமனுக்கும், ரோஹினியை வருணனுக்கும், காமதேனுவை குபேரனுக்கும் வழங்கினாராம்
மகாவிஷ்ணு.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதால் பசுவை எங்கு கண்டாலும், அதனைத் தொட்டு வணங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது! குறிப்பாக பசுவின் பின்புறம் சாணம் வெளிப்படும் பகுதியில் தொட்டு வணங்கினால் மகாலட்சுமியின் அருள்கிட்டும். அந்தப் பகுதியில்தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதங்கள் கூறுகின்றன.
பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமயம் இவை  ஐந்துமே "பஞ்ச கவ்யம்' எனப்படுகிறது. ஆனால் ஒரே பசுவிடமிருந்து பஞ்ச கவ்யம் தயாரிக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
"ஆன்-ஐந்து' என்பது பஞ்ச கவ்யத்திற்கு இணையான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லே தேவாரத் திருமுறைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பசுவின்பால் ஐந்து பங்கு, பசுவின் தயிர் மூன்று பங்கு, நெய் இரண்டு பங்கு, பசுவின் சிறுநீர் ஒரு பங்கு, பசுஞ்சாணம் கைப்பெருவிரல் அளவில் பாதி சேர்த்து ஒரு வெள்ளிப்பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அதற்குரிய மந்திரம் சொல்லிப் பூஜை செய்தபின், அந்தப் பஞ்ச கவ்யத்தின் ஐந்து பொருட்களும் ஒவ்வொரு தேவதைக்கு உரித்தாகிறது. கோஜலத்
துக்கு வருணனும், சாணத்துக்கு அக்கினியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு, வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
மின்னும் செந்நிறப் பசுவிடமிருந்து கோநீரையும், வெள்ளைப் பசுவிட மிருந்து சாணத்தையும், பொன்னிறப் பசுவிடமிருந்து பாலையும், நீலநிறப் பசுவினிடமிருந்து தயிரினையும், கருநிறப் பசுவினிடமிருந்து நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.


பஞ்ச கவ்யம் தயாரிக்கும்பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோநீரையும், "கந்தத்வாராம்' என்ற மந்திரத்தால் பசுஞ்சாணத்தையும், "ஆபயாயஸ்ய' என்று தொடங்கும் மந்திரத்தால் பசும்பாலையும், "ததிக்ராப்னோ'  என்று தொடங்கும் மந்திரத்
தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி' என்று தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும், "தேவ ஸ்யாத்வா' என்ற மந்திரத்தால் தத்துவதீர்த்தத்தையும் மந்திரித்து சேர்த்து தயாரிப்பதே மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச கவ்யம் எனப்படுகிறது.
இந்தப் பஞ்ச கவ்யத்தை தினமும் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பூஜித்து அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும், உடல் வளம்பெறும்.


பஞ்ச கவ்யம்  சிவ வழிபாட்டிலும், விஷ்ணு வழிபாட்டிலும் இடம்பெறுகிறது. இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட பஞ்ச கவ்ய பிரசாதத்தை பக்தியுடன் அருந்தினால் நோய்
நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்.
இத்தகைய பஞ்ச கவ்யத்தைத் தரும் கோமாதாவான பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.
கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவருடன் ஐந்து பசுக்கள் வாழ்கின்றன. நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை,, சுமலை என்னும் அந்த பசுக்களின் வழியில் வந்து பூமியில் தோன்றின இப்போது வாழும் பசுக்கள். இந்தப் பசுக்களின் சாணத்தால் பங்குனி மாதத்தில் சிவாகமத்தில் அருளியபடி அக்கினியில் மந்திரம் சொல்லி பஸ்பமாக்குவது "கற்பவிபூதி' என்பர்.


நந்தை என்னும் பசு கருமை இல்லாத பொன்னிறம் கொண்டது. இதன்மூலம் கிடைக்கும் சாணத்திலிருந்து தயாரிப்பது விபூதியாகும். பத்திரை எனும் பசு கருமை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது பசிதமாகும். சுரபி எனும் வெண்ணிறப் பசுவிடமிருந்து கிடைப்பது பசுமம் ஆகும். சுசீலை எனும் பசு புகை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது சாரம் எனப்படும். சுமலை என்னும் பசு செந்நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது இரட்சை ஆகும்.
சித்திரை மாதத்தில் பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைத் தூளாக்கி, விதிமுறைப்படி அக்கினியில் அதற்குரிய மந்திரம் ஜெபித்து புடமிட்டுத் தயாரிப்பது அநுகற்ப விபூதியாகும். காட்டில் இயற்கையால் ஏற்பட்ட அக்னியில் உண்டாக்கிய சாம்பலை எடுத்து, பஞ்ச கவ்யம் விட்டு மந்திரங்கள் ஜெபித்து மீண்டும் அக்னியில் புடமிட்டு எடுப்பது உபகற்ப விபூதியாகும். முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியை நெற்றியிலும் உடலிலும் மந்திரம் ஜபித்து அணிந்தால் நோய்நொடியின்றி ஆரோக்கிய
மாக வாழலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.
பல மகத்தான சக்திகளைக்கொண்ட கோமாதவான பசுவை அதற்குரிய நாளான நந்த சப்தமியன்று பூஜித்தால் கூடுதல் பலன்கள் பெற்று வளமுடன் வாழலாம். பசுவை வழிபட்டபின், அதற்கு ஆகாரமாக ஒரு கைப்பிடி புல், சிறிதளவு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள் கொடுப்பது மிகவும் நல்லது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக