புதன், 27 செப்டம்பர், 2017

வேண்டுவன அருளும் காமதேனு!

"ஸர்வ காமதுகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே.'

"எல்லாருடைய விருப்பங் களையும் பூர்த்தி செய்பவள்; எல்லா புண்ணிய நதிகளின் தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவள்; மங்கள கரமானவள்; சிறப்புவாய்ந்த காமதேனுவே உனக்கு நமஸ்காரம் (வணக்கம்)' என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். மனிதப்பிறவியை எப்படி உயர்வாகச் சொல்கிறோமோ அப்படித்தான் பசுவின் பிறவியும் உயர்வானது. தெய்வ லோகத்தின் தெய்வீகப் பசுவை (காமதேனு) வணங்குவதன்மூலம் நாம் வேண்டிய வளங்களைப் பெறலாம். மேலும் எல்லாவிதமான தோஷங்களும் பாவங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அரிய பொருட்கள் பல வெளிவந்தன. அதில் வெளிப்பட்டது தான் காமதேனு
. கேட்பவர்களுக் குக் கேட்ட வரத்தைத் தரும் அபூர்வ சக்தி காமதேனுவுக்கு உண்டு.உடலால் வெள்ளைநிறப் பசுவின் தோற்றமும், முகம், மார்புப் பகுதிகள் பெண் உருவத் தோற்றமும், பின்புறம் மயில் போன்ற அழகிய தோகையும் இறக்கையும் கொண்டு, ஒரு புதுவிதமான அற்புதத் தோற்றத்தைக் கொண்டதுதான் காமதேனு. தேவலோகத்தில் இந்த தெய்வீகப் பசு வாழ்ந்து வந்தது. இதற்கு சுரபி என்னும் பெயரும் உண்டு.

காமதேனுவைப் பற்றி வியாச பகவானால்
உபதேசிக்கப்பட்ட புராணங்களிலும், இதிகாசங் களிலும் பல செய்திகள், குறிப்புகள் உள்ளன. அதேபோன்று வேதங்களிலும் ஸ்ரீமத் தேவி பாகவதத்திலும் "பசு' என்கிற பெயரில் பல குறிப்புகளும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஐந்தாவது வேதமாக இந்துக்களால் போற்றப்படும் பகவத்கீதையில் பசுவான் கிருஷ்ணர் காமதேனுவைப் பற்றி சொல்லும்போது "காமதுக்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸஹயக்ஞா: பர்ஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி
அனேன ப்ரஸவி ஷ்யத்வமேஷ
வோ அஸ்த்ஷிஷ்ட காமதுக்'.
(கீதை 3.10)

(படைக்கும் கடவுளாகப் போற்றப் படும் பிரம்மதேவன் முதலில் மனித உயிர்களைப் படைத்துவிட்டு அவர் களிடம், "உங்களின் குலம் தழைக்கும். உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இந்திரனின் பசுவான காமதேனு (காமதுக்) மூலம் பெறுவீர்கள்' என்றார்.

அதேபோன்று மற்றொரு இடத்தில் பகவான் கிருஷ்ணர்-"ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்
தேநூநாம் அஸ்மி காமதுக்
ப்ரஜந: ச அஸ்மி கந்தர்ப்ப
ஸ்ர்ப்பாணாம் அஸ்மி வாசுகி'
(கீதை: 10-28)என்கிறார். இதில் "பசுக்களில் நான் (பகவான் கிருஷ்ணன்) காமதேனுவாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
தன்னை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் சக்தியும் ஆற்றலும் பெற்ற பசுக்களின் தாயான காம தேனுவை அதற்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் நிச்சயம் பலன் தரும்.
"ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ர்யை ச தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்.'

காமதேனுவாக நினைத்து பசுவை வெள்ளிக்கிழமையன்று  கன்றுடன் சேர்த்து வழிபடுவது சிறப்பு.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக