சனி, 27 ஆகஸ்ட், 2016

கோலாதேவி ஸ்ரீ கருடஸ்வாமி ஆலயம்!

 
சதாசர்வ காலமும்  ஸ்ரீ  மஹாவிஷ்ணுவோடு இருந்து கொண்டு, அவருக்கு அணுக்கத் தொண்டராகப் பணியாற்றும் ஸ்ரீ  கருடாழ்வார்  பரமபதத்தில் பகவானுக்கு அருகில் இருக்கும் அனந்த, கருட, விஷ்வக் சேனர் என்ற மூன்று நித்ய சூரிகளில் ஒருவராக  வழிபடப்படுகிறார். பறவைகளுக்கு அதிபதியான கருடனையும், நாகங்களையும் வழிபட்டு போற்றுவதற்கென்றே கருட பஞ்சமி மற்றும் நாக சதுர்த்தி ஆகிய இரண்டு முக்கிய நாட்களை விரத நாட்களாக நாம் அனுஷ்டிக்கிறோம்.



நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றன. சிரவண (ஆவணி) மாதம் அமாவாசையைத் தொடர்ந்து வரும் சுக்ல பட்ச பஞ்சமி நாளே  கருட பஞ்சமியாகும். பல மாநிலங்களில் இதற்கு முந்தைய  நாளான சதுர்த்தியை நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர். ஒரு  சில இடங்களில் கருட பஞ்சமி நாளன்றே  நாகபஞ்சமி என்ற, சர்ப்பங்களைப் போற்றி  வழிபடும் சிறப்பான நாளையும் சேர்த்தே கொண்டாடுகின்றனர்.



கச்யப முனிவரின் பத்னி  விநதைக்கு மைந்தனாக அவதரித்த கருடன்  வைநதேயன் என்று அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆடி மாத சுவாதி  நட்சத்திரத்தைஸ்ரீ கருட ஜயந்தி நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்த “திருவாடி சுவாதி’’ நாளன்று  வைணவ ஆலயங்களில் கருடனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் கருவறைக்கு  நேர் எதிரே கருடாழ்வாருக்கு  என்று  சிறிய தனிச்சந்நதி அமைந்துள்ளதைப் பார்க்கலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை, பிரம்மோற்சவம் மற்றும் பிற உற்சவங்களின்போது நடைபெறும் கருடசேவைகளும்  கருட பகவானின் முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகின்றன. சிறிய திருவடியான அனுமனுக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள்  இருப்பினும், கருடனுக்கு என்று தனியே ஆலயங்கள் மிக மிக அரிதாகவே உள்ளன.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில்  சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை கருடன் காவு என்கின்றனர். பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூர்ணமான குணம் ஏற்படும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே  அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.



இதே போன்று கருட பகவானுக்குரிய அரிய ஆலயம் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் வட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கருட ஸ்வாமி ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி, பிரதான நுழைவாயிலாக இந்த கிராமம் இருந்தபடியால் (மூல வாயில்) இதற்கு மூலபாகிலு என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே முல்பாகல் என்று மருவிவிட்டதாம்.



இந்த கோலாதேவி கிராமத்தில் ஸ்ரீ  கருட பகவான் எழுந்தருளியிருப்பதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி ஸ்ரீ கருடஸ்வாமி ஆலயத்தைஸ்ரீ  ராமானுஜர்  பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.



சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு  ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்தக் கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.



மஹாபாரத காலத்தில் காண்டவ வனத்தை அர்ச்சுனன்ஸ்ரீ கிருஷ்ணரோடு எரித்து அழித்தபோது, அங்கு தங்கியிருந்த தட்சகன் என்ற பாம்பு அர்ச்சுனனுக்குச் சாபமிட, அர்ச்சுனன் சர்ப்ப தோஷத்தினால் பீடிக்கப்பட்டானாம்.  முனிவர்கள் அர்ச்சுனனிடம் கருட பூஜை செய்யும் படி அறிவுறுத்த அர்ச்சுனன் கருட பகவானை அணுக, அவரோ மஹாவிஷ்ணு தனக்கு ஆணையிட்டால்  மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று கூறிவிட்டார். பகவானும் கருடனுக்கு அனுமதி தர, கருட பகவானோ தன் இரு புஜங்களின் மீதும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் தாயாரும் அமர்ந்து, ராமர் போன்றே வில் அம்பு ஏந்தி காட்சி தந்தால் மட்டுமே தான் அர்ச்சுனனின் பூஜையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாராம்.



அர்ச்சுனனுக்கு உதவும் பொருட்டும், கருடனின் வேண்டுகோளுக்கிணங்கியும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், தாயாரும் கருடனின் கரங்களில்  அவர் கேட்டுக் கொண்டபடியே காட்சி தந்தனராம். மேலும் கருடபகவான் சந்நதிக்கு வடபுறம் அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த அனுமன் சந்நதியை நோக்கியே கருட ஸ்வாமியும், அவரது வலக்கரத்தில் உள்ளஸ்ரீ  மஹாவிஷ்ணுவும் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
கலியுகத்தில் ஜடாயுவே கருட பகவானாக இத்தலத்தில்  குடி கொண்டுள்ளதாக உள்ள ஐதீகத்தின்படி, பிற்காலத்தில்  ப்ருகு மஹரிஷிஸ்ரீ கருடபகவானுக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.



இங்கு ஆலயக் கருவறையில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக ஸ்ரீ கருடஸ்வாமி எழுந்தருளி யிருக்கிறார்.



வலக்காலை பின்புறமாக மடித்தும்,  இடக்காலை முன் நோக்கி வைத்து, இறக்கைகளை நன்கு விரித்து பறக்கும் பாவனையில் வடிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீ கருட பகவான் சிற்பத்தில் அஷ்ட நாகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.  இடுப்பில் செருகிய குறுவாள், ஆபரணங்கள், யக்ஞோபவீதம் மற்றும் மீசை, கோரைப் பற்களுடன், வடதிசை  நோக்கிக் காட்சி தரும் இந்த கருட பகவான், தன் வலக்கரத்தில்  ஸ்ரீ  மஹாவிஷ்ணுவையும்,  இடக்கரத்தில் ஸ்ரீ  மஹாலக்ஷ்மித் தாயாரையும், தன் கரங்கள் படாமல் பீடத்தின் மீது வைத்து ஏந்தியிருப்பது  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 



மேலும் இங்கு ஸ்ரீ  மஹாவிஷ்ணு வில் அம்பு ஏந்தியிருப்பதும் வித்தியாசமானது.  கருடனின் தலைப்பகுதியின் இருபுறங்களில் சங்கும் சக்கரமும் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வித்தியாசமானஸ்ரீ  கருட பவானின் விக்கிரகம் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்கிறார்கள்.  ஒரே கருவறையில்  கருடாழ்வாரோடு  ஸ்ரீ  மஹாவிஷ்ணு ஸ்ரீ  மஹாலக்ஷ்மி என மூவரையும்  ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குக் கிட்டுகிறது.



மஹாபாரதப் போர் முடிந்தவுடன் பஞ்ச பாண்டவர்கள் இப்பகுதிக்கு வந்திருந்தனர் என்றும், அப்போது இங்குள்ள அனுமன் சந்நதியை அர்ச்சுனனும், ஸ்ரீ நிவாசப் பெருமாள், பத்மாவதித் தாயார், ஸ்ரீ  ராமர் சீதா லட்சுமணர் விக்கிரகங்களை வசிஷ்ட முனிவரும்  பிரதிஷ்டை செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது.



கர்நாடக மாநிலத் தலைநகரான பங்களூருவிலிருந்து (சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 4ல் சுமார் 83 கி.மீ. தொலைவில் உள்ள,  முல்பாகலை அடைந்து, அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கோலாதேவி கிராமத்திற்குச் சென்று ஸ்ரீ  மஹாவிஷ்ணு, ஸ்ரீ  மஹாலக்ஷ்மியை ஏந்திய  ஸ்ரீ  கருடாழ்வாரை தரிசிக்கலாம். ஆலயத் தொடர்புக்கு அலைபேசி எண்:  9900581401. ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 வரை. முல்பாகல் வட்டத்தில் ஸ்ரீ சோமேஸ்வரர்,  ஸ்ரீ விட்டலேஸ்வரர், ஸ்ரீ  கோலாராம்மா தேவி ஆகிய ஆலயங்களும் பிரசித்தமானவை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக