வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி துதிகள்!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
சங்கத் தமிழ் மூன்றும் தா!


பத்ம புராண சரஸ்வதி துதி!

பக்தர்களின் இதயத்தில் வசிப்பவளே! பிரம்மாவின் கழுத்தில் வாசம் செய்பவளே! எப்போதும் சந்திரனுக்குப் பிரியமாய் உள்ளவளே! என்றென்றும் மங்காத பிரகாசமாக விளங்கும் அன்னையே! சரஸ்வதிதேவியே உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன், நல்லறிவு, எல்லாவற்றிலும் உயர்ந்தவை, பரிசுத்தம் போன்றவற்றை அருள்பவளே! கையில் வீணையைத் தாங்கியிருப்பவளே! ஐம், ஹ்ரீம், ஹ்ராம் போன்ற மந்திர ஒலிகளில் பிரதிபலிப்பவளே! எங்களுக்கு உன் பேரருள் கிட்ட வேண்டும் அம்மா!
 
கல்விச் செல்வம் கைகூட!

சகலகலாவல்லியே! சரஸ்வதி தேவியே! வேதத்தால் போற்றப் படுபவளே! பஞ்சபூதங்களிலும் பரவி நிறைந்திருப்பவளே! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவள் நீயே! நான் எண்ணும் போது கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கைகூடும்படியாக அருள்வாயாக!

பொருள் உணர்ந்து படிக்க!

சகலகலாவல்லியே! வெண்மையான அன்னத்தைப் போன்றவளே! கல்வியும் அதன் பொருளும், அந்தக் கல்வியால் உண்டாகும் பயனும் எனக்கு கிடைக்க வேண்டும். உன் கடைக்கண்ணால் எனக்கு அருள் புரிவாய்!


சரஸ்வதி காயத்திரி!

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச திமஹி 
தந்நோ வாணி ப்ரசோதயாத்!
 
ஸ்ரீபிரம்மா காயத்திரி!

ஓம் வேதாத் மனாஹாய வித்மஹே
ஹிரண்யகர்ப் பாய திமஹி 
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்!
 

சரஸ்வதி துதிகள்!
 
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாக காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிறபாள் மலரடி சூழ்வோமே!
 
வெள்ளைத்தாமரைப் பூவினிலே
வீற்றிருக்கும் கலைவாணி!
விண்ணவர் போற்றும் சுகபாணி
வந்தருள்வாயே கலைவாணி!

உள்ளம் எல்லாம் உன் புகழ்பாடி
உயர்ந்திட அருள்வாய் கலைவாணி!
உயர்கலையோடு நலம்பெறவும்
நீ அருள்வாய் கலைவாணியே!

அண்ட புவனங்களினை ஆக்குமயன் தேவியுனை
மண்டலத்தில் போற்றி வரம் பெற்ற தொண்டருக்கு
ஆதரவாய் நின்று அருளினாய் முத்தமிழும்
போதமளி வாணி உன்தாள் போற்றி.

வெண்மலரும் வெண்பணியும் வெண்கலையும்
வெண்மணியும் வேய்ந்து வாச
வெண்கமலம் வீற்றிருந்து பழங்கருணை
பூத்துவண்டு விளரி பாடக்

கண்மலர் ஆயிரந்தோட விழ்ந்து முகை
நெகிழ்ந்த கமலத்தில் வாழ என்
கண்மலருந் சதுர்முகத்தோனா வில்வளர்
வாணி பதங் கருத்துள் வைப்பாள்.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளப்பணி பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச்
சரியாசனம் வைப்பாய் தாயே!

அம்மா கலைவாணி எனக்கு அருள்வாய் மகாராணி
சிம்மாசனமாய் எந்நாவிலே தேவி நீ வருவாய்!
பிரமன் வித்தை தொழில் ஆனான்
வேதமுதல் ஆனான் அவன்!

காதல் இளங்களியே என்றும் 
கைதொழுவேன் உன்னையே!
வெள்ளை மலர்மேலே அன்னம்
வீற்றிருந்தால் போலே மெள்ள

எழுந்தருள்வாய்! அம்மா வேண்டும்
வரம் அருள்வாய்! ஏது படித்து விட்டேன்!
பெரியதாய் என்ன முடித்து விட்டேன்!
உன் காலைப் பிடித்தேன்! அதனால்

கவிதை வடித்தேன்! பூவும்
உனக்காக! தேடும் பொன்னும் 
உனக்காக! கூடும் எனக்காக
அருள்வாய் கோடிக் கணக்காக!


கலைமகள் துதி!
 
பிரம்மனின் வடிவம் கொண்டாய் பரமனின் ஜோதி கொண்டாய்!
கர்மத்தை அளிக்க வல்ல காரணி கலையும் நீயே!
மர்மமாய் இயற்றுகின்ற மங்கையே! வெண்மை நேர்ந்த
சொர்ணமே வித்தை நல்கும் சொர்க்கமே போற்றி! போற்றி!

ஆரெனக் கருணை கொண்ட அன்னையே உண்மை நீயே!
கூறென முக்குணத்தைக் கொண்டவள் நீயே தாயே! 
வீறென வந்தவர்க்கு விளைந்த வோர் தோழியேனும் 
ஆறுதல் அறிவை நல்கும் அணங்குணை வணங்கு கின்றேன்!

வாக்கதின் ரூபமான சாரதை நீயே அம்மா!
வாக்கினில் நன்மை சேர்க்கும் வாணியும் நீயே தாயே!
வாக்கினைப் பிரயோகிக்கும் வல்லவர் வாக்கும் நீயே!
வாக்கதன் பொருளும் நீயே! வல்லபி போற்றி! போற்றி!

காலங்கள் முடிவு கூறும் கமலைநீ கருதினாயேல்
மூலங்கள் எல்லாம் உன்றன் முகிழ்ப்பினில் வருதல் உண்மை
ஆலங்கொள் அண்ணனார்க்கு அமைந்ததோர் தங்கையன்றோ!
நீலங்கொள் விழியாய் பிரம்ம சித்தாந்தம் நீயே அன்றோ!

மறைகளின் சக்தி நீயே! மறைஞான சக்தி நீயே!
மறப்பொருள் ஆன புத்தி மாபொரும் சக்தித் தாயே!
பரையெனில் உனையே சாரும் பராசக்தி வடிவம் கொள்ளும்
நிறைகுணப் பெண்மை நீயே! நிமலையே வணங்குகின்றோம்!

அருளதே உருவாய்க் கொண்ட அன்னையே உன்னை 
என்றும் அருமையாய்க் கொண்டோன் தன்னை 
அன்னையே என்றும் காக்கும்! அலங்கலைத் தொழுதேன் நானே! 
அருளொடு ஞானம் கேள்வி அனைத்தையும் அளித்து நீ காக்க!

கருவமே கொண்ட என்னைக் கனிந்துடன் 
காக்கக் காக்க! உருவமொன்றில்லா அன்னை 
உனையினித் தொழுவ தெவ்வாறு! இறுவென நீயும் 
சொன்னால் எனக்கெனப் பணியொன்றேது!

உருவமும் அருவுமான ஒருவளே! 
அறிவே என்றன் ஒருதனி உன்னையே 
நான் பணிந்தனம் கருவமே கொண்டாய் 
என்றால் கலந்தவன் நானே என்று இருவரும்

பொருதல் தீது என்னை நீ காக்க தாயே!
மருமமே மருமத்துள்ளும் மருமமாய் 
இயங்கும் தேவீ உருவிலி நீயே!
உண்மை உன்வலி தெரிதல் உண்மை!

துருவமும் நீயே ஆனாய் துரந்தரி அறிவே உன்னைச்
செறிவுடன் நினைக்கும் மாந்தர் செம்பொருள் அடைவதுண்மை
அருவமாய் உருவமான அமலையே உன்றன் பாட்டை 
அறிவுடன் அறிந்தோர் என்றும் அறிகுவர் மேதை தானே!
 
 
சரஸ்வதி கவசம்!

சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க! 
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!

வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி 
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின் 
தேவி விழுத்தக என் அடி காக்க!

வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான் 
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! 
காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில் 
தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில் 
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!

துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில் 
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ 
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!


அகத்தியர் பாடிய சரஸ்வதி துதி!

குந்தமலர் என்கிற வெள்ளொளுத்திபூ, சந்திரன், பனிநீர் போன்ற வெண்மையான மாலையை உடையவள, வெண்ணிற ஆடை அணிந்திருப்பவள், கையில் வீணையேந்தி வெண்தாமரை மலர்மேல் அமர்ந்திருப்பவள், பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட முக்ய தேவர்களால் போற்றப்படுபவள். அஞ்ஞானத்தைப் போக்கும் சரஸ்வதிதேவி என்னைக் காப்பாற்றட்டும். உன்னை வணங்குகின்றேன்.

வாக்தேவி சரஸ்வதிக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் ஸ்படிக மணியாலான அட்சமாலை. ஒரு கரத்தில் வெண்தாமரை. மற்ற இரு கரங்களில் கிளியையும் புத்தகத்தையும் வைத்துக் கொண்டிருக்கின்றாள். இவள் குந்தமலர், சந்திரன், சங்கு போன்று வெண்மையானவள். அவள் எப்போதும் என்னுள் தங்கட்டும். அவளை வணங்குகின்றேன்.

குந்தமலர், சந்திரன், சங்கு, படிகமணி, ஆகியவைகளைப்போல் வெண்ணொளியில் ஒளிர்பவளும், எப்போதும் பிரஸன்னமா யிருப்பவளும் என் முகத்தில் தங்கட்டும். அவளை நான் வணங்குகின்றேன்.

பனி, கர்ப்பூரம், சந்திரன் இவைபோன்ற வெண் நிறமுடையவளும், பொன்மாலை, சம்பகமாலை அணிந்திருப்பவளும், நிமிர்ந்த பருத்த கும்பம் போன்ற தனங்களுடன் எழிலுற விளங்குபவளுமான சரஸ்வதி தேவியை வாக்குவன்மை அளிக்க வேண்டி வணங்குகின்றேன்.

நீரின்மீது தாமரையாசனத்தில் அமர்ந்திருப்பவளும், வகுள புஷ்பத்தில் சோபிப்பவளும், தபஸ்விநியாக காட்சியளிப்பவளும், கமலாசனத்தில் அமர்ந்திருப்பதில் பிரியமுள்ளவளும், அழகிய தனங்களையுடையவளும்மான சரஸ்வதி என் மனதில் நிறைந்திருக்கட்டும். என்னை அறிவு நிரம்பியவன் ஆக்கட்டும். நான் அவளை வணங்குகின்றேன்.

தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் பாத கமலங்களை உடையவளும், கையில் அழகான புத்தகத்தை வைத்திருப்பவளும், பிரும்மாவின் மனைவியும் கமலாசனத்தில் அமர்ந்திருப்பவளுமான சரஸ்வதி என் நாவில் நடமாடட்டும். வாக்கு வன்மைதரட்டும்.

நினைத்த ரூபம் எடுக்கக்கூடியவளும், வரம் அளிப்பவளுமான சரஸ்வதியே, கல்வியைத் தொடங்கப் போகிறேன் எனக்கு எப்போதும் எல்லா கலைகளும் சித்தியடைய வரம் அளி.

எங்கும் நிறைந்திருக்கும் தேவியான தேவி சரஸ்வதியே. உன்னை வணங்குகின்றேன். சாந்த வடிவினளும், சந்திர கலையைத் தரித்தவளும் யோகீஸ்வரியுமான உன்னை போற்றி வணங்குகின்றேன்.

எப்போதும் மகிழ்ச்சியினைத் தருபவள். அனைத்துக்கும் ஆதாரமானவள். களங்கம் அற்றவள். கலைகளின் அன்னை விசாலமான கண்களைஉடைய பூரண ஞானியான உனக்கு என் வணக்கங்கள்.

சுத்தமான ஸ்படிகக் கல் போன்றவளும் சூட்சும வடிவானவளும் பரபிரம்ம ஸ்வரூபியும், நான்கு கரங்களையுடையவளும், அனைத்து சித்திகளுக்கும் அதிபதியானவளுமான சரஸ்வதிக்கு எனது வணக்கங்கள்.

உடல் முழுவதும் முத்துக்களால் அலங்கரிக்கப் பட்டிருப்பவளும், மூலாதாரமானவளும், மூலமந்த்ர வடிவினளும், மூல சக்தியுமானவளுக்கு எனது வணக்கங்கள்.

மனோன்மணி மற்றும் மகாயோகினிக்கு நமஸ்காரம், வாக்கினில் வரமளிக்கும்படி வரதஹஸ்தம் உடையவளிடம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றேன்.

வேதத்துக்கும், வேதரூபிணிக்கும், வேதாந்தத்திற்கும் வணக்கங்கள். குற்றங்களுக்கு அப்பாற்பட்ட நிறைவான குணங்களினால் ஒளிர்பவளுக்கு எனது வந்தனம்.

சர்வ ஞானியும் சதானந்தரும், சர்வ ரூபியுமானவளுக்கு வணக்கம். சம்பந்தரும் இளைஞியும் அதே சமயம் சர்வக்ஞ சொரூபியுமானவளுக்கு வணக்கம்.
 
யோகநாரியானவளும், உமா தேவியானவளும், யோகானந்த வடிவினளும், திவ்யஞான சொரூபியும் முக்கண்ணியும் திவ்ய மூர்த்தியுமானவளுக்கு வணக்கம்.

பிறைச் சந்திரனை தலையிலணிந்தவளும், சந்திரனைப் போன்ற முகமுள்ளவளுமான சரஸ்வதிக்கு வணக்கம். சந்திர சூரியனை சிரசில் தரித்தவளும் சந்திரனைபோன்ற குளிர்வான ஒளியுள்ளவளுமான கலைவாணிக்கு வணக்கம்.

அணுவுக்கு அணுவாகவும், பரமாணுரூபியாகவும், விஸ்வ ரூபமெடுப்பவளும், அணிமாதி அஷ்டசித்திகளுக்கு அதிபதியும் ஆனந்த சொரூபியுமான தேவிக்கு வணக்கம்.

ஞானம். விஞ்ஞானம் என்ற இரண்டுமானவாளும் ஞான மூர்த்தியாக விளங்குபவளும் ஆகிய சரஸ்வதிக்கு வணக்கம். பல்வகையான சாஸ்திரரூபியும் பல்வேறு உருவமுள்ளவளுமான தேவிக்கு வணக்கம்.

தாமரையில் பிறந்தவளும், தாமரையின் வம்சத்தவளும் தாமரை சொரூபியுமானவளுமாகியவளுக்கு வணக்கம். பரமேஷ்டிக்கும் மேலான மூர்த்திக்கும் பாபநாசினிக்கும் வணக்கம்.

மகாதேவியும், மகாகாளியும், மகாலக்ஷ்மியுமாக திகழ்பவளுக்கு வணக்கம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பரப்பிரம்ம வடிவாக விளங்குபவளுக்கு வணக்கம்.

தாமரை பூந்தோட்டமாக விளங்குபவளும் நினைத்த உருவமெடுப்பவளுமாகிய தேவிக்கு வணக்கம். கபாலியானவளும் செயல்வீரம் மிக்கவளும் அதேசமயம் செயலாகமிருப்பவளுக்கு வணக்கம். செயலும் அவளே. செய்பவளும் அவளே.

நாள்தோறும் காலை மாலை என்று இந்த துதியை ஆறு மாதகாலத்திற்கு தினமும் படிக்கக், கோரிய எல்லா  பயனும் எனக்கு நிச்சயம் கிடைக்க அருள் புரிவாய்.

அகஸ்திய மகரிஷியால் சொல்லப்பட்ட இந்தது தி எனக்கு சகல சித்திகளையும் அளிக்கவல்லது. எனது பாவங்களிலிருந்து விடுவிக்க வல்லது.


வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்- வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்.
 
வாணி  கலைத்தெய்வம்- மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
கானுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மானுயர்ந்து நிறபாள் மலரடியே சூழ்வோமே.

 
சரஸ்வதி தேவியே! உன் கரங்கள் தாமரை மலர் போன்றவை. அந்த அழகிய கரங்களில் ஞானத்தின் சாரமாகிய புத்தகமும், ஸ்படிகமணி ஜபமாலையும், தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே! உண்னை வணங்குகின்றேன்!

உன்னை தியானிப்போரின் நாவின் மூலம் உரை, நடை மற்றும் செய்யுள் வடிவமான வாக்கு சாதுர்யம் உன்னருளால் தானாகவே வெளிப்படுவதை நான் உணர்கின்றேன்! அன்னையே உனக்கு நமஸ்காரம்!

சகலகலாவல்லியே! அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அருள்பவளே! நா வன்மையும், கலைகள் பலவற்றில் தேர்ச்சியும்
பெற்று அறிந்த கல்வியைத் தெளிவுற வெளிப்படுத்தும் ஆற்றலும் எனக்கு அருள்வாய்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக