சனி, 13 ஆகஸ்ட், 2016

வேண்டும் வரமருளும் வரமஹாலக்ஷ்மி!

 
 ட்சுமி தேவியை வழிபடும் சிறப்புமிகு விரதம் ‘வரலட்சுமி நோன்பு’ ஆகும். திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு மணந்தார். ஸ்ரீமன் நாராயணன் பூமியில் அதர்மங்களை அழித்து, தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது, அவரோடு பல வடிவங்கள் எடுத்தார்.

திருமணமான சுமங்கலிப் பெண்களும், திரு மணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்வார்கள். ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இதை அனுஷ்டிக்க வேண்டும். ஆவணி மாதத்திலும், ஒரு சில ஆண்டுகளில் ஆடி மாதத்திலும் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு வருகிற 12–ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது.

பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும்.

சுமங்கலி பெண்கள் தம் குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழவும், செல்வங்கள் பெருக வேண்டும் என்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், தேவியிடம் வரங்களை வேண்டி வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப் படுகிறது.


மகாலட்சுமி அருளிய விரதம்!


மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் வாழ்ந்த பெண் சாருமதி. இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி விரதமுறையை கூறி அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் படி கேட்டுக் கொண்டாள்.

அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்கத் தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்கத் தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.

விரதம் இருக்கும் முறை!

வரலட்சுமி விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். இலையை மலர்களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண் களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.

செல்வங்களை  அருளும்  விரதம்!

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. பத்ரச்ரவஸ் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். இவன் தனது மகளை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு முறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், சுரசந்திரிகா அரண் மனைக்கு வந்தாள். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி விரிவாக கூறி அதை கடைப் பிடிக்கும் படி கூறினாள். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.

இதைக்கேள்வி பட்ட சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு தெரிந்து கொண்டாள். பின்னர் பக்தியுடன் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.

சாபம்  நீங்கிய சித்திரநேமி!

முன்னொரு சமயம் கயிலாய மலையில் பரமசிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தனர். அப்போது பார்வதி சிவனிடம், ‘நான் உங்களை ஜெயித்து விட்டேன்’ என்று கூறினார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சித்திரநேமி என்பவர் பாரபட்சமாக, சிவபெருமான் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

இதனால் கோபம் கொண்ட பார்வதி, ‘நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாவாய்’ என சாபம் கொடுத்தாள். ஆனால் சிவபெருமான், சித்திரநேமியை மன்னித்து அவனது சாபத்தை அகற்றும்படி கேட்டுக்கொண்டார். சித்திரநேமியும் சாப விமோசனம் கேட்டு பார்வதி காலில் விழுந்தார்.

அதற்கு பார்வதி, ‘எப்போது தடாகத்தில் தேவ கன்னிகைகள் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்போது உன் நோய் நீங்கும்’ என அருள் செய்தார்.

உடனே சித்திரநேமி பூலோகம் வந்து ஒரு குளக்கரையில் அமர்ந்து வசித்து வந்தார். ஒரு நாள் அங்கே வந்து தேவப்பெண்கள் துங்கபுத்ரா நதிக்கரையில் வரலட்சுமி பூஜையை செய்வதை பார்த்து குஷ்ட நோய் நீங்கி தங்க நிறம் பெற்றான். பின்னர் அவனும் இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்கள் அனைவரையும்
கடைப்பிடிக்க செய்தான். அன்று முதல் பூலோகத்தில் வரலட்சுமி விரத முறை பரவியது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக