புதன், 3 ஆகஸ்ட், 2016

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்!




எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன்!
தாரகாசுரனை அழிக்க பிரம்மன் சொல்லியபடி எறும்பு வடிவில் தேவர்கள் அசுரர்களுக்குத் தெரியாமல் சிவ லிங்கத்தின் மேல் ஏற முயன்றனர். ஆனால் எண்ணெய்ப் பசையின் காரணமாக ஏற முடியாமல் கஷடப்பட்டனர். அதனால் சிவபிரான் புற்றாக மாறி, சொசொரப்புத் திருமேனி கொண்டார். நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் செவிசாய்த்துக் கேட்டுக் கொள்வது போல சிவலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் காணப்படும். எறும்புகள் ஊர்ந்து சென்ற தடம் சிவலிங்கத்தின் மேல் தெரியும்.



திரு எறும்பீஸ்வரர் திருக்கோயில் பழமையான கோயில்களைப் பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோயில். தமிழகத்தில் உள்ள 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124-வது ஸ்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இது சோழர் காலக் கோயில். இக்கோயில் 120 அடி உயர மலையின் மேல் 125 படிகள் ஏறிச் சென்று காணும் வகையில் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ( படும தீர்த்தம்)



கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.



தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.

சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.

கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

சிவன் சன்னதியின் இடப்புறம் நவக்ரகங்கள் சன்னதியும், சிவன் சன்னதிக்கு வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன.



அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.



தல வரலாறு :

தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் "தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப் பெருமானை வழிபடுவாயாக, அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்" என்று வழி கூறினார். அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்புகள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவனை கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர்.

எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்குத் திருவருள் செய்தார். இதே போல, சிவசருமன் என்ற சிறுவனுக்காக விரிஞ்சிபுரத்திலும், தாடகைக்காகத் திருப்பனந்தாளிலும் முடி சாய்த்து காட்சி தந்தது இங்கே நினைவு கூறத்தக்கது.

வழிபட்டோர் : முருகன், பிரம்மன், திருமகள், ரதி, இந்திரன், அக்னி, அகத்தியர், நைமிச முனிவர் மற்றும் கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கிப் பேறுபெற்றுள்ளனர்.



கோவில் சிறப்பு :

1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது இது 70 வது தேவாரத்தலம் ஆகும் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வழிபட்ட தலம் நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார்.

இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம்.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.



நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

வைகாசியில் பிரம்மோற்சவம்,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
மகா சிவராத்திரி பௌர்ணமி கிரிவலம்,
பிரதோஷம் என சிவாலய விழாக்கள் அனைத்துமே நடைபெறுகின்றன.


திரு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே

கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்

கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை

புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை

மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்

துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்

திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்

திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!

இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு

துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!

கண்நி றைந்த கனபவ ளத்திரள்

விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!

நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்

நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!
 
கோயில் முகவரி :
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில்,
திருவெறும்பூர் - 620 013, திருச்சி மாவட்டம்.
Ph:0431 - 6574 738, 98429 - 57568.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக