வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சூரிய சதகம்! துதி!

சூரிய சதகம்!
 
oதேவர்கள் தமது சித்தாந்த முறைப்படி சூரியனை வழிபடுவர். சாரணர்கள் சொற்களாலும், கந்தர்கள் கானமிசைத்தும் துதிப்பர். நாகர்கள் அடிபணிந்து வணங்குவர். பைசாசர் மனதை அடக்கி வழிபடுவர். சாக்கியர் தமது ஆகம விதிப்படி பூஜிப்பர். மகரிஷிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதால் துதிப்பர். யோகியர் ஆத்ம சொரூபமே சூரியன் என உணர்ந்து அன்புடன் கும்பிடுவார்கள். விடியற்காலையில் எல்லோராலும் இவ்வாறு நமஸ்கரிக்கப்படும் பகலவன் எங்களைப் பாதுகாப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஆகாயவீதியில் செல்லும் சூரியன், ஆகாயகங்கை வற்றிவிடாதபடி தன் வெப்ப ஒளியை மென்மையாக்கிக் கொண்டான். அதனால் அது மலர்ந்த தங்கத் தாமரையோடு பொலிவு பெற்றது. சோலைகள் அழகு குன்றாமல், மணமிக்க பிரதேசமாயின. பனிபடர்ந்த மேருமலையின் பொற்சிகரங்கள் உருகாமல் தூய்மை பெற்றன. ஜடப் பொருட்களான அவை மீதும் கூட இத்தகைய அருள் கொண்ட சூரியன், எப்போதும் எம்மைக் காப்பானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் இருளை மட்டுமின்றி பாபங்களையும் அழிக்கின்றான். உயர்வான தாமரைகளை மட்டும் மலரச் செய்வதில்லை. சிறிய குன்றின் அருகிலுள்ள தாவரங்களையும் செழிக்கச்செய்து அவற்றையும் மலரச் செய்கின்றான். சரணமென்று சொல்பவர்களுக்கு தனது சத்ய சொரூபத்தைக் காட்டுவதோடு முக்தியையும் அளிக்கின்றான். சூரியன் எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றிடும் ஆற்றல் மிக்கவன். வல்லமை மிக்க பகலவன் எங்களைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகங்களை ஒவ்வொன்றாகத் தாண்டிச் செல்லும் மாறி மாறிச் செல்லும் சஞ்சல சுபாவம் உள்ளவர் சூரியன். ஆனால் தான் தாண்டி செல்லும் அத்தனை உலகங்களுக்கும் உதவி நன்மை செய்வதையே அசைக்க முடியாத கொள்கையாகக் கொண்டவன். மனிதர்கள் பார்வையைத் தன் ஒளியால் கூசச் செய்யக்கூடியவன். ஆனால் அப்படிக் கூசச் செய்வதன் மூலம் அந்தப் பார்வையைத் தெளிவாக்குபவன். தீட்சண்யமாக்குபவன். மனிதர்களுக்கு நன்மையே செய்யும் எண்ணமுள்ளவன். அனைத்தையும் எரிக்கும் இயல்புடையவன் சூரியன். யோகியர்க்கு முக்தியை வழங்குபவனாக இருப்பவன் அவனே. சூரியன் சகல உலகிறக்கும் செல்வமெல்லாம் அருள்பவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகத்திலும் பருவங்கள் ஒழுங்காக வந்து போகின்றன. முரண்பாடுகள் இல்லை. தானியங்கள் செழுமையாக விளைகின்றன. செடியும் கொடியும் மரமும் நன்றாகப் பழம் தரவும், மழைக்காலத்தில் நன்றாக மழை பொழியவும், தெய்வ காரியங்கள் நன்கு நடைபெறவும், அதனால் எல்லோருடைய மனமும் மகிழ்ந்து காற்று நன்கு வீசவும், நட்சத்திரங்கள் பிரகாசிக்கவும், எல்லா திக்குகளுக்கும் மகிழ்ச்சி பரவவும், கடல் தன் எல்லையை கடக்காதிருக்கவும் சூரியன் தான் காரணம். அத்தகைய சூரியன் அனைத்து செல்வங்களையும் அருள்வாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oகைலாயத்தில் மான் தோலணிந்த சிவன், அம்பிகையை தன் உடலில் பாதியாக இணைத்துக் கொண்டுள்ளார். பரந்தாமனாகிய பத்மநாபன், சேஷசயனராக பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். பிரமன் யோக நிஷ்டையில் சிந்தைகொண்டு சிருஷ்டியைச் செய்கிறார். இவை அத்தனைக்கும் காரணம் சூரியன். மூவுலகிற்கும் தலைவனாக எப்போதும் மூவுலகையும் பற்றிய சிந்தனையுடனேயே பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மும்மூர்த்திகளும் ஒரே சிந்தையோடு அவரவர் பணியைப் புரிந்துகொண்டு இருக்கக் காரணம், சூரியன் மூவுலகையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதுதான்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியமண்டலம் வேதங்கள் அறிந்த அனைவரையும் தன்னகத்தே கொண்டது. சூரிய மண்டலமே ரிக்வேதம். சூரிய ஒளிக்கதிர்கள் சாமவேதம். யோகத்தால் மட்டுமே காணக்கூடிய புருஷன் யஜுர்வேதம். மூன்று வேதத்தின் உருவமாகவும் உள்ளவர் சூரியன். அவன் விகாரமற்றவன், வேதங்களால் அறியத்தக்கவன். அந்தச் சூரியன் செல்வமெல்லாம் வழங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oதேவமாதா  எனப்பெயர் பெற்ற அதிதிக்கு இந்திரன் முதலான தேவர்கள் மக்களாகப் பிறந்திருந்தாலும் தாயின் பெயரால் ஆதித்யன் என்ற பெயரோடு திகழ்பவன் சூரியன் ஒருவரே! சூரியன் மட்டுமே தேவர்களின் பகைவர்களை அடக்கும் ஆற்றல் பெற்றவன் என்று மூவுலகத்தோரும் போற்றி மகிழ்கின்றனர். இத்தகைய பெருமை கொண்ட சூரியன் எல்லா நலமும் தருவானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியனையும் பரமசிவனைப் போல் அஷ்டமூர்த்தியென்பர். அதாவது எட்டு வடிவங்களை எடுப்பவன். பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், தலைவன், திங்கள், சூரியன் ஆகிய எட்டு மூர்த்தங்களைக் கொண்டவன். ஒளிக்கு இருப்பிடம்-பூமி, மழை நீர், தூய்மையான காற்று, எரிப்பதால் நெருப்பு, ஆகாய வீதியில் பவனி வருவதால் ஆகாயம், அன்றாட பிரத்யக்ஷ தெய்வம்-தலைவன், அமாவாசையன்று திங்களுடன் இணைவதால் சந்திரன், தனி உருவம் கொண்டதால் சூரியனும் அஷ்டமூர்த்தி-பரமசிவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்

oசெந்தாமரையாளின் கைகளால் வருடப்பெறும் மகாவிஷ்னுவின் திருவடியில் தோன்றும் ஒளிக்கதிர் போல சூரியனின் கதிர்கள் உள்ளன. விநதையின் புத்திரனான கருடன் மேல் ஏறிக் கொண்டு விண்ணில் ஏழு உலகையும் கடந்து உலகைக் காக்கின்றான் பரந்தாமன். அதேபோல சூரியனும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், அருணன் சாரதியாகப் பணியாற்ற வலம் வந்து மேற்கு திக்கின் எல்லையைக் காண்கின்றார். மகாவிஷ்னுவைப்போல விளங்கும் சூரியநாராயணன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

o சூரியனை முன்னிரு ஸ்லோகங்களில் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒப்பிட்டது போல, பிரம்மாவுடன் ஒப்பிடப்படுகிறார். பிரம்மா நீரைப் படைத்ததுபோல, சூரியனும் இருகூறு கொண்டு முதலில் நீரைப்படைத்தார். பிரம்மா குலமகளுக்கு சிருஷ்டியின்போது பெருமை சேர்ப்பது போல, சூரியனும் மேருமலைக்கு உதயகிரி எனப் பெருமை சேர்த்தார். பிரம்மா பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், என மூவுலகுக்கும் எட்டாத மேனியுடையவர். சூரியனும் மூவுலகுக்கும் மேலான பிரகாசமான ஒளியோடு விளங்குகின்றார். நாற்றிசைக்கும் நான்முகன் பெருமைசேர்க்க சூரியன் நாலா திசையிலும் ஒளிபரப்புகிறார். இவ்வாறாக பிரமனைப்போல் விளங்கும் சூரியன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் மறைந்தபிறகு நீர்நிலைகள், குளங்கள், தடாகங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நீராடிய பலன் கிடைக்காது. ஆதவன் அஸ்தமித்த பிறகு கடலில் நீராடினாலும்சரி, தேவகங்கையில் நீராடினாலும் சரி, பாவங்கள் போகாது. அனைத்து நீர் நிலைகளையும் புண்ணிய தீர்த்தமாக விளங்கச்செய்யும் பகலைத்தரும் சூரியன் நம்மைக் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகத்தில் கிழக்கு திசை, காலை வேளை ஆகியவை நன்மை பயப்பனவாகக் கருதப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை சூரியனின் ஆதிக்கத்திலிருப்பதுதான். ஒரு தீவுக்கு அல்லது கண்டத்திற்கு மாலை வேளையாகவும், இரவுக்காலமாகவும் விளங்குவது, எதிர்த் தீவில் விடியற்காலமாகவோ நண்பகலாகவொ விளங்கும். இப்படி உதயம், அஸ்தமனம், பகல், இரவு என்பவை மாறி, மாறி உண்டாகக் காரணமாக இருந்து காலச்சக்கரத்தை சுழலச் செய்யும் சூரியன் எக்காலத்திலும் நம்மைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஎட்டு வகையான சித்திகளைப் பெற்ற அருட்சித்தர்கள் வழிபடும் ஆதித்யனின் ஒளிக்கற்றைகள், அழியச்செய்யும் கொடிய பெரு நோய் உள்ளிட்ட எல்லாவித நோய்களையும் போக்கக் கூடியவை. உயிர்களின் துன்பத்தையும், பாபத்தையும் முற்றிலும் போக்க வல்லது. நோய் உள்ளவர்கள் தினம் பராயணம் செய்தால் சூரியபகவான் அருள்பெற்று நோயிலிருந்து விடுபடுவர்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியஒளி, கண்ணொளி யிலிருந்து மாறுபடுகிறது. தாமரை போன்றது கண். பரிதியின் ஒளியைப் பெற்று தாமரை பிரகாசிக்கும். ஆனால் சூரியஒளி, தாமரையின் ஓலியைத் தான்பெறாது, அந்த தாமரையின் ஒளியை மேலும் பிரகாசமாக்குகிறது. கண், கருவிழியால் பெருமை பெறுகிறது. ஆனால் சூரியனோ விண்ணின் கண்ணான விண்மீன்களின் ஒளியைப் பறித்து விடுகின்றது. கண் இமைத்தால் ஒரு நொடி. சூரியன் ஒரு நாளையே உருவாக்கிறது. இவ்வாறு கண்ணினும் சிறந்து விளங்கும் சூரியனின் ஒளி எங்கள் பாவத்தைப் போக்கட்டும். இதை தொடர்ந்து படிப்பதனால் கண் நோய்கள் நீங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலக நன்மைக்காக, மயூரகவியினால் செய்யப்பட்ட இந்த சூரிய சதகத்தின் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், அனைத்து பாவங்கள், பழிகளிலிருந்தும் விடுபடுவர். உடல்நலம், கவிபுனைதல், நல்லபுத்தி, ஆற்றல், ஒப்பற்றபலம், ஒளிமயமான வாழ்வு, நீண்ட ஆயுள், கல்வி, பொருள், நன்மக்கட்பேறு போன்ற சகல நலன்களையும் சூரியன் அருளால் பெறுவர் என்பது திண்ணம்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!
 

சூரியன் துதி!
 
o சூரியனால் தான் காலமும் நேரமும் பகுக்கப்படுகின்றன! ஐம்பூத இயக்கங்களுக்கும் மூலகாரணமாக விளங்குபவரே! சூரியனே! வேதங்களின் சாரமாகத் திகழ்பவரே! ஒளி பரவாத இடமே இல்லாதவரே! சூரிய ஒளியைக் கண்டதுமே பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், குடும்ப சோதனைகள் இவை மீதான பயம் விலகிவிடுகின்றது. உதய காலத்தில் பிரம்மா, மதிய காலத்தில் ஈசன், அஸ்தமன காலத்தில் திருமால் என மும்மூர்த்திகளின் வடிவங்களாகத் தோன்றும் சூரியனை நான் வணங்குகின்றேன்.
 
o செம்பருத்திப் பூ போல ஒளிர்பவரும், காஸ்யப பிரஜாபதியின் குமாரரும், மிகுந்த ஓளியினையுடையவரும், இருட்டின் எதிரியும், சகல பாவங்களையும் போக்குபவருமான திவாகரனை, பகலை உருவாக்கும் பகலவனை வணங்குகின்றேன்.
 
ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ! பாஸ்கராய நமஹ!
ரவியே நமஹ! தினகராய நமஹ!
திரைலோக்ய சூடாமணியே நமஹ! திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ! ஜோதிஸ்வரூபாய நமஹ!
அருணாயை நமஹ! வரத ஹஸ்தாய நமஹ!
சூரிய நாராயண சுவாமியே நமஹ!

 
o தாமரை மீது வீற்றிருக்கும் ஆதவனே, தேவர்களுக்கெல்லாம் முதன்மையான சூரிய பகவானே, பானுமூர்த்தி எனப் போற்றப்படும் தங்களை வணங்குகின்றேன். தர்மம், கருனை வடிவாகவும், அனைத்து தத்துவ வடிவினராகவும் ஒளிரும் தினகரனே, தங்களை வனங்குகின்றேன். க்ஷயம் எனும் காசநோய், அபஸ்மரம் எனும் வலிப்பு நோய், குன்மம் எனும் வயிற்று நோய் போன்ற கொடிய நோய்களையும், எல்லாவகை தோஷங்களையும் நீக்கி நலம் அளிக்கும் கதிரவனே உனக்கு எனது வணக்கங்கள். எனக்கு அருள் புரிவாய்!

 
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
விரியா போற்றி வினைகள் களைவாய்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக