தென்பாண்டிய நாடான திருநெல்வேலியில், வசுசேனன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சாந்திமதி என்பதாகும். செல்வச் செழிப்பு, நாடாலும் உரிமை என புகழ்பெற்று வாழ்ந்தாலும், இந்த தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத குறை இருந்து வந்தது.
அவர்கள் அந்தக் குறை நீங்குவதற்காக சிவபெருமானை தினமும் பூஜித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு முறை சிவபெருமானை பூஜித்த மன்னன், தாமிரபரணி என்ற குளத்தில் நீராடுவதற்காகச் சென்றான். அப்போது அந்த குளத்தில் ஒரு தாமரை மலர் இருந்தது. அந்த மலருக்குள், பார்வதிதேவியார் சங்கு வடிவில் இருந்தார். மன்னன் ஆர்வத்தின் மிகுதியால் அந்த சங்கை எடுத்தான். மறு கணமே சங்கானது அழகான பெண் குழந்தையாக மாறியது. மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தையை கையில் ஏந்தியபடி அரண்மனையை சென்றடைந்தான். அந்தக் குழந்தையை மனைவியிடம் காட்டினான். அவளும் குழந்தையின் முகத்தைப் பார்த்து தாய்மையின் உணர்வை அடைந்தாள்.
குழந்தைக்கு இராஜராஜேஸ்வரி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஒருமுறை சிவபெருமான் கட்டளைப்படி சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டி தேவி, இந்தக் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக அமர்ந்தாள். சாமுண்டீஸ்வரியால் வளர்க்கப்பட்ட இராஜராஜேஸ்வரி அம்மையார், சகல கலைகளையும் கற்று தேர்ந்தார்.
மேலும் சதுரங்க ஆட்டத்தில் தன்னை வெல்வார் எவருமில்லை என்ற வல்லமையுடன் சிறப்பாக திகழ்ந்தார். இதனால் வசுசேன மன்னன் தனது மகளை, சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பது என்ற உறுதியை எடுத்துக் கொண்டார். இதற்காக வசுசேனன் தனது மனைவி சாந்திமதி மற்றும் மகள் இராஜராஜேஸ்வரி ஆகியோருடன் திருத்தல யாத்திரை மேற்கொண்டான்.
ஒவ்வொரு ஆலயமாக தரிசனம் செய்து வரும்போது, வழியில் பூவனூர் என்ற இத்திருத்தலைத்தை வந்தடைந்தனர். அனைவரும் ஆலயத்தை தரிசனம் செய்து விட்டு அங்கேயே தங்கியிருந்தனர். அப்போது பூவனூர் பெருமான், ஒரு சித்தர் வேடம் பூண்டு இராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். இருவரின் ஆட்டமும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
இறுதியில் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமான் வெற்றிக் கனியைப் பறித்தார். இதையடுத்து இறைவன் தனது உண்மை வடிவுடன் அனைவருக்கும் காட்சி அருளினார். இந்தக் காட்சியை கண்ட மன்னன் பேரானந்தம் கொண்டான். தனது மகளை, திரு மணம் செய்து தேவியாக ஏற்றுக்கொள்ளும்படி இறைவனிடம் வேண்டினான். பூவனூர் பெருமானும் இராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அருள் புரிந்தார்.
சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும் 64 நாட்டிய நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக புலப்பித்த தலம்.
64 விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள் கொண்டு பஞ்சசக்திகளால் மகரிஷிகள் நவராத்திரி உற்சவத்தை கொண்டாடிய தலம். சுகபிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.
காசிக்கு இணையான தலங்களிலும் காசியின் பெயரை கொண்டுள்ள தலங்களிலும் காஸ்ய மாமுனிவர் தன் தவத்தின் ஊடே வந்து செல்வார் என்பது ஐதீகம்.
மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிராது (ப்ராத்தனை) சீட்டு கட்டி 90 நாட்களில் நன்மை பெறுகின்றனர். இது உண்மை.
இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகஸ்தியர் பிரானின் ஆசியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப்பெறுகின்றது.
இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.
காசித்தும்பை போன்று புஷ்பகாசி என்ற அரியமூலிகை புஷ்பம் இங்கு விளைந்த காரணத்தால் இத்தலத்திற்கு புஷ்பகாசி என்ற பெயரும் உண்டு.
புஷ்பகாசி தேவதைகள் புஷ்பங்களை பூவனூரில் இருந்து எடுத்து சென்றுள்ளன. எண்ணற்ற தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த பூவனூரில் அரிய மூலிகை புஷ்பகதிர்சக்தி நிறைந்துள்ளதால், ஒரு மண்டல காலம் தங்கி வழிபடுவதும், தீர்த்தங்களில் புனித நீராடுதலும், பிராணயாமம் ஆற்றுதலும், ஆழ்தலும், ஆழ்ந்து சுவாசித்தலும் சிறந்த யோக சக்திகளை, நல்வரங்களை தருவதாம். உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு ஐந்துமே மிகத்தூய்மை பெறும்.
இக்கோவிலில் அம்பிகை கற்பகவள்ளியோடு, இராஜராஜேஸ்வரியும் மற்றொரு தேவியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
இராஜராஜேஸ்வரியை சதுரங்க ஆட்டத்தில் இறைவன் வெற்றி கொண்டமையால், சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரை இத்தலத்தில் இறைவன் பெற்றுள்ளார்.
மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் கயிலாயத்தில் மங்களகிரி, புஷ்பகிரியில் உள்ளது போலவே இந்திராதி தேவர்கள் பூவனூரில் வடிவமைத்த அழகியதும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நறுமணப் புஷ்பச்செடி கொடிகளையும் 108 நந்தவனங்களை கொண்டிருந்தமையால் இத்தலத்தில்தான் முதன் முதலில் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் தோன்றினார்.
இத்தலத்தில் ஈஸ்வரன் தன் திருமணத்தில் நடனக்கோலத்தை அருளியமையால், சோமஸ்கந்தர் சன்னதி விளங்குவதற்கு இறைவனே மனமுவந்து அளித்துள்ள சங்கல்பவரம் காரணமாகும். இறைவன் திருவருளால் சோமஸ்கந்தர் சன்னதி முன்னால் அபூர்வமாய் ஒரு நந்தீஸ்வரர் காட்சி தருகின்றார். சோமஸ்கந்தர் சன்னதி முன் நந்தீஸ்வரர் அருள்வது மிக அபூர்வம். இந்த நந்தீஸ்வரர் தான் மங்கள புஷ்ப நந்தீஸ்வரரின் அம்சமாக மகரிஷிகளால் புலப்படுத்தப்பெற்றவர்.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.
வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது.
அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.
இறைவன் புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.
இறைவி கற்பகவல்லி, இராஜராஜேஸ்வரி.
தல மரம் பலா.
தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்.
‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம்.இத்தலத்தில் நந்திதேவர், தேவர்கள், சித்தர்கள், சிவ கணங்கள், முனிவர்கள் பலரும் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளனர்.
அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் (புஷ்பவன நாதர்) திருக்கோயில்
பூவனூர், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் - 612 803.
பூவனூர் (திருப்பூவனூர்), நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்
சுமார் 3 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.